740.
அத்தருவளர் சுழலிடையடை யதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை முனைபெறவெதி
                                   ருருவிக்
குத்தினருடன் முறிபடவெறி குலமறவர்க டலைவர்.
91

     (இ-ள்.) வெளிப்படை. கொலைச்செயல் பூண்ட
மறக்குலத்தவர்களின் தலைவராகிய திண்ணனார் அந்த மரங்கள்
வளர்ந்த சூழலினிடையில் அப்பன்றியின் நிலையினை முன்
அறிந்தவராய்த் தமது கையிற்றெரிந்து எய்யும் அம்புகளினால்
எய்துகொல்ல எண்ணாதவராய் வேகத்தால் அதனை அணுகி
நேர்போர் பெறுமாறு மொய்த்து எழுகின்ற ஒளிவிடும் உடைவாளை
எதிரில் உருவி அதனுடல் துண்டம்படுமாறு குத்தினர்.

     (வி-ரை.) அத்தருவளர் சுழல் - மேற்பாட்டில் சுலவிய
செறிசூழல்
என உரைத்த அந்தச் சோலை. சுழல் - மரங்களாற்
சூழப்பட்ட இடம். சுழல் - சூழல் என்றாயிற்று.

     அதன்நிலை முன் அறிபவர் - எனமாற்றுக. அது நிற்கு
நிலையை முன்னர் அறிந்தவராதலின். அறிந்தவர் என்பது அறிபவர்
என இயல்பாகக் காலம்மயங்கி வந்தது. முன் - இவ்வாறு தப்பி
ஓடிய பிராணிகள் பின்னர் ஓடாது நிற்குநிலையை முன்பழக்கத்தாலும்
இப்போது அப்பன்றியின்பின் நெடுந்தூரம் ஓடிவந்த முன்
அனுபவத்தாலும். நிலை - மனநிலையும் உடல் நிலையும்.

     கைத்தெரி கணையினி லடுவது கருதலர் - தேர்ந்து
எடுத்த அம்பினால் எய்து கொல்ல நினைத்தாரிலர். தனக்குக் கேடு
வருவதனை அறிந்த பிராணிகள் முதலில் உயிர்க்குத் தப்பி ஓடும்;
அஃதியலாதபோது எதிர்த்துப் பாய்ந்து தனக்குக் கேடு சூழுமதனை
அடர்த்துத் தப்ப முயலும். இஃது பிராணிகளி னியற்கை. இதனை
முன்னர் அறிவாராதலின் அப்பன்றி எதிர்த்துத் தம்மேற் பாய நின்ற
நிலையில் அதனை நேர்முகமாகக் கிட்டி மற்போர் செய்வார்போலச்
சுரிகையாற் குத்துவதன்றித் தூரத்திலிருந்து அம்பு எய்வது வீரத்துக்
கிழுக்காம் என்றெண்ணியதனாற் கணையினில் அடுவது
கருதாராயினர் என்பதாம். கைக்கணை - தெரிகணை எனக்
கூட்டுக. கணையினில் - இல் - மூன்றனுருபின் கருவிப்பொருளில்
வந்தது.

     சுரிகை - சுடர்விடும் என்ற அடைமொழி வேட்டை
வினைக்காகக் கூர்மைப்படுத்திய நிலை குறித்தது. சுரிகை
அணுக்கப்போரிலும், வில், அம்பு சேய்மைப் போரிலும்
பயன்படுவன. இது பற்றியே வேட்டைக்கு வருவார் இதனையும்
தாங்கி வந்தனர். 710 பார்க்க. இச்சுரிகை இவர் தந்தை
நாகன்பாற்பெற்ற அரச அடையாளமுமாம். எவ்விலங்கையும்
அணுகிப் பிளந்து வெல்வது விலங்கினரசாகிய சிங்கத்தின் தன்மை.
அதுபோல அரச இலக்கணம் பெற விசையிற்கடுகிச் சுரிகையாற்
குத்தினர் என்றார். "அரியேறாமவர்" (737) என்றது காண்க.

     முனைபெற - நேர்முகப் போர்நிலையினைப் பெறுமாறு.
எதிர்
- எதிர்முகமாய் நின்று. உடல்முறிபடக் குத்தினர்
எனக்கூட்டுக. குத்தும் செயல் முன்னரும் அதன் விளைவாகிய
உடல் முறிபடும் செயல் பின்னரும் நிகழ்வனவாதலின் அந்நிகழ்ச்சி
முறையில் வைத்தார்.

     எறி மறவர் என்க. எறிதல் (கொல்லுதல்) இவர்
வாழ்க்கைத்திறம். "குற்றமே குணமா வாழ்வான்" - "கொல் எறி
குத்தென்றார்த்துக் குழுமிய வோசை" (654) என்றவை காண்க.
எறிதல் தூரத்தினின்று எறியும் அம்பு முதலிய படையினா
னிகழ்த்துவது. எறிமறவர் என்றதனால் ஏனைவேடர்
பெரும்பாலும் விலங்குகளை அணுகாது தூரத்திருந்து எறியும்
செயலுடையார் என்ற குறிப்பும், தலைவர் என்றதனால் அவர்கள்
போலல்லாது இவர் வீரத்துடன் அணுகி எதிர்நின்று சுரிகையாற்
குத்தினர் என்ற குறிப்பும் காண்க. 730 பார்க்க. 91