743.
என்றவர் கூற நோக்கித், திண்ணனார் "தண்ணீ
                                   ரெங்கே
நன்றுமிவ் வனத்தி லுள்ள?" தென்றுரை செய்ய,
                                   நாணன்
"நின்றவிப் பெரிய தேக்கி னப்புறஞ் சென்றா னீண்ட
குன்றினுக் கயலே யோடுங் குளிர்ந்த பொன்முகலி"
                              யென்றான்.
94

     (இ-ள்.) வெளிப்படை. அவர்கள் இவ்வாறு சொல்லத்,
திண்ணனார் அவர்களை நோக்கி "இவ்வனத்தினுள்ளேயும் தண்ணீர்
எங்கே நன்று உள்ளது?" என்றுகேட்க, "முன்னேநின்ற இந்தத்
தேக்கமரச் சோலையைக் கடந்துசென்றால் அங்கே நீண்ட குன்றின்
பக்கத்திற் குளிர்ந்த பொன்முகலியாறு ஓடும்" என்று நாணன்
சொன்னான்.

     (வி-ரை.) நோக்கி - அவர்கள் சொல்லியதை ஊன்றி
எண்ணி என்றலுமாம்.

     தண்ணீர் இவ்வனத்திலும் எங்கே நன்று உள்ளது என
உம்மைபிரித்துக் கூட்டி யுரைத்துக்கொள்க. நீரில்லாத
இக்கானகத்துள்ளும் குடிக்கத்தக்கதாய் நீர் நன்று காணவுள்ள
தெங்கே என்றபடி. நன்று - காட்டுநீர்கள் பெரும்பாலும் -
குடிக்கத்தகாதவையாயும் நோய் செய்வனவாயும் உள்ளன என்றது
கருதி இவ்வாறு கேட்டார். உம்மை பலகாதமும் இக்காட்டிற்
காணப்படாத நீரின் அருமை குறித்தது. இவ்வனம் என்றதில்
இகரச்சுட்டும் நாம் கண்டுபோந்த இந்த என அக்கருத்தே பற்றியது.
நன்றும்
- அப்படியே செய்வோம் என்றுரைப்பாரும், உம் அசை
எனக் கொண்டு நன்று தண்ணீர் எனக் கூட்டி யுரைப்பாரும், நன்று
பெரிதென்றுரைப்பாரும் உண்டு. உரைசெய்ய - வினவ என்ற
பொருளில் வந்தது.

     நாணன் - இருவரையும் நோக்கிக்கேட்ட வினாவுக்கு,
அவருள் நாணன் விடை சொன்னான். இவ்விருவருள் இவனே
அறிவும் மிக்க அனுபவமும் படைத்தவன்; காளத்திகாண நீபோதின்
நல்ல காட்சியே காணும் (745) என்று திண்ணனாரது அன்பையும்
ஆர்வத்தையும் வளர்த்தவன். அவர் காளத்தியேறி இறைவனைக்
கண்டு அணைந்து பற்றிக்கொள்ளுந்தனையும் இவனே
வழிகாட்டியாகவும் உற்றதுரைக்கும் உறுதுணையாகவும் நின்றவன்.
மலையேறிய உச்சிநேரத்திற் கேட்ட ஐந்துதுந்துபி ஒசையை இது
என்ன என்று கேட்ட திண்ணனார்க்கு "இம்மலைப் பெருந்தேன்
சூழ்ந்து மதுமல ரீக்கள் மொய்த்து மருங்கெழு மொலிகொல்" (750)
என்றனன். இங்கு இறைவர் திருமேனியிற் கண்ட பூவுநீரும் ஒரு
பார்ப்பான் செய்த பூசைச்செயல் என்று தான் முன்னாள் கண்டு
அறிந்த அறிவுகொண்டு பூசைமுறையினை இவன் உணர்த்தியதனால்
நாயனார்க்கு இனிய செய்கை இவைகொலாம் என்று கடைப்பிடித்து
அவர் அரியபூசை யியற்றத் துணைக்காரணமாயிருந்தவன் (757-758).
தம்சார்பை விட்டொழிந்த இவரது நிலையை "வங்கினைப் பற்றிப்
போகா வல்லுடும்பு என்ன" என்று (765) உள்ளவாறு காடனுக்குச்
சொல்லும் திறத்தால் இவனது அறிவின்றிறம் உணரப்படும்.
நாகனுக்கும் வேட்டையில் ஏவலாளனாகி உற்ற துணைவனாய்
அவனோடு காளத்திக்குவந்தவன் இவனேயாம் என்றதனால் இவனது
தொடர்பும் முதிர்ந்த அனுபவமும் வயதும் அறியப்படும். 741-ல்
உரைத்தவையும் மேல்வருவனவும் காண்க.

     நின்ற இப்பெரிய தேக்கின் அப்புறம் - இகரச்சுட்டு
முன்னால் அணிமையில் காணப்பட்ட நிலைகுறித்தது. நின்ற -
முருடு, விளைவு முதலியன இன்றி நேராக நீண்டுவளரும்
தேக்கின்றன்மையும், பெரிய - அவற்றின் பருத்த அரையும்
குறித்தன. தேக்கு - தேக்கமரச் சோலைக்கு ஆகுபெயர்.
முகலியாற்றின் கரையருகினில் தேக்கஞ் சோலைகள் மிகுதியாம்
என்பது "சந்தமா ரகிலொடு சாதிதேக்கம்மர, முந்துமா முகலியின்
கரையினில்" என்று ஆளுடைய பிள்ளையார் இதனைத்
தெரியக்காட்டியருளியமை யானுமறியப்படும். அப்புறம் -
தேக்கினுக்கு இப்புறம் இவர்களும், அதற்கப்புறத்தே
காளத்திமலையும் ஆக இடையில் பெரிய தேக்கு நின்றதென்பதாம்.
நின்ற - குன்றையும் முகலியையும் மறைத்துத் தடையாய் நின்ற
என்ற குறிப்புமாம்.

     நீண்டகுன்று - தொடர்ச்சியாய் நீண்ட மலைவரிசையில்
உள்ளதொரு குன்று என்பதாம். இடைவிட்டுவிட்டு நீண்டு செல்லும்
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்று திருக்காளத்திமலை.
"குலவரை பார்ப்பாய கயிலை" (திருவலஞ்சுழி - 8 - பிள்ளையார்).

     குன்றினுக்கயலே குளிர்ந்த பொன்முகலி ஓடும் என்க.
இளைப்பும் பசியும் நீர் வேட்கையும் போக்கிக்
குளிர்ச்சிசெய்யவல்லதென்ற குறிப்புப் பெறக் குளிர்ந்த என்ற
அடைமொழிதந்து கூறினான். அதனை மனத்தால் எண்ணி
வாக்கினாற் சொல்லியபோதே குளிர்ச்சியைச்செய்ததென்ற குறிப்பாற்
குளிர்ந்த என இறந்த காலத்தாற் சொன்னான். பொன்முகலி -
இது வடமொழியிற் சொர்ணமுகி என வழங்கப்படும். தேவாரங்களில்
முகலி
என ஆளப்பட்டுள்ளது. பொன்மையோடு ஒலியுமுடைமையின்
இப்பேர்பெற்றது. முகரம் - ஒலி; முகரி - ஒலியுடையது. பேதமின்றி
ரகரம் லகரமாயும் வருமாதலின் முகரி முகலி என வந்தது.
"பொன்மையோடு, கலியுடை மையிற் பேர் பொன்மு கலியென
வுரைத்துப் போனான்" (பொன்முகரிச்சருக்கம் - 58) என்ற
சீகாளத்திப் புராணங் காண்க. பிறவி வெப்பமும் போக்குவது
ன்றதுங் குறிப்பு.

     இப்பாட்டாற் றீர்த்தவிசேடங் கூறப்பட்டது. 94