734.
பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலையற
                                   நுழைமா
வலமொடுபடர் வனதகைவுற வுறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர்
                                  நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள
                                 வுளவே.
85

     (இ-ள்.) பலதுறைகளில்...........படர்வன - பல வழிகளினின்றும்
கட்டிய வலைகளறும்படி பயத்தோடு நுழைகின்ற விலங்குகள்
கல்வழியிற் செல்லமுற்பட்டவற்றை; தகைவுற........கவர்நாய் -
தடைப்படுமாறு பொருந்திய கோபத்தோடு பிடிக்கின்ற நாய்கள்;
நிலவிய விருவினை.........மனன் - பிறப்பிறப்புக்களிற் கட்டுகின்ற
இருவினையாகிய வலையினிடையிற் பட்டுத் தந்நிலை கலங்கிச்
சுழல்கின்றவர்களுடைய நன்னெறி சேர் மெய்யறிவிற் செல்லும்
மனத்தை; இடைதடை செய்த பொறிகளின் அளவு - (அவ்வாறு
செல்லவொட்டாது) இடையிலே தடைசெய்த ஐம்பொறிகளைப் போல;
உளவே - உள்ளனவாம்.

     (வி-ரை.) பயில்வலையற - உலகமொடு மா படர்வன -
தகைவுறக் கவர்நாய், இருவினை வலையிடை - சுழல்பவர் -
நெறிசேர் மனனை - இடைதடை செய்த பொறிகளின் அளவு - உள
என்று கொண்டு கூட்டிமுடிக்க.

     பல துறைகளின்..........நுழை - விலங்குகள்
பலவழிகளினின்றும் தப்பி ஓட முயன்றன; எங்கும் அவற்றுக்கும்
அபாயமே எதிர்ப்படப் பயந்து வலைகளை அறுத்துக்கொண்டு
வெளிப்பட வலைகளினூடே நுழைகின்ற. உலமொடு - ஒடு -
ஏழனுருபுப் பொருளில் வந்தது.

     தகைவுற - தடைபட - தகைதல் - தடுத்தல் - "யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத் தகைந்துதான் தரித்த தென்று" (363).
உறுசினம் - இயல்பானும் வேட்டை யிற்றப்பியோடும் விலங்கினைக்
கண்டபோது அதன்மேல் எழும் வேகத்தானும் உற்ற கோபம். கவர்
- கௌவிப் பற்றுகின்ற. மாவும், நாயும் - சாதியொருமைகள். நாய்
என்னும் எழுவாய் உளவே எனப் பன்மைவினை கொண்டது.

     நிலவிய இருவினை வலையிடை - நல்வினை தீவினை
யென்னும் இருவினைகளே உயிர்களைப் பிறப்பு
இறப்புக்களுக்குட்படுத்தி மீளமீள உலகில் வந்து போய்
நிலவச்செய்வன. "இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த விப்பிறவிக்
கொடுஞ்சூழல்" (மானக்கஞ் - புரா - 11) என்றது காண்க. தீவினை
பாவத்துக்கேதுவாகி நரகத்துன்பத்துட்படுத்தி மீளப்பிறவியிற்
செலுத்தும். அதுபோலவே நல்வினையும் புண்ணியத்துக்கேதுவாகிச்
சுவர்க்க முதலிய இன்பம் நுகர்வித்து மீளப்பிறவியிற் செலுத்தும்.
எனவே, இவையிரண்டும் பிறவிக்கேதுவாகிச் சுவர்க்க முதலியவற்றிற்
சுழல்வித்து உயிர்களைக் கட்டுக்குள் அகப்படுத்துவனவாதலின்
இருவினை வலையிடைநிலை சுழல்பவர் என்றார். "ஒருவனுக்கு
ஞானத்தைத் தடுத்துப் பந்த முறுத்துதற்கட் பொன்விலங்கும்
இருப்புவிலங்கும் போலத் தம்முட் சமப்படுத்துணரப்டுவனவாகிய
அறம்பாவ மிரண்டும்.............சரியை முதலிய தவங்களானேவாகிய
காமியங்களைப் பயப்பனவன்றித் தத்துவஞானத்தைப் பயவா"
எனவும், "அவை ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றித்
தீவினைபோல அது நிகழ வொட்டாது தடைசெய்து நிற்றலு
முடைமையின் அவற்றது கழிவே ஈண்டைக்குக் காரணமாவதென்பார்
இசைத்தவிரு வினையொப்பி லென்றுங் கூறினார்" எனவும்
சிவஞானபோதம் (8 - 1) "பசித்துண்டு" என்ற வெண்பாவின் கீழ்
எமது மாதவச்சிவஞான சுவாமிகள் உரைத்தருளியவை காண்க.
"இருள்சேரிருவினை" என்றார் திருவள்ளுவர். "அறம்பாவ மென்று
மருங்கயிற்றாற் கட்டி" என்று மணிவாசகப்பெருமானாரும்
ஒருங்குவைத்து இவற்றை வலை எனக் காட்டியிருத்தல் காண்க.

     நிலை சுழல்பவர் - நிலைகலங்கித் துன்பத்தினின்றும்
விடுதிபெறும் வழியறியாது பல புறமும் சுழல்கின்றவர்களுடைய
சுழல்பவரது மனன் என ஆறுனுருபு விரிக்க.

     நெறிசேர் புலனுறுமனன் - நெறி - நன்னெறி. செல்ல
வேண்டிய நெறி அதுவேயாதலின், இருவினை வலை என்று ஆங்கு
அடைமொழி தந்து குறித்த ஆசிரியர் ஈண்டு அடைமொழியின்றிக்
கூறினார். "நெறியைப் படைத்தார் னெருஞ்சில் படைத்தான், நெறியில்
வழுவி னெருஞ்சின்முட் பாயும்" என்ற திருமந்திரமுங் காண்க.
புலன்உறுமனன் - நல்வினை வசத்தால் நற்புலம் - மெய்யறிவு -
பெறும் மனம்.

     படர்வன என்ற உவமேயத்தினும், மனன் என்ற
உவமானத்தினும் ஒற்றுமையுற இரண்டனுருபு தொகவைத்த அழகு
காண்க. இடை - நெறி சேரும் இடையில் தடைசெய்த பொறிகள்
- அவ்வாறு மனன் நன்னெறியிற் போகாமற்றடுத்த ஐம்பொறிகள்.
அளவு - உவம உருபு. பொறிகளைப் போல நன்னெறி செல்லும் மனத்தைத் தடுத்த ஐம்பொறிகளைப் போன்றன நாய்கள்
என்றுவமித்தார்.

     நாய் பசையற்ற எறும்பைக் கறித்து, அதனால் தன் வாயில்
ஊறுபட்டு, அதனினின்றும் வரும் தன் இரத்தத்தைத், தன்கேட்டினை
எண்ணாது அவ்வெலும்பினின்றுங் கிடைத்த இன்பமாக எண்ணி
உண்டு மகிழும். உண்ணற்குரிய வேறு நற்பொருளிருக்க அவற்றை
உண்ணாது உண்ணத் தகாத மலத்தை உண்ணும்; தான் தின்று
கக்கிய சோற்றைத் தானே மீள உண்ணும். இதுபோலவே உயிர்களும்
பொறிகளால் வரும் கேடுதரும் அனுபவங்களை யின்பமென்று
மயங்கி யனுபவித்து மகிழ்வன; அனுபவத்திற்குரிய நல்ல
சிவானுபவம் உளதாகவும் உலகானுபவங்களாகிய மலங்களைச்
சுவைத்துக் கிடப்பன; அனுபவித்துக் கழிந்த மல அனுபவங்களை
மீளமீளத் தாமே அனுபவிப்பன. "உண்டதே உண்டு முடுத்ததே
யுடுத்து மடுத்தடுத் துரைத்ததே யுரைத்துங், கண்டதே கண்டுங்
கேட்டதே கேட்டுங் கழிந்தன கடவுநா ளெல்லாம்" என்பது
பட்டினத்தடிகள் திருப்பாட்டு, இக் கருத்துக்கள் பற்றி நாயேன்,
நாயனையேன் என்று பெரியோர் உவமிப்பது மரபு. இங்கு
நன்னெறியிற் புகாது தடுக்கு மளவிற்கு நாய்களை உவமித்தார்.

     வேடர்கள் சீறி யம்பு நூறி விலங்குகளைக் கொல்லும்
வேட்டை வினையை ஒருபாட்டாற் (728) கூறிய ஆசிரியர்,
அவ்வேட்டைவினையை வேட்டைக்காட்டின் வெளியே நின்று
காணுமொருவனது காட்சியாக வருவனவற்றை (729 - 734) ஆறு
பாட்டுக்களாற் கூறுகின்றார். அம்புபட்டுப் புலிவாயிற் சேர்ந்த
பன்றியைப் புலி கவர்வன போன்ற (729) தென்றதும், எய்யப்பட்ட
கலைகள் எதிரெதிர் பொருவன போல்வன (730) என்றதும்,
உலகநிலை உவமக்காட்சி. இரவொடு பகல் அணைவன என (731),
உழையைப் பணி தொடர் நிலைகொள (732), கடல் புனல்
கொளவரு முகிலென (733), என்றவை கவிநிலை உவமக்காட்சி.
இப்பாட்டில் நாய்கள் மனனிடை தடைசெய்த பொறிகளினளவுள
(734) என்றது ஞான நிலை உவமக்காட்சி. "நிருவிகற்பமாய்க்
காண்டலும், இரட்டுறக் காண்டலும், தெளியக் காண்டலும் எனக்
காட்சி மூவகைப்படும். இம்மூன்றும் அதி பக்குவ முடையார்க்குக்
கேட்ட மாத்திரையே ஒருங்கு நிகழுமாயினும் ஏனையோர்க்குக்
கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னுஞ் சோபான முறையானன்றி
நிகழாமையின்" என எமது மாதவச் சிவஞானசுவாமிகள்
சிவஞானபோதத் துரையிற் (9-ம் சூத்திரம்) கூறிய பொருளை இங்குச்
சிந்திக்க.

     குருதியும் கொலையுமே நிறைந்த வேட்டைக் காட்டினும்
இவ்வாறு ஞான மெய்ந் நெறிசேர் பொருளைக் கண்டு காட்டுதல்
ஆசிரியர்பெருமானது தெய்வமணக்குஞ் செய்யுளி னியல்பாமென்க.
"நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில், அலைப்பட்ட
ஆர்வமுதற் குற்றம்போலாயினார்" என்று போர்க்களத்திற்
காட்டியதும் இங்கு நினைவுகூர்க. 85