735.
|
துடியடியன
மடிசெவியன துறுகயமுனி தொடரார்;
வெடிபடவிரி சிறுகுருளைகண் மிசைபடுகொலை
விரவார்;
அடிதளர்வுறு கருவுடையன வணைவுறுபிணை
யலையார்;
கொடியனவெதிர் முடுகியுமுறு கொலைபுரிசிலை
மறவோர். 86 |
(இ-ள்.)
கொடியனவெதிர்.......மறவோர் - கொடிய
மிருகங்களை எதிராகச் சென்று எதிர்த்து ஓடியும் அவற்றை மிகவும்
கொலைசெய்கின்ற வில் வேடர்கள்; துடியடியன..........தொடரார் -
உடுக்கையையொத்த கால்களுடையனவும் மடிந்த
காதுகளையுடையனவும் ஆகிய நெருங்கி வருகின்ற
யானைக்கன்றுகளின்மேல் வேட்டைவினை தொடரமாட்டார்கள்;
வெடிபட...........விரவார் - ஓசைபட ஓடிக் குதிக்கும் சிறிய விலங்குக்
குட்டிகளின்மேல் படும் கொலையைச் செய்யார்; அடி
தளர்வுறு.......அலையார் - அடிதளர்வுறுதற் கேதுவாகிய
கருப்பந்தரித்தனவாய்த் தள்ளாடி நடந்துவரும் பெண்
விலங்குகளுக்குத் துன்பஞ் செய்யமாட்டார்கள்.
(வி-ரை.)
இப்பாட்டினால் வேட்டையின் நீதிமுறை எடுத்துக்
காட்டப்பட்டது. இஃது எல்லாப் போர் முறைகளுக்கும் ஒக்கும்.
பசுக்கள், அறவோர், சிறுவர், நோய் கொண்டோர், பெண்கள்,
புதல்வர்ப்பெறாதோர், படையெடாதோர் முதலியவர்களைப் போர்
தொடங்குமுன் பறைசாற்றி அவ்வவர் காப்பிடம் செல்லுமாறு
அறிவித்துப் பின் போர்தொடங்குதல் தமிழ் மக்களின் அறப்போர்
என்பது பழந் தமிழ் நூல்களிற் கண்டவுண்மை. இந்நாளில் மேனாடு
என்ற கீழாகிய ஐரோப்பிய நாட்டினும், சீனத்திலும், இந்நீதி முற்றும்
மறந்து, உணவின்பொருட்டுச் சிறிதும் இரக்கமின்றி வதைச்சாலையில்
ஆடுமாடுகள் வதைப்படுதல்போலப், போர்செய்யாக் குடிமக்கள்
பலரும் ஆயிரக்கணக்காய் வதைக்கப்படுதல் காண்கிறோம். இங்கு
ஆசிரியர் பெருங்கருணையினாலே உலக நலங்கருதி
எடுத்துக்காட்டிய இந்நீதிகளைப் போர்மட்டுமன்றி எல்லாத்
துறைகளிலும் தம் வலிமையே கருதிப் பிறர்பொருள் வௌவும்
வெறிபிடித்த இந்நாள்மாக்கள் உணர்ந்து ஒழுகுவாராயின் மிக
நன்மையுண்டாகும். கொல் எறி குத்து என்ற
சொற்களாலுணர்த்தப்படும் செயலும், வழியிற்போவாரை
அலைத்துண்பதும் முதலிய கொடுமைகளையே தமது
வாழ்க்கையாகக்கொண்ட, கல்வி வாசனையேயில்லாத, கொடிய
வேடர்களும் கொலைவேட்டையில் கொண்டொழுகிய இந்நீதிகள்
இந்நாள் உயர்ந்த நாகரிகர் என்று சொல்லும் மக்களும் மறந்து பல
துறைகளிலும் உலகை அலைத்தல் கொடுமையினும் கொடுமை!
பெண்விலங்குகளையும்
குட்டிகளையும் வேட்டையினும்
அலைக்காதுவிடும் கருத்துக் கருணையை அடியாகக் கொண்ட
நீதியாம். இஃது இறைவனது அருட்குணம். அவன் உயிர்க்குயிராய்
எங்கும் நிறைந்தவனாதலின் அது இக்கொடிய வேடர்க்குள்ளும்
காணப்பட்டு அவர்களையும் அறியாமல் வெளிப்பட நிகழ்வதாயிற்று.
தமது நீடித்த நலங் கருதியேனும் விலங்கின் சாதிமுற்றும் நாசமாகி
யொழியாதவண்ணங் காத்தல் என்னும் தந்நலம் இவர்களை
இவ்வொழுக்கத்தில் நிறுத்திய வெளிப்படையான காரணமாம்.
யானைகளின் பாதுகாப்புச் சட்டம், வேட்டை விலங்குகளின்
பாதுகாவற் சட்டம், விலங்குகளைக் கொடுமை செய்வதனைத்
தடுக்கும் சட்டம் முதலியனவாக இந்நாளிலும் அரசாங்கத்தார்
விதித்துள்ளவைகளும் இக்கருத்தே பற்றியன.(The
Elephants
Preservation Act; Games Preservation Act; Prevention of Cruelty to
Animals Act) இச்சட்டங்களினும் பெட்டைமான் முதலியவற்றைச்
சுடக்கூடாது என்னும் விதியுண்மையும் காண்க.
துடிஅடியன
மடிசெவியன துறுகயமுனி - வெடிபடவிரி
சிறுகுருளைகள் - அடி தளர்வுறு கருவுடையன என்றவை மிக
மேலாகிய தன்மைநவிற்சியணியாம். மடி செவி -
யானைக்காதுகள்
மெல்லியனவாய் அகன்று பரந்து தொங்குமியல்புடையன.
யானைக்கன்றின் காதுகளும் மிக மெல்லியனவாய் மடிந்து
தொங்குமியல்புடையன. களிற்றியானைநிரை எனும்
அகப்பாட்டுங்காண்க. துறு - யானையினம் கூட்டமாய்
வருமியல்பு
குறித்தது. கயமுனி - யானைக்கன்று. யானை
முதலாயெறும்பீ றாகிய
என்றபடி முதன்மைபற்றி யானைக்கன்றுகளை வேறு பிரித்து முதலில்
வைத்தார். ஏனைய விலங்கினங்களை யெல்லாம் ஒன்று சேர்த்துச்
சிறு குருளைகள் என உரைத்தார். "நற்குஞ்சரக் கன்றா"கிய
விநாயகப்பெருமானது முதன்மைபற்றிய நினைவுக்குறிப்புமாம்.
வெடிபட
இரி - வெடித்த ஓசையுண்டாக ஓடுகின்ற. இரிதல்
- ஓடுதல். இது சிறு குட்டிகளின் இயல்பு. இஃது எல்லாப்
பிராணிகளின் இளைமைக்கும் பொருந்துவதாம். இது பயமும்
துன்பமும் இன்னதென்றறியாத இளமையிற் காணும் ஆனந்தக்
குறிப்பு. "இளங்கன்று பயமறியாது" என்ற பழமொழியும் காண்க.
முருகு என்னும் சொல், என்றும் மாறா இளமையுடையயோனாகிய
முருகனை, ஆனந்த சொரூபனாகக் குதித்து விளையாடும்
உருவத்துடன் சோமாஸ் கந்தத் திருவுருவிற் காண்பதும் இக்கருத்தை
விளக்குவது. குருளை - விலங்கினத்தில் இளமைப்
பொதுப்பெயர்.
கரு
- கருப்பம். பிணை - விலங்கினத்தின்பெட்டைகளின்
பொதுப்பெயர். இங்குப் பிணை - பெண்மான்
என்றுரைகொள்வாருமுண்டு. அடிதளர்வுறு - கருப்ப
பாரந்
தாங்கியதனால் விசையில் நடக்கமுடியாமற் கால் தளர்ந்து சேர்கின்ற
அணைவுறும் - இவர்களிடம் அடைக்கலம் புகுவதுபோல அணைந்த
என்றதும் காண்க.
கொடியன
எதிர்முடுகியும் கொலைபுரி - கொடியவாகிய
விலங்குகளை எதிர்த்துச் செல்லும் கொல்கின்ற இவர்கள் இக்
கயமுனி, குருளை, பிணை என்றிவை இலகுவிற்கிட்டிய போதிலும்
கொலைசெய்யார் என்பது. எதிர்முடுகியும் -
அவை தம்முன்
விரைந்து சேர்ந்தபோதிலும் என்றுரைப்பதுமொன்று. உம்மை எச்சம்.
உறு
கொலைபுரி சிலைமறவோர் - கொலை புரிவதனையே
தம் இயல்பாகக் கொண்டோராயினும், கொலை புரிவதற்கே இங்கு
உற்றோராயினும், அது செய்தற்குரிய சிலையேந்தியோராயினும்,
அறமின்றி மறமே பூண்டாராயினும் என விரித்துக்கொள்க. 86
|