741.
|
வேடர்தங்
கரிய செங்கண் வில்லியார் விசையிற்
குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு
நாணன்
"காடனே! யிதன்பின் னின்று காதங்கள் பலவந் தெய்த்தோம்;
ஆடவன் கொன்றா னச்சோ!" வென்றவ ரடியிற் றாழ்ந்தார்.
92 |
(இ-ள்.)
வெளிப்படை. வேடர் தலைவராகிய கரியமேனியும்
செங்கண்ணுமுடைய திண்ணனார் விசையிற் குத்தியதனாலே
பக்கத்தில் இரண்டு துண்டமாய் விழுந்தபன்றியை நாணன் கண்டு,
"காடனே! இன்று இதன் பின்னே பலகாதங்கள் வந்து களைத்தோம்.
ஆண்மகனாகிய இவர் கொன்றார். அச்சோ"! என்று கூறி இருவரும்
அவரடியிலே வணங்கினார்கள்.
(வி-ரை.)
வேடர்தம்.....வில்லியார் - சிலைவேடர்
என்றபடி. வேடர் எல்லாரும் வில் ஏந்தியவர்களேயாயினும்
அவர்க்குள் இவர்க்கே வில்லின் தலைமை பொருந்தியதென்பதாம்.
வில்லியார் - வில்லவர்க்குள் எல்லாம்
மிக்க வில்லவராகிய
தலைவர் என்ற பொருளில் வந்தது. வில்லுக்கு விசயன் என்றபடி
முற்பிறப்பிலே வில்வித்தையிற் றலைவராய் நின்றதும் குறிப்பு.
வில்லியார் தனிவேட்டை (783) என்றும், மேலும் பலவாறு இவர்
வில் ஏந்தியதனை விதந்து ஓதுதல் காண்க. "வரிந்த வெஞ்சிலைக்கு
மண்மதித்த வீரனே" என்றார் வில்லிபுத்தூரரும். (13-ம் நாள் போர்)
வில்லியார்
விசையிற் குத்த - தமக்கு அதனால் எவ்விதக்
கெடுதியும் நேராதபடி தூரமிருந்து எய்து கொல்லக்கூடிய வில்லும் -
அம்பும் இருக்கவும் வீரத்தாற்போர் அறங் கருதி அணுகச் சென்று
சுரிகையாற் குத்த என மேற்பாட்டின் கருத்தை அனுவதித்துக்
கூறியது அதனைப் பாராட்டி வற்புறுத்தற் பொருட்டு.
நாணன்
- அவரது அடிபிரியாத மெய்காவலர்களாகிய
இருவருள் நாணன் அவர்பால் அணுக்கத்தொண்டும் துணிச்சலுங்
கொண்டவன் ஆதலின் அவன் இவ்வாறு கூறுகின்றான். சரிதப்
பின்னிகழ்ச்சியில் காடன் முகலியாற்றங் கரையில் தீக்கடையவும்
பன்றியை வதக்கிப் பாதுகாக்கவும் உள்ள தாழ்ந்த பணியாளனாய்
நிற்க, நாணன் திண்ணனார்க்கு முன்சென்று காளத்திமலைமேல்
வழிகாட்டவும், உபதேசமொழிகள் போன்ற பலவற்றையும்
சொல்லவும், இறைவன்பாற் கூட்டிச் சேர்க்கவும் உயர்பணியின்
றுணையாயினன் என்பதும் காண்க.
இன்று
காதங்கள் பல வந்து எய்த்தோம் - பல -
இரண்டுக்கு மேற்பட்டவை. "நல்லற நூல்களிற் சொல்லறம் பல; சில,
இல்லறந் துறவற மெனச்சிறந்தனவே" என்புழிச் சில, என்பது
இரண்டையும், பல என்பது இரண்டின் மிக்க எண்ணையும்
உணர்த்திநிற்றல் காண்க. வடமொழியில் ஒன்று இரண்டு - அதன்
மேற்பட்டவை எனக் குறிக்க ஒருமை - இருமை - பன்மை என
வகுப்பர். இது சிறுபான்மை தமிழிலும் வழங்கும் . காதம் -
பத்து நாழிகை யளவு கொண்டது. எனவே இங்குத் திண்ணனாரும்
வேடர்களிருவரும் பன்றிப்பின் மூன்று காதங்களுக்குக் (30 நாழிகை
தூரத்துக்குக்) குறையாமல் ஓடி வந்துள்ளார் என்று ஊகிக்கலாம்.
விடலைகளாகிய இவர்கள் பின்வந்து எய்த்தோம் என்றதனாலும்
இவர்கள் நெடுந்தூரம் ஓடிவந்து பின்பற்றித் தொடரமாட்டாது
இளைத்தமை துணியப்படும்.
ஆடவன்
கொன்றான் அச்சோ! - விடலைகளாகிய
அவ்விருவரும் எய்த்துப் பின்வரவும், இவர் சிறிதும் இளைக்காது
முன்னே விசையிற் கடுகிச்சென்று பன்றியைக்குத்தி வீழ்த்தினது
இவரது வீரமும் உடல் வலிமையும் குறித்தது. இதனாலே
அவ்விடலைகளிருவரும் அற்புதமுற்று "முன் பலமுறை வேட்டையிற்
பழகிய நாம் எய்த்துப் பின்னடைந்தோம். ஆனால் முதல் வேட்டை
(கன்னி வேட்டை)யில் வந்த இவர் முன்சென்று கொன்றார்! இவரே
ஆடவர்!" என்று போற்றி வணங்கினர் என்க. ஆடவன் -
ஆண்தன்மை மிக்கவன். அடியிற்றாழ்ந்தார் -
வியந்து போற்றும்
முறை. அச்சோ - ஆச்சரியச்சொல். 92
|