742.
மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார்
                               "வழிவந் தாற்ற
வுற்றது பசிவந் தெம்மை யுதவிய விதனைக் காய்ச்சிச்
சற்றுநீ யருந்தி யாமுந் தின்றுதண் ணீர்குடித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோ மெல்ல"
                                வென்றார்.
93

     (இ-ள்.) வெளிப்படை. மேலும் அவர்கள் திண்ணனாரை
நோக்கிச் சொல்கின்றவர்களாய், "வழிநடந்து வந்ததனாலே மிகப்
பசிவந்து எம்மைப் பொருந்தியது; (ஆதலின்) உதவிய இப்பன்றியைக்
காய்ச்சி நீ சிறிது அருந்தி, நாங்களும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றிகொள்ளும் வேட்டைக்காட்டை மெல்லச் சென்று
அடைவோம்" என்று சொன்னார்கள்.

     (வி-ரை.) மற்று - அங்ஙனம் வியந்து கூறியதனை விடுத்து
மேலும். மற்று - வினைமாற்றுப் பொருளில் வந்தது. அவர் -
அவ்விருவரும். மற்றவர் என ஒரு சொல்லாகக் கொண்டு
உரைப்பாருமுண்டு. மொழிகின்றார் - சொல்வாராகி, முற்றெச்சம்.
மேற்பாட்டில் நாணன் ஒருவன் பேசினான். இங்கு இருவரும்
சொன்னார்கள் என்க.

     வழிவந்து - வழியின்கண் வருதலால் ஏழனுருபுதொக்கது.
வந்து - வினையெச்சத்திரிபு; காரணப் பொருள் தந்தது.

     ஆற்ற பசிவந்து எம்மை உற்றது - எனக் கூட்டுக. ஆற்ற
மிகுதியாய். உதவிய - கைக்குக் கிட்டியதாகிய. நீ கொன்று தந்த
என்றலுமாம். இதனை - இப்பன்றியினை. காய்ச்சி - தீயில் வதக்கி.
வதக்கிப் பக்குவப்படுத்தும் முறை 767-774-795 முதலிய
பாட்டுக்களில் விரித்திருத்தல் காண்க.

     சற்று நீ அருந்தி யாமும் தின்று - சுவைக் கலப்புக்குரிய
உயர்ந்த மான் முதலாகிய வேறு ஊனும் தேனும் பிறவும் ஈங்கு
இல்லையாக, இது தாழ்ந்த பன்றியிறைச்சியொன்றே யாதலானும்,
இவர் இளமை, வீரம் முதலிய திண்மைபடைத்தமையால்
தம்மைப்போல் எய்ப்பில்லாது நின்றாராதலின் உணவு வேட்கை
அதிகமிலர் என்றமையாலும் பிறவாற்றாலும் இப்பன்றி யிறைச்சியை
இவர் மிக உண்ணார் என்று கருதி, நீ - சற்று - அருந்தி
என்றும், யாம் அவ்வாறன்றி வயிறு நிறைய
இவ்வோரிறைச்சியினையே மிகுதியும் தின்போம் என்ற குறிப்புப்
பெற யாமும் தின்று என்றும் கூறியவற்றின் நயமும் சொல்லாற்றலும்
பொருட் செறிவும் காண்க. நீ - நீயும் - உம்மை தொக்கது. யாமும்
- எச்சவும்மை. அருந்தல் - பொதுவினை. தின்னல் - நால்வகை
உண்டிகளில் ஒன்று. இரண்டும் உணவு உட்கொள்ளுதல் என்று
பொருள்பட்டுச், சுவை பார்த்து அளவுபடச் சிறிது உண்ணுதலுக்கு
அருந்தல் என்றும், அளவுபடாது மிகுதிபடப் பெருந்தீனியாய்
உண்ணுதலுக்குத் தின்னுதல் என்றும் வழங்கும். தலைவர்
உண்டபின் பணியாளர் உண்ணும்முறை குறித்ததும் காண்க.
உயர்ந்தோரை அருந்துக என்பதும், தாழ்ந்தோரைத் தின்க என்பதும்
வழக்கு.

     தண்ணீர் குடித்து - உற்றபசி என்று பசியைமட்டும்
கூறினாரேனும் அதனோடு உடன்வருவதாகிய தாகமும் இனம்பற்றி
அறிந்துகொள்ளப்படுமாதலின் தாகம் உற்றது என்று சொல்லாமலே
தண்ணீர்குடித்து என்றனர். "வைகிருளின் புலர்காலை" (705)யில்
வேட்டைக்காட்டுக்குப் போந்த இவர்கள் "கதிரவனுச்சி நண்ண"
(750) உள்ள இதுநேரம்வரை வேட்டைவினை முயன்றும், ஓடியும்
கடுங்கானிற் கடுவெயிலில் அலைந்தனராதலின் பெரும்பசியோடு
கடுந்தாகமுங் கொண்டனர் என்க.

     வெற்றிகொள் வேட்டைக்காடு - மீதூர்கின்ற
விலங்கினங்களை மாற்றார்களாக வைத்து வேட்டையைப் போர்
என்றும், வேடர்களைச் சேனை என்றும் கூறியதற்கேற்ப
வெற்றிகொள் என்றார். வெற்றி - விலங்கினம் எவையும்
இவர்களது குறியினிற்றப்பாது மடிதலும், அவை ஒன்றும் இவர்க்கு
எவ்வகை ஊறுஞ்செய்ய வலியிலா தொழிதலும், மொய்வலைகளை
அறுத்து நெடிதோடிய இப்பன்றியும் துணிக்கப்படுதலும்
ஆகியவற்றால் இக்கன்னி வேட்டை வெற்றிகரமாக நிகழ்ந்தமை
குறித்தது.

     வேட்டைக்காடு - இவர்கள் வேட்டைக்காக வளைத்துச்
சூழல்செய்த பரப்புடைய காடு. 721-722-723-725 பார்க்க.

     குறுகுவோம் மெல்ல - களைப்பின் மிகுதியானும்,
உண்டபின் கடியநடை கூடாமையானும், வேட்டைவினை வெற்றி
பெற்று முடிந்தமையானும் இவ்வாறு கூறினார். முன்னர் ஓடிவந்த
கடியவேகத்தில் செல்லுதல் இனி அவசியமில்லை என்றபடி.
அவர்களது இளைப்பும் மனவெழுச்சியின்மையும் விரைவின்மையும்
குறிப்பார். மெல்லக்குறுகுவோம் என்னாது குறுகுவோம் மெல்ல
என்று மாற்றிக் கூறினார். 93