746.
"ஆவதென்? னிதனைக் கண்டிங் கணைதொறு
                          மென்மேற் பாரம்
போவதொன் றுளது போலு; மாசையும் பொங்கி
                              மேன்மேன்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா
                                 நிற்கும்;
தேவரங் கிருப்ப தெங்கே? போ" தென்றார் திண்ண

                                 னார்தாம். 97

     (இ-ள்.) வெளிப்படை. "இவ்வாறு ஆவது என்னை?
இம்மலையைக்கண்டு இவ்விடத்தே அணுகிச் செல்லுந்தோறும்
என்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம் உளதாகின்றது;
ஆசையும்பொங்கி மேலும்மேலும் பொருந்திய நெஞ்சமும் வேறொரு
விருப்பம் கொண்டதாக விரைந்துசெல்லாநிற்கும்; அங்கே தேவரது
இருப்பிடம் எங்குள்ளது? போவாயாக" என்று திண்ணனார் கூறினார்.

     (வி-ரை.) கண்டுஇங்கு அணைதொறும் - மேற்பாட்டிற்
கூறியபடி பேசிக் கொண்டு இருவரும் மலையைநோக்கி நடந்து
செல்கின்றார்களாதலின் இவ்வாறு கூறினார்.

     போவது போலும் உளது என்று கூட்டுக. அடிபெயர்த்து
வைக்குந்தோறும் அவ்வளவிற்குச் சிறிதுசிறிதாய் என்பாரம்
குறைவதுபோன்ற அனுபவம் நிகழ்கின்றது. போலும் -
போல்வதாகிய. பெயரெச்சம். ஒவ்வொன்றாய்க் குறையும்
அளவுக்குறிக்க உளது ஒன்று போவது என்றும், அணைதொறும்
என்றும் கூறினார்.

     ஆசையும் பொங்கி - தோன்றும் குன்றில் நண்ணுவோம்
என்று முன்னர் எழுந்த ஆசையும் என வும்மை இறந்ததுதழுவியது.
அவ்வாறெழுந்த ஆசை அடங்காது மேலும் மேலும் பொங்கி
வளர்ந்தது என்க.

     நெஞ்சும் - விரையாநிற்கும் - மனவேகம் என்றபடி உடல்
அணைவதன் முன்னே நெஞ்சு மிக விரைகின்றது. நெஞ்சும் -
எச்சவும்மை. வேறுஓர் விருப்புஉற - விருப்பு - விருப்பமும். உற
- மிக. உம்மைதொக்கது. காணவேண்டுமென்னும் ஆசையேயன்றி
இன்ன தென்றறியப்படாத மற்றோர் விருப்பமும்.
இன்னதென்றுணரவாராமையின் வேறுஓர் என்றார். இது
முன்னைப்பிறவியின் றொடர்ச்சிபற்றி இவருள்ளத்தில் எழுந்தது.
"முந்தை யறிவின் றொடர்ச்சியினால் முகைத்த மலரின் வாசம்போற்,
சிந்தை மலர உடன்மலருஞ் செவ்வி யுணர்வு" என்ற
சண்டீசநாயனார் புராணமும், "ஒருமைக்கட் டான்கற்ற கல்வி
யொருவற், கெழுமையு மேமாப் புடைத்து" என்ற திருக்குறளும்
இக்கருத்தை விளக்குவன. "முன்பு செய் தவத்தி னீட்டம்" என்று
பின்னர்க் கூறுவதும் காண்க. தோன்றுங் குன்றி னண்ணுவோம்
என்று முன்னர் எழுந்த ஆசை இவராற் காரணமறியப்பட்டதும்
இங்கு உறும் வேறு ஓர் விருப்பம் காரணமறியப்படாததும் ஆம்.
விளையாநிற்கும் என்பது பாடமாயின் ஆசைபொங்கி மேவிய
நெஞ்சினுள் அவ்வாசையினையன்றி வேறு ஒரு விருப்பமும் மிக
விளைகின்றது என இக்கருத்துக்கேற்ப உரைத்துக் கொள்க;
விளைதல் - சிறிதாய்த் தோன்றி வளர்தல்.

     தேவர் - நாணன் சொல்லியதனால் இவர் அறிந்த
குடுமித்தேவர். அங்குத் தேவர் எங்கே இருப்பது? என்க. எங்கே
- மலையில் அவர் இருப்பதாகக் குறித்த இடம் எது? என்றபடி.
அங்கு - அக்குன்றில் - சேணுயர்மலையில். போது - போவாயாக.

     தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணுற்றாறுத் தன்னின்
வேறாகக்கண்டு கடந்த நிலையில் உடல்முதலிய கருவிகரணங்கள்
பாரமாகக்காணப்பட்டுக் கழல்வனவாம். அதுவரை
அவற்றிற்பற்றுண்டு அவற்றைச் சுமைஎன்றுணராது சுக மென்றும்,
அவற்றையே தான் என்றும் கண்டு, சுமந்து திரிந்த உயிர் இப்போது
சுமை என்று அறிந்தது. பெரும்பாரம் சுமந்திளைத்தவன் அது
குறையக்குறையக் களிப்பது போல, இந்நிலையடைந்த உயிரும்
களிப்படையும். இப்பாரம் குறையக் குறைய இறைவனை அணையும்
ஆசையும் மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒற்றித்து நின்று
அறிவிழந்த உயிர் அதன்கண் உவர்ப்படைந்து விட்டுப் பின்னர்
மெய்ஞ்ஞானத் தாணுவினோடு ஒற்றித்து நிற்கத் தலைப்படும்.

"துருத்தியாங் குரம்பை தன்னிற் றொண்ணூற்றங் கறுவர்
                                         நின்று
 விருத்திதான் றருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
 வருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
 வருத்தியார்க் கன்பர் போலு மதிகைவீ ரட்டனாரே" (4)

என்ற திருநேரிசைக்கருத்தையும் காண்க. இவ்விளைவின்றன்மை
இப்பாட்டிற் றிண்ணனார் தம் அனுபவநிலையைக் கூறும்வகையாற்
குறிக்கப்பட்டது. இது 96 பாட்டுக்களையுங் கடந்த மேல் 97-வது
திருப்பாட்டாக அமைந்த தெய்விக அமைப்பும் காண்க.
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையை அடையும்போது
இத்தன்மைத்தானதொரு நிலையை அடைந்தனர் என்ற வரலாறுங்
காண்க. 97