1004. வெங்கட்களிற் றின்மிசை நின்று மிழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத் தேற்றி யொற்றைத்
திங்கட்குடைக் கீழுரி மைச்செயல் சூழ்ந்து செய்வார்,
 37

     1004. (இ-ள்.) வெளிப்படை. வெங்கண்ணுடைய
அரசயானையினின்றும் மூர்த்தியாரை இறக்கித், தேன் பொருந்திய
மலர்மாலைகளும், ஒளியுடைய மணி மாலைகளும் சூழ்ந்துள்ள
முடிசூடும் மண்டபத்தின் அழகிய தலத்திற்கொண்டு சேர்த்துச்
சிங்காதனத்தில் எழுந்தருளச் செய்து, ஒப்பற்றசந்திரவட்டக்
குடைக்கீழ் அரசுரிமைக்கு ஏற்றபடி முடி சூடுதற்குரிய
சடங்குகளை எண்ணிச் செய்வார்களாகி, 37

     1004. (வி-ரை.) வெங்கண்களிறு - வெம்மை - விருப்பம்.
மூர்த்தியாரை விரும்பிக்கண்டு தாழ்வுற்று எடுத்துப் பிடரிமேற்
கொண்டமையால் இவ்வாறுகூறினார். வெங்கண் - கோபக்கண்
என இயற்கையடையாகக் கொள்வாருமுண்டு.

     இழிச்சி - கீழே இறங்கச் செய்து. யானை எடுத்துத் தன்
பிடரியில் தரித்த செயல் இவரே அரசர் எனக் காட்டிய அளவில்
நின்றது. அரண்மனை சென்று அரசராக முடிசூடி யானைமேல்
நீண்மறுகிற் போதும் உலாவினைப்பின்னர் 1010ல்
"நீடுங்களிற்றின்மிசை" என்று கூறுவாராதலின், இங்கு அரசாங்க
முடிசூட யானையினின்றும் இறக்கினார்கள் என்க.

     வேரித் தொங்கல் சுடர்மாலைகள் சூழ்சாலை என்க.
சாலையினைப் (முடிசூடு மண்டபத்தைப்) பூமாலைகளாலும்
மணிமாலைகளாலும் அலங்கரித்தனர் என்பதாம். இழிச்சிக்
கொடுபுக்கு - ஏற்றிச் - செயல் - சூழ்ந்து செய்வார் - வேதியில் -
கலசங்கள் - குடங்கள் - யோகர் நிறுத்தினார்கள் என்று இந்த
இரண்டு பாட்டுக்களையும் கூட்டி முடிக்க.

     ஒற்றைத் திங்கள் குடை - தனித்த - தனக்கிணையில்லாத
- திங்கள்போலப் பரந்த, தண்ணிய - வெள்ளிய ஒளியுடைய குடை.
வெண்கொற்றக்குடை என்பர் உருவும் மெய்யும் பயனும்பற்றி வந்த
வுவமை.

     உரிமைச் செயல் - முடிசூட்டும் அபிடேகத்துக்குரியபடி
செய்யவேண்டிய சடங்குகள்.

     சூழ்தல் - எண்ணுதல்.