748.
ஆங்கதன் கரையின் பாங்கோ ரணிநிழற் கேழலிட்டு
வாங்குவிற் காடன் றன்னை மரக்கடை தீக்கோல்
                                     பண்ணி
"யீங்குநீ நெருப்புக் காண்பா யிம்மலை யேறிக் கண்டு
நாங்கள்வந் தணைவோ" மென்று நாணனுந் தாமும்
                             போந்தார்.
99

     (இ-ள்.) வெளிப்படை. அங்கு அவ்வாற்றின் கரையின்
பக்கத்தில் ஒரு அமைதியான மரநிழலிலே பன்றியின் உடலை
யிடுவித்து வளைந்த வில்லேந்திய காடனை நோக்கித் திண்ணனார்
"மரத்தினால் தீக்கடைகோல் செய்து இங்கு நீ நெருப்பு
உண்டாக்குவாயாக; இந்த மலையில்ஏறி நாங்கள் கண்டுவந்து
சேருவோம்" என்று சொல்லி நாணனும் தாமும் சென்றார்கள்.

     (வி-ரை.) அணிநிழல் - அணி - அழகு. இங்கு அமைதி
குறித்தது. நிழல் - ஆற்றின் கரையினிற் சோலையிலுள்ள மரநிழல்.
"மந்தமார் பொழிவளர்" என்ற தேவாரமுங் காண்க. இறந்த
பன்றியின் உடலை வெயிலில் இட்டுவைத்தால் ஊன் விரைவிற்
கெட்டுவிடும். ஆதலின் அதனை இடத்தக்க நிழல் வேண்டும்.
தீக்கடைந்து காணவும், தீவளர்த்து ஊனை வதக்குதற்கும் காற்று
மிகுதியில்லாத அமைதியான இடம்வேண்டும். ஆதலின்
இவ்வமைதிகள் பெற்ற மரநிழல் என்பார் அணிநிழல் என்றார்.

     மரத் தீக்கடைகோல் என மாற்றுக. தீக்கடைகோல்
பண்ணுதல்
- கடைந்து நெருப்பு உண்டாக்குதற்குத் தக்கபடி
காய்ந்தமைந்த மரக்கட்டையை நேர்செய்தல், "அக்கினியின் கூறு
அதிகமாயிருக்கின்ற மரத்தின்கொம்பைத் தீக்கடை கோலாகச்
செய்து" என்பர் மகாலிங்கையர். இதனை அரணி என்பது வடமொழி.
"விறகிற்றீயினன்..முருக வாங்கிக்கடைய" என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரமும், "காட்டாக்கிற்றோன்றி" என்ற சிவஞானபோதம்
ஒன்பதாஞ் சூத்திர உதாரணவெண்பாவும் அதற்குக், கோலைநட்டுக்
கயிற்றினாற் சுற்றிக் கடையவே காட்டத்தினின்று அங்கி
தோன்றுமாறுபோல என்ற வுரையுங் காண்க. மரத்தில் தீ
மறைந்துள்ளதென்றும், விரையக் கடைதலால் அது
வெளிப்படுமென்றும் உள்ள தத்துவஞானம் இவ்வேடர்கள் காட்சி
யளவையாலறிந்த உண்மையாம். இதனை இவர்கள் தமக்கு
வேண்டியபோது தீ உண்டாக்கப் பயன்படுத்திக் கொள்வார்.
யாகங்களில் அரணியில் தீக்கடைந்து எடுத்தல் மரபு. "அரணி
தந்தசுட ராகுதி தோறும்" (247). நெருப்புப்பெட்டி தீப்பெட்டி -
(Match box) இல்லாவிடின் உயிர்வாழ முடியாதபடி தாழ்ந்து விட்ட
நிலையில் உள்ள இந்நாள் "நாகரிக" உலகர், தேவையான
சிறுபொருளையும் தமக்குத்தாமே உதவி செய்துகொள்ள
இயலாதவாறு பரதந்திரப்பட்ட தமது அபாய நிலையை
உணர்ந்துகொள்வார்களானால் அவ்வுணர்ச்சி நற்பயன்றருவதாம்.

     நெருப்புக் காண்பாய் - நெருப்பை உண்டாக்குவாய்.
உள்ளே மறைந்து நின்ற பொருளாகிய தீயை வெளிப்படச்
செய்வாய்.

     கண்டு - "நல்ல காட்சியே காணும்" (745) என்றபடி
அக்காட்சிகண்டு. விறகில் மறைந்த நெருப்பை நீ கோலாற்கடைந்து
காண்பாய். முன்னைப்பிறவியில் "வஞ்சமனத் தஞ்சொடுக்கி
வைகலுநற் பூசனையால், நஞ்சமுது செய்தருளு நம்பி யெனவே
நினைந்து"ம், "உறவுகோல்நட்டு உணர்வுகயிற்றினால் முறுக வாங்கிக்
கடைந்" தும் நான் தியானித்துத் தவஞ்செய்து கண்டபொருள்
இப்பிறவியில் இதுவரை மறைந்துநின்றது; அதனை இம்மலைமேல்
ஏறி, வெளிப்படக் காண்பேன் என்றதொரு குறிப்பும் காண்க.

     நாணனும் தாமும் - பின்வரக்கடவனாகிய நாணன் வழிகாட்டி
முன்செல்வதால் (752) நாணனும் எனை முன்வைத்துக் கூறினார். 99