745.
"நாணனே! தோன்றுங் குன்றி னண்ணுவோ"
                          மென்ன, நாணன்,
"காணநீ போதி னல்ல காட்சியே காணு; மிந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து
                                செவ்வே
கோணமில் குடுமித் தேவ ரிருப்பர்; கும் பிடலா"
                             மென்றான்.
96

     (இ-ள்.) வெளிப்படை. "நாணணே! முன்னே தோன்றும்
குன்றின்கண் சேர்வோம்" என்று திண்ணனார் சொல்ல, நாணன், "நீ
அங்கே காணப் போவாயாகில் நல்ல காட்சியே காணப்படும்;
சேணில் உயரும் இந்தத் திருக்காளத்திமலையின்மேல் எழுந்து
செம்மைபெறக் கோணமில்லையாகச் செய்யும் குடுமித்தேவர்
இருப்பார்; நாம் கும்பிடலாம்" என்று சொன்னான்.

     (வி-ரை.) தோன்றும் குன்றில் - முதலிற் கண்ணுக்குப்
புலப்பட்டது குன்றின் உயர்ந்த சிகரமாதலின் அது அவர் கருத்தைக்
கவர்ந்தது.

     காண .... காணும் - நீ காணப்போதின் என்க.
காண்பதற்கென்று நீ போவாயானால். இவ்வகையிடங்களுக்குப்
போதுவார் பலரும் போய்வந்த மட்டில் அமைவரே யன்றி
அங்குள்ள சிறப்புக்களைக் காணாமலே வருவர் என்பது கண்கூடு.
ஆதலின், நண்ணுவோம் என்று தன் தலைவன் கூற அவ்வாணைக்
குட்பட்டு உடன்படும் நாணன், அவ்வாறு நீ காணும்பொருட்டே
செல்வாயனால், ஏனையோர் போலல்லாது நீ காணும் சிறப்பு
இன்னதென்று கூறுவானாகி, அது நல்ல காட்சியே என
அறிவுறுத்துகின்றான். அக்காட்சி இன்னதாம் என மேலும்
வற்புறுத்திக் கூறுகின்றான் "குன்றின் நண்ணுவோம்; அதனைக்
காணல்வேண்டும்; காண்பது நல்ல காட்சி; அஃது இதுவாம்"
என்றவாறு. இக்குன்றவர் கடவுட்காட்சியில் வைத்தகருத்துப்
பாராட்டத்தக்கது.

     காணநீபோதின் என்று நாணன் உரைத்தவாறு உண்மையில்
நாயனார் காண்பதற்கே அங்குப்போகின்றார். ஏனையோர்
போலல்லாது, "ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற்
கண்டுகொண்டே நேர்பெற நோக்கி நின்றார்" (777) என்பது
காண்க.

     நல்ல காட்சியே காணும் - காட்சி - காணப்படுவது.
காணும் - காணப்படும். படு விகுதிதொக்கது. இவர்காணும் காட்சி
இறைவனது அருட்டிருநோக்கம் பெற்று அவன் காட்டக்காணும்
காட்சியாதலின் நல்ல காட்சியே என்றார். ஏகாரம் பிரிநிலை.
தோற்றமுமாம். நல்லகாட்சியாவது அகம்புறமாகிய கரணங்களால்
எதனைக் காணவேண்டுமென்று நூல்கள் விதிக்கின்றனவோ
அதனையே காணுதல். "கண்காள் காண்மின்களோ - கடல் -
நஞ்சுண்ட கண்டன்றனை, யெண்டோள் வீசிநின் றாடும்
பிரான்றனைக் (கண்காள்)" என்றது தமிழ்மறை. "காணுங் கண்ணாற்
காண்பது மெய்த்தொண்டே" - (தண்டி - புரா - 2).

     இந்த .... கும்பிடலாம் - நல்லகாட்சி இதுவாமென்று
நாணன் கூறியது. சேண்உயர் - வானில் உயர்ந்துவிளங்கும்.
ஏழனுருபு தொக்கது. உயர்ந்து தோன்றியதனால் முன்னர்த்
"தோன்றும் குன்று" என்றார். அவ்வாறு திண்ணனார் "தோன்றும்
குன்று" என்ற அதன் பெயரை அவருக்கு அறிவுறுத்துவான் இந்த
என்று கையாற்சுட்டிக் காட்டித் திருக்காளத்திமலை என்று
வாயினாற் பேர் கூறினான். "பெரிய தேக்கி னப்புறஞ் சென்றால்
நீண்ட, குன்று" (743) என்று நாணன்கூறக் கேள்விமாத்திரத்தாலறிந்த
நாயனார், இங்கு அதனைக்கண்ணுக்குப் புலப்படக் கண்டறிந்தபோது
அவன் சொல்லியபடியே "தோன்றும் குன்று" என்று பேர்குறியாது
கூறியது காண்க.

     மலைமிசைஎழுந்து செவ்வே - மலையினின்றும் வேரூன்றி
முளைத்ததுபோல மேல் எழுந்து செம்மைபெற. கோணம்இல் -
கோணத்தை இல்லையாகச்செய்யும். கோணம் - குற்றம். இது கோண்
- கோணைஎனவும் வழங்கும். "யான்செய்தேன்
பிறர்செய்தாரென்னதியா னென்னுமிக் கோணை"
(சிவஞானசித்தியார் - 10, சூத்திரம் - 2).

     குடுமித்தேவர் - குடுமி - உச்சி. மலையின்
உச்சியிலிருப்பவர். தலையின்மேல் உச்சியிலிருப்பதால்
தலைமயிர்க்கற்றை, குடுமி எனப்படும். கானவர் காளத்தியப்பரை
இப்பெயராலறிந்து கும்பிட்டனர் என்க. வேதங்களுள் முடிவினிற்பது
அதர்வணமாம். அதன் சிரம் அதர்வசிரசு எனப்படும். அதன்
சிகையாயுள்ள அதர்வசிகை "ஏனையவற்றை யெல்லாங்
கைவிட்டுமங்களஞ்செய்பவனாகிய சிவன் ஒருவனே
தியானிக்கற்பாலன். அதர்வசிகை முடிந்தது" என்று
முடிபுகூறுகின்றது. அவ்வுச்சியில் முடிந்தமுடிபாய் விளங்குபவன்
இவ்விறைவன் என்பதும் குறிப்பாம். உபநிடதத்துச்சியில் விளங்கும்
போதக்காட்சி என்னும் வழக்குங்காண்க.

     நாணன் மேலே 743-ல் சொல்லியவை "குன்றினுக் கயலே
யோடும் குளிர்ந்த பொன் முகலி" என்றது இவரை வழிப்படுத்திய
முதல்உபதேச மொழி; இப்பாட்டிற் கூறியன இரண்டாவது உபதேச
மொழிகளாம்.

     மேலிருபாட்டிலும் முறையே தீர்த்த விசேடமும் தலவிசேடமும்
கூறப்பட்டது போல இப்பாட்டால் மூர்த்திவிசேடம் கூறப்பட்டது
காண்க. 96