750.
கதிரவ னுச்சி நண்ணக் கடவுண்மால் வரையி னுச்சி
யதிர்தரு மோசை யைந்து மார்கலி முழக்கங் காட்ட,
"விதுவென்கொ? னாணா?" வென்றார்க்
                 கிம்மலைப்பெருந்தேன் சூழ்ந்து
மதுமல ரீக்கண் மொய்த்து மருங்கெழு மொலிகொ"
                              லென்றான்.
  101

     (இ-ள்.) கதிரவன் உச்சிநண்ண - ஞாயிறு வானவீதியின்
உச்சிசேர; கடவுள்....காட்ட - தெய்வத்தன்மையுடைய பெரிய
அம்மலையின் உச்சியில் அதிர்கின்ற ஐந்து தேவதுந்துபி ஓசைகளும்
கடல் முழக்கம்போல முழங்க; "இது...என்றார்க்கு "நாணனே இது
என்கொல்!" என்று கேட்ட திண்ணனாருக்கு; "இம்மலை ...
ஒலிகொல்" என்றான் - "இம்மலையின் பெருந்தேனைச்
சூழ்ந்துகொண்டு தேன் பொருந்திய மலர்களிலிருந்து வரும்
தேனீக்கள் மொய்த்துப் பின்பு பக்கங்களிலே மீள எழுகின்றதனால்
உளதாகிய ஒலிபோலும்" என்று நாணன் கூறினான்.

     (வி-ரை.) கதிரவன் உச்சிநண்ண - பகலில் உச்சிப்போதாக.
கதிரவன்
- ஞாயிறு - சூரியன். அவனது கதிர்களே கதிர்எனத்
தக்கன என்பது. உச்சி - மேலிடம். இங்கு வானவீதியின் முகட்டைக்
குறித்தது. உருண்ட நில உலகமாகிய அண்டம் தன்னையும்
சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும். இவ்வாறு சுற்றிவரும்
வட்டம் வானவீதி எனப்படும். "சென்றுருளும் கதிரிரண்டும் விசும்பில்
வைத்தார்" என்ற அப்பர்சுவாமிகள் திருத்தாண்டகத்தில்
இவ்வண்டங்களுக்குச் செல்லுதல் உருளுதல் ஆகிய இரண்டு
சுழற்சிகள் உள்ளநிலை குறித்தது காண்க. நிலஉலக அண்டம்
தன்னைச் சுற்றிய சுழற்சி ஒருநாள். அதனிற் சூரியனுக்கு
எதிர்ப்படும்பாதி பகல் எனப்படும். அதனிற் பாதியில் ஞாயிறு
உச்சியிற் காணப்படுவன். இந்நேரமே நிலத்தில் அவ்விடத்துக்கு
உச்சியாம். இதனை உலக வழக்கில் ஞாயிற்றின்மேலேற்றி அவன்
உச்சிசேர என வழங்கப்படும். இதுபற்றியே ஆசிரியரும் இங்குக்
கதிரவனுச்சி நண்ண என்றார். "உச்சம் போதாலூரூர் திரிய" என்ற
ஆளுடையநம்பிகள் (திருக்கச்சூராலக்கோயில்) தேவாரமும்,
"கடும்பகற் போது" என அதனை விரித்துரைத்த ஏயர்கோன்
கலிக்காமநாயனார் புராணமும் (178) காண்க. இது பற்றி முன்
685-ல் உரைத்தவை பார்க்க.

     கடவுள் மால் வரையின் உச்சி - கடவுள் - இங்குத்
தெய்வத்தன்மை குறித்தது. இத்தன்மைத்தாதலினன்றே இம்மலை
தன் காட்சியளவின் இவர்பால் உலக ஆசை போக்கி வேறு
ஆசையும் விருப்பும்பொங்க விளைவித்தது. (745-746). மால் -
பெரிய. கடவுள் வரை - கடவுள் எழுந்தருளியிருக்கும்மலை
என்றலுமாம். உச்சி - இங்கு மலையின் மேலிடம் - முகடுகுறித்தது.
மால் - மயக்கம் எனக்கொண்டு கடவுளிடத்து மால்விளைக்கும்
மலை என்றலுமாம். "தேவுமால்" (769) என்றது காண்க.

     1ஓசை ஐந்து - தேவதுந்துபி என்னும் தேவவாத்திய ஓசை
விசேடங்கள் ஐந்து. இவை தேவர்கள் இம்மலைமேல் வந்து
இறைவனை உச்சிப்போதில் வழிபடும்போது முழக்குபவை. இது
தென்கயிலையாதலின் கயிலையிற்போலவே இங்கும் பிரமன் முதலிய
தேவர்கள் வந்து வழிபடுவர். இவ்வரலாறுகள் சீகாளத்திப்புராண
முதலியவற்றுட் காண்க. இங்கு ஓசை ஐந்து என்பன ஹிருஸ்வம்,
தீர்க்கம் முதலாகிய உச்சரிக்கும்வகை ஐந்து என்று கூறுவாருமுண்டு.
ஆர்கலி முழக்கம்காட்ட - கடல் முழக்கம் போல முழங்க.

     கயிலையில் தேவர்கள்வந்து வழிபடும் உண்மை "மேன்மை
நான்மறை நாதமும் விஞ்சையர், காண வீணையி னோசையும்" (14),
"பனிவிசும்பி லமரர் பணிந்துசூழ், அனித கோடி யணிமுடி
மாலையும்" (15) என்ற திருப்பாட்டுக்களாலறிக. காளத்திமலை
திருக்கயிலையேயாம் என்பது முன்னர் "திருமலை" (744) என்ற
விடத்து உரைத்தவற்றானறிக.

     "இது என்கொல் நாணா!" என்றார்க்கு - நாணா!
இதுஎன்? என்ற திண்ணனார்க்கு. வினையாலணையும் பெயர்.
தேவதுந்துபி கேட்ட திண்ணனார் தாம் முன் கேட்டறியாத அது
இன்னதென்றறியவாராமையின் ஐயமுற்று இது என்கொல்? என
வினவுகின்றார். கொல் - ஐயப்பொருள் தரும் இடைச்சொல்.
"கொல்லே ஐயம்" (தொல் - இடை - 20) . நாணனும் இவ்வாறே
"ஒலிகொல்" என ஐயப்பட விடைகூறுவதும் காண்க. பாசவுலகம்
திண்ணனாரைவிடுகின்றதும், வீட்டுலகம் தொடுகின்றதுமாகிய
நிலைஇது. உலகத்தொடர்புணர்ச்சியுடன் திண்ணனார் உலகினரை
விளித்துப் பேசிய இறுதிப் பேச்சு இதுவேயாம். இதன்பின்னர்ச்
சின்னேரத்தில் இறைவனருட் பார்வையால் அன்புருவமேயாகித்
தம்மையும் மறந்த நிலைபெறுகின்றாராதலின் (753) உலகினருடன்
பேச்சொழிந்தது என்க. (757-ல் கேட்டது ஒருவரையும் விளிக்காது
தாமாகப் பேசியதாம்.)

     இம்மலைப் பெருந்தேன்............ஒலிகொல்! - இவர்
கேட்டதுபோலத் தேவதுந்துபி கேட்கப்பெறும்
புண்ணியவசமில்லாதவன் நாணன். அவன் எந்த ஓசையும்
கேட்டானல்லன். ஆதலின் ஒலிகொல் என்று ஐயத்தாற் கூறினான்.
பெருந்தேன் ஓசைகளை அவன்முன் கேட்டறிந்த பழக்கத்தால்
திண்ணனார் கேட்டு வினவிய ஓசையும் அதுவாகத்தா னிருத்தல்
வேண்டும் என்று கருதி விடை கூறினான். முன்னர் "நல்ல
காட்சியே காணும்", "கோணமில் குடுமித்தேவர் இருப்பர்
கும்பிடலாம்" என்று கூறியபடி இங்கும் அவனை யறியாமலே,
உண்மை, அவன் வாக்கில் வெளிப்பட்டுத் திண்ணனாரை மேலும்
இறைவனிடத்தில் ஈடுபடுத்திச் செலுத்தியது. இது அவன் கூறிய
மூன்றாவது உபதேச மொழியாயிற்று. என்னை? இம்மலைப்
பெருந்தேன் சூழ்ந்து
- இம்மலையில் எழுந்தருளிய பெரிய இன்ப
வடிவாகிய இறைவனைச் சூழ்ந்துகொண்டு; மதுமலர் ஈக்கள் -
இறைவனை நாடியணையும் சிந்தையுடைய பக்குவான்மாக்கள்;
மொய்த்து மருங்கு எழும் ஒலி - நெருங்கி வாழ்த்தித் துதிக்கும்
ஒலி; என்ற உண்மைப்பொருள்பட நிற்பதும் காண்க. இறைவனைப்
பெருந்தேனாகப் பாராட்டினர் பெரியோர். "அந்த இடைமருதி
லானந்தத் தேனிருந்த, பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ"
என்ற திருவாசகமும், "புகழ் மாமருதிற் பெருந்தேன்
முகந்துகொண்டுண்டு" என்ற திருவிடைமருதூர் மும்மணிக்
கோவையும் (3) முதலிய திருவாக்குக்கள் காண்க. 242-ம் பாட்டின்
கீழ் உரைத்தவையும் காண்க.

     பெருந்தேன் சூழ்ந்து - ஒவ்வோர் தேன்கூட்டிலும்
தலைமையான இராணி ஈ என்னும் பெருவண்டு ஒன்று உண்டு
என்றும், அதன் ஆணைப்படியே அந்தக் கூட்டினைச் சூழ்ந்து
வாழும் எல்லா ஈக்களும் கூடிய சமூக வாழ்க்கைத்திறமும்
நடைபெறும் என்றும், பிறவும் நவீனர் கூறும்
ஆராய்ச்சியுரைகளுக்கிணங்க இங்குப் பெருந்தேன் என்பதற்குப்
பெருந்தேன்வண்டு என்றுரைத்தலும் பொருந்தும். 101


     1இவ்வகையான தேவஓசைகள் தென்கைலாயம் எனப்படும்
வெள்ளிமலையின்மேல் (இது கோயமுத்தூர்ச் சில்லா
திருப்பேரூருக்கு மேற்கில் 20 நாழிகையளவில் உள்ள நீண்ட
மலைத்தொடரின் ஒரு குன்று) இப்போதும் நள்ளிரவிலும்
அதிகாலையிலும் கேட்கப்படுகின்றன. பேரூர்ப்புராணம்
விம்மிதப்படலம் பார்க்க.