737.
போமதுதனை யடுதிறலொடு பொருமறவர்க ளரியே
றாமவர்தொடர் வுறும்விசையுட னடிவழிசெலு மளவிற்
றாமொருவரு மறிகிலரவர் தனிதொடர்வுழி யதன்மேல்
ஏமுனையடு சிலைவிடலைக ளிருவர்களடி பிரியார்,
88

     737. (இ-ள்.) வெளிப்படை. போகின்ற அதனைக் கொல்லும்
வன்மையோடு பொருகின்ற வேடர்களுக்கு ஆண்சிங்கமாகிய
திண்ணனார் தொடர்ந்து பிடிக்கும் விசையோடு அது செல்லும்
அடியின் வழிபற்றிப் போகும்போது மற்றை வேடர்கள் தாம்
ஒருவருமறிந்திலராகத், தாம் தனியாகவே அதனைத் தொடர்ந்து
செல்லும்போது, அம்பினால் வேட்டைமுனையில் அடுகின்ற
வில்லையுடையவர்களாய் அத்திண்ணனாரை அடிபிரியாதவர்களாய்
உள்ள காளைப்பருவமுள்ள வேடர்கள் இருவர். 88

     737. (வி-ரை.) மறவர்கள் அரி ஏறு ஆம் அவர் -
திண்ணனார் மறவர்களின் தலைவர் என்றபடி. வயக்கோளரி
யேறன்ன (705) என்றது காண்க. விலங்குகட்கெல்லாம் தலைமை
பெற்று, அவசியம் நேர்ந்தவிடத்து எவ்விலங்கையும் கொல்லும்
வன்மையுடையது அரியாதலானும், இங்கு ஏனம் மிக்க வலியினும்
விசையினும் சென்றாலும் அதனை விடாது தொடர்ந்து கொல்கின்ற
தருணமாதலானும் அரியேறு என்றார்.

     தொடர்வுறும் விசையுடன் அடிவழி செலும் அளவில் -
அது செல்லும் விசையளவு விசையுடன் இவர் போகாவிடின் செறிந்த
கானில் அது முன்னர் ஓடி மறைந்துவிடும்; அதன் அடிவழியொட்டிச்
செல்லாவிடினும் மரச்செறிவில் அதனைக் காணுதல் இயலாது;
ஆதலின் விசையுடன் அடிவழி சென்றார். "இதன் பின் இன்று
காதங்கள் பலவந் தெய்த்தோம்" என்றபடி பல காதங்களினளவும்
கானி ஓடிச் செல்கின்றார்களாகலின் அதன் அருமை புலப்பட
இவ்வாறு கூறினார். அடுதிறலொடு செலுமளவில் என்று கூட்டுக.

     தாமொருவரும் அறிகிலர் - பொருமறவர்களில் ஒருவரும்
தம் தலைவர் சென்றதை அறிந்திலர். வேட்டைக்காட்டில் அவர்கள்
பலரும் பலவிடத்து வேறு வேறு விலங்குகளை வேட்டையாடும்
வினையில் முயன்றுநின்றா ராதலின் அறிந்திலர் என்பதாம்
அன்றியும் அவர்கள் பொருதற் றொழிலிலே அமைந்த
மறவர்களாய்நின் றொழிவார்களன்றி, அறவர்கள் நாயகமாய்ச்
சென்று இறைவரைக் கூடும் தமது தலைவரின் தன்மையை
அறிகில்லார் என்ற குறிப்புமாம். அவர்கள் இதற்குமுன்னும்
அவர் தங்களுடன் பதினாறாண்டு வாழ்ந்தும் பழகியும் அவரை
அறிகிலர். பின்னும் அறியகில்லார் (802). "என்னை ஒருவரு
மறியீராகில்" (211) என்று கிழவேதியராகி வந்த இறைவன் கூறிய
கருத்தும் இங்குக் குறிப்பிற்றொனிப்பது காண்க.

     தாமே அதனைத் தனி தொடர்வுழி அதன்மேல் -
தனித்துத் தொடரும்போது அதனை. அதன்மேல் - மேல் என்னும்
ஏழனுருபு இரண்டனுருபின் பொருளில் வந்தது. - அம்புகொண்டு.
முனை அடுசிலை - முனையில் அடும் சிலை. ஏவும் என்றது ஏம்
என விகாரப்பட்டுநின்றதென் றுரைப்பாருமுண்டு.

     இருவர்கள் அடிபிரியார் - இவரை அடிபிரியாது
பின்பற்றும் மெய்காவலாளர்கள் இவர்களும் அந்த ஏனத்தைக்
குறிவைத்துப் பின்றொடர்ந்து இவரைப் பிரியாதவர்களாய். ஏனை
மறவர்களறியார்களாயினும் இவ்விருவரும் அடிபிரியாராதலின்
அறிந்து அதன்மேற்சென்று அவரொடு கடிதில் கூடினர் என வரும்
பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. பிரியார் -
பிரியாதவர்களாகியுள்ளவர். வினையாலணையும் பெயர்.

     அரியேதாமவர் - என்பதும் பாடம். 88