736.
|
இவ்வகைவரு
கொலைமறவினை யெதிர்நிகழ்வுழி
யதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை கானெழுவதொ ரேனம்
பெய்கருமுகி லெனவிடியொடு பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை யறநிமிர்வுற முடுகியகடு
விசையில்.
87 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறாக வருகின்ற கொலையாகிய
மறத்தொழிலுடைய வேட்டை எதிரே நிகழாநிற்கும்போது,
யானைகளும் அஞ்சும்படி நெருங்கிய காடும் அதிருமாறு
எழுவதாகிய ஓர் பன்றி இடிக்குரலோடும் மழை பெய்யும் கரியமுகில்
போல முழக்கம்செய்து பிதிர்ந்த கண்களினின்றும் கனல் உமிழ்ந்து,
மொய்த்த வலைகள் அறும்படி கிளம்பி மிகுந்த விசையோடு ஓடிற்று.
(வி-ரை)
கொலை மறவினை - கொலையாகிய மறவினை.
"அறவினை யாதெனிற் கொல்லாமை" என்பவாகலின்,
அதற்கெதிர்மறை மறவினையாயிற்று. கான்அதிர எழுவது
எனக்கூட்டுக. கைவரை - யானை. காடே குடியாக வாழும்
யானைகளும் அஞ்சும்படி மரச்செறிவுடைய காடு. இது காட்டின்
செறிவும் பெருமையும் உணர்த்தியது. "மந்தியு மறியா மரன்பயி
லடுக்கத்து" என்றதுபோலக் காண்க. மிடை
- அடர்ந்த. கான் -
காடு. கைவரைகளும் வெருவுற எழுவதொர் ஏனம் எனக்
கூட்டியுரைப்பாருமுண்டு.
பெய்கருமுகில்
- பெய் - மழை பெய்யும். சூல்கொண்ட
என்க. கருமுகில் - மழை பெய்யும் வெண்முகிலு
முளதாகலின்
அதினின்றும் பிரிக்கக் கருமுகில் என்றார். பிறிதினியைபு நீக்கிய
விசேடணம். வெண்முகில் மழை பெய்வதனை "ஒளிகொள்
வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளம்"
என்ற ஆளுடைய நம்பிகளது தேவாரத்தா னறிக.
இடியொடு
- இடி - உரும் எனக்கொண்டு பெய்கருமுகில்
எனவும், இடி - இடித்தல், முழக்கம் - எனக்கொண்டு இடியொடு
கனல் சிதறி எனவும் இரண்டிடத்துங் கூட்டியுரைக்க நின்றது. இடி
ஏனத்தின் உரப்புதலாகிய முழக்கத்துக்கும், கருமுகில் அதன்
நிறத்திற்கும் உவமம். வினையும் உருவும் பற்றிய உவமம். இது
இச்செய்கையினாற் றிண்ணனாரைக் காளத்திமலை சேரச்செய்து
உலகுக்கு அன்பு மழை உதவக் காரணமாயிற்றாதலின் பயன் பற்றிய
குறிப்புவமமுமாம்.
பிதிர்
விழி கனல் சிதறி - கோபத்தாலும் ஓடும்
வேகத்தாலும் கண் பிதிர்ந்து சிவந்து பொறிபறந்து. இதுபற்றி முன்
624 - லும் பிறவிடத்தும் உரைத்தவை பார்க்க. கண்பிதிர்தல் அதிக
கோபத்தால் தன்னிலைவிட்டு வெளிப்படத் தோன்றுதல். மேகங்கள்
நீர்சுமந்து கூரும்போது அவற்றில் தீயின்கூறு உடைய மின்னற்சத்தி
எதிரெதிர் கூர்ந்து தாக்கிக் கலக்கும். அப்போது பேரொளியும்
பேரொலியும் உடன்உண்டாவன. இவ்வாறு ஒரு காலத்தில் ஒரு
இடத்திற்றோன்றும் இரண்டில் பேர்ஒளி மின்னல் எனவும், பேர்
ஒலி இடி எனவும் பெயர் பெறும். ஆதலின் அக்குறிப்புப்பெற
இடியொடு - கனல் - சிதறி என்றார்.
மெய்வலைகள்
- "நீளிடைப் பிணித்து....காடு காவல்செய்"
தமைத்த வலைகள் (724).
மொய்த்தல்
- நெருங்குதல். ஒன்றோடொன்று நெருங்கப்
பிணித்துக் கட்டுதல்.
இறநிமிர்வுஉற
- அறும்படி மேற்கிளம்பி வலிந்து. மிக்க
கோபத்தோடு மேல்எழுந்து நிமிர்வுறுதலால் வலைகள் அறுபட்டு
வழிதர என்க. வலைகள் - ஐ - அசை.
கடு
விசையில் முடுகியது எனக் கூட்டுக. இம்மூன்று
சொற்களும் வேகங் குறிப்பன. மிகுதி பற்றி மூன்றும் புணர்த்துக்
கூறினார். முடுகிய - முடுகியது, விரைந்தோடிற்று.
அவ்விகுதி
தொக்கு நின்ற வினைமுற்று. இவ்வாறன்றி முடுகிய என்றதனைப்
பெயரெச்சமாகவே கொண்டு மிக்க விசையிற்போம் அது தனை
என வரும்பாட்டுடன் தொடர்ந்து பொருள்கொள்வாருமுண்டு. 87
|