739.
|
குன்றியைநிகர்
முன்செறவெரி கொடுவிழியிடி குரனீள்
பன்றியுமடல் வன்றிறலொடு படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை சுலவியசெறி சூழற்
சென்றதனிடை நின்றதுவலி தெருமரமர நிரையில். 90 |
(இ-ள்.)
வெளிப்படை. குன்றிமணியைப் போன்றனவாய்
முன்னே பிதிர்ந்தனவாய்ச் செறும்படி எரிகின்றனவாய்க்
கொடியனவாகிய கண்களையும், இடி போன்று முழங்கும் குரலையும்
உடைய நீள்பன்றியும் மிக்க வலிய திறமையுடன் ஓடுகின்ற வழியிலே
நெடுந்தூரம் ஓடிப் பொருந்தியதொரு குன்றினடியில் மலையிற்
சுற்றுவிக்குமொரு சூழலிலே போய் மேலும் செல்ல வலியிழந்து
அங்குள்ள மரக்கூட்டத்தினிடை நின்றது.
(வி-ரை.)
குன்றியை....விழி - குன்றி - குன்றிமணி.
உருண்டு பசந்த சிவப்பினிடையிற் கரியகண்மணி பிதிர்ந்து
தோன்றலாற் குன்றிமணியை ஒத்ததென்றார். மெய்யும் உருவும்பற்றி
வந்த உவமம். சினத்தாற் சிவந்த கண்ணொடு சென்றதாதலின் செற
எரி கொடு விழி என்றார். குன்றியை நிகர்விழி, எரிவிழி,
கொடுவிழி என அடை மூன்றும் விழியோடிசையும். முன்னரும்
கனல்விழி சிதறி (736) என்றார். முன்செற
என்றது கண் பிதிர்ந்த
நிலை குறித்தது. நெடுந்தூரம் ஓடியதனால் பின்னரும் பிதிர்ந்து
சிவந்ததாம். இடிகுரல் - அச்சம் சினம்
முதலியவற்றாலலைப்
புண்டபோது பெருங்குரலால் உரப்பிக்கொண்டே போதல்
பன்றியினியல்பாம். இதுபற்றியே முன்னரும் கருமுகில் இடிகுரல்
(736) என்றது காண்க.
நீள்பன்றி
- நீண்ட உடலுடைய என்க. இவ்வளவும் நீண்ட
தூரம் ஓடிய என்றலுமாம்.
அடல்
வன் திறலொடு - அடல் - வன் (மை) - திறல் -
மூன்றும் வலிமைப் பொருள்பற்றிய ஒரு பொருட்பன்மொழி; மிகுதி
குறித்து நின்றன.
படர்நெறி
நெடிது ஓடி - பலகாதங்கள் (741) செறிகானில்
மிக்க விசையில் ஓடி - இத்தனை தூரமும் இவர்களைத் தப்பித்
தன்னுயிர் காக்க ஓடிய திறனுடையமையால் அடல் வன்றிறல் என
விதந்து ஓதினார்.
துன்றியது
ஒரு குன்று அடி - அங்குப் பொருந்தியதாகிய
ஒரு குன்றின் அடியில். குன்று - பெருமலைச்சரியில் கிளைத்த
சிறுமலை. வரை சுலவிய செறி சூழல் - மலையில்
சார்ந்தாரை
மீள அறியாது சுழலவைக்கின்ற வழியுடைய ஒரு அடர்ந்த
சோலையில்.
வலிதெருமர
- மேலும் ஓடுதற்கு ஏற்ற உடல் வலியில்
இளைத்தலால். நின்றதற்குக் காரணங் கூறியபடி. தெருமர
மரநிரையில் நின்றது என மாற்றுக. தெருமரல் - இளைத்தல் -
எய்த்தல். மரநிரை - மரச்செறிவில். நின்றது - மேல் ஓட மாட்டாது
நின்றது. நெறிசூழல் எனவும், வழிதெருமர எனவும் பாடங்கொண்டு
மேற்செல்ல வழி சுழல என்றுரைப்பாருமுண்டு. காட்டில் வாழும்
பன்றி முதலியவை செல்ல வழியின்றி நிற்றல் இயல்பன்றாதலானும்,
சுலவு சூழல் என்றதனால் சுற்றிச் சுழல்விக்கும் வழியுடையதென்பது
பெறப்படுதலின் மேலும் நெறி என்றும் வழிதெருமர என்றும் கூற
வேண்டாமையானும், சுழலிடை அதன் நிலையறிபவர் என
வரும்பாட்டிற் கூறுதலானும் அவை பாடமன்றென்பது. 90
|