751.
|
முன்புசெய்
தவத்தி னீட்ட முடிவிலா வின்ப மான
வன்பினை யெடுத்துக் காட்ட வளவிலா வார்வம்
பொங்கி
மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
யென்புநெக் குருகி யுள்ளத் தெழுபெரு வேட்கை
யோடும்,
102 |
751.
(இ-ள்.) முன்பு.....காட்ட - முன்னேசெய்த
தவத்தின்
தொகுதி முடிவில்லாத இன்பமாகிய அன்பை எடுத்துக்காட்டாநிற்ப;
அளவிலா....கூர - அளவில்லாத அவாப்பொங்கி நிலைத்த
பெருங்காதலாகச் சிறக்க; வள்ளலார் .... வேட்கையோடும் -
வள்ளலாராகிய இறைவரது மலையை நோக்கி எலும்புகள் உள்ளுருக
உள்ளத்தினுள்ளே எழுந்த பெரிய ஆசையோடும், 102
751.
(வி-ரை.) முன்பு செய்தவத்தின்
ஈட்டம் - முன்பு -
முன்பிறவி. செய்தவத்தின் ஈட்டம் - அருச்சுனனாயிருந்து
இவர்செய்த தவங்களின் தொகுதி. அதற்கு முன் பல
பிறவிகளினுஞ்செய்த தவங்களெல்லாம் அவ்வருச்சுனப் பிறப்பிற்
றவஞ்செய்தற்கேதுவாயின் வென்க. "தவமுந் தவமுடையார்க் காகும்"
என்றதுங் காண்க. இவற்றின் வரலாறு மகாபாரதத்தில்
அருச்சுனன்றீர்த்த யாத்திரைச் சருக்கம், அருச்சுனன்
தவநிலைச்சருக்கம், சீகாளத்திப் புராணம் சிலந்திமுதலிய
முற்கதைச்சருக்கம் முதலியவற்றிற் கண்டுகொள்க. இத்தவத்தின்
பெருமை,
"வஞ்சமனத்
தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளு நம்பியென வேநினையும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவு கோளிலியெம் பெருமானே" |
என்று ஆளுடையபிள்ளையாராற்
பாராட்டப்பட்டது காண்க. இங்கு
முன்புசெய்த தவத்தினீட்டம் என்று பொதுப்படக்
குறித்தாரன்றி,
ஆசிரியர் அப்பிறப்பும் செய்தவமும் இன்னவெனக் கூறினாரல்லர்.
இஃதவர் மரபு என்க.
"உன்னுடைய
மனக்கவலை யொழிநீயுன் னுடன்பிறந்தான்.
முன்னமே முனியாகி யெனையடையத்தவமுயன்றான்"
(திருநா - புரா-48) எனவும்,
"பண்டுபுரி
நற்றவத்துப் பழுதினள விறைவழுவுந் தொண்டர்"
(மேற்படி)
எனவும்,
"வளர்திருத்
தொண்டி னெறிவாழ, வருஞானத் தவமுனிவர் வாகீசர்" மேற்படி)
எனவும் அப்பர் சுவாமிகளது முன் பிறப்பைப்பற்றிக் குறித்தனர்.
"பண்டுதிரு
வடிமறவாப் பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டி னளித்தருள"
எனவும்,
"தொண்டினிலை
தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்
வொருகாற்
கொண்டெழலும்"
எனவும்,
"தம்மேலைச்
சார்புணர்ந்தோ? சாரும்பிள் ளைமைதானோ?ழு எனவும்,
"பவமற
வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டு மென்னுநல் லுணர்வு நல்க" (1244) எனவும்,
ஆளுடையப்பிள்ளையாரது
முன்னைத் திருத்தொண்டினிலையைக்
கூறினார். இவ்வாறு குறிப்பாற் கூறுவதன்றி அவையின்னவென
விரித்தாரலர். அவை அவ்வப்புராணச் சரிதங்களிற் கூறவேண்டிய
நியதியும் இன்றியமையாத தொடர்பும் இன்மையான் என்க.
ஆளுடைய நம்பிகளது
முன்பின்வரலாறுகள்
திருமலைச்சருக்கத்திலும் வெள்ளானைச்சருக்கத்திலும்
கூறியுள்ளாரே? எனின், அவர் இப்புராண காவியத்
தலைவராதலாலும் இப்புராணத்துக்கு மூலமாகிய திருத்தொண்டத்
தொகை வரலாறும், இப்புராணம் வந்தவரலாறும் கூறவேண்டியது
இன்றியமையாதாதலாலும் கூறினார் என்க.
கோச்செங்கட்சோழர்
ஆதிமூர்த்தியருளால் முன்னுணர்ந்து
பிறந்து அரசாண்டு தான் அமைத்த சிவாலயங்களனைத்தும்
யானைபுகாத மாடக்கோயில்களாக எடுப்பித்த சரித அமைப்புக்
கூறுதல் இன்றியமையாத தொடர்பாதலின் அவரது முன்சரிதங்
கூறினார் என்பது காணப்படும். எனவே இவற்றால் ஆசிரியர்
இம்மரபு பிழையாமை காண்க.
"வாமான்றேர் வல்ல வயப்போர் விசயனைப்போல்,
தாமா
ருலகிற் றவமுடையார் - தாமார்க்குங், காண்டற் கரியராய்க் காளத்தி
யாள்வாரைத், தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று" (70)
என்ற
திருப்பாட்டாலும், வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்,
கேளார்கொ லந்தோ கிறிபட்டார் - கீளாடை, யண்ணற்
கணுக்கராய்க் காளத்தி யுண்ணின்ற, கண்ணப்பராவார் கதை"
(12), கதையிலே கேளீர் கயிலாய நோக்கிப்,
புதையிருட்கண்
மாலோடும் போகிச் - சிதையாய்ச் சீர்த், தீர்த்தன்பாற் பாசுபதம்
பெற்றுச் செருக்களத்திற், பார்த்தன்போர் வென்றிலனோ
பண்டு
(13) என்று கூட்டி யுரைத்த தொடர்பாலும், கயிலைபாதி காளத்திபாதி
யந்தாதியிலும், "ஒட்டி, விசையன் விசையளப்பான் வேடுருவ மாகி,
யசைய, வுடறிரியா நின்று - விசையினாற் பேசுபதப் பானபிழை
பொறுத்து மற்றவர்க்குப், பாசுபத மீந்த பதம் போற்றி
- (அந்த)
நேசத்தால், வாயினீர் கொண்டு மகுடத்துமிழ்ந்திறைச்சி,
யாயசீர்
போனகமா வங்கமைத்துத் - தூயசீர்க், கண்ணிடந்த கண்ணப்பர்
தம்மைமிக்கக் காதலித்து, விண்ணுலக மீந்த விறல்போன்றி -
மண்ணின்மேல், காளத்தி போற்றி கயிலைமலை போற்றி, என்று
கூட்டியுரைத்த தொடர்பால் போற்றித் திருக்கலிவெண்பாவிலும்
பதினொராந்திருமுறையில் நக்கீரதேவர் அருளியவாற்றால் இவரது
முன்றொடர்பு அறியக்கிடத்தல்காண்க.
பாரதப்போர்
வெல்லுதற்குப் பாசுபதப்படை பெறும்பொருட்டு
அருச்சுனர் திருக்கயிலாயமலைச்சாரலில் அரியதவஞ்செய்ய இறைவர்
வெளிப்பட்டனர். அவரைக்கண்டு அர்ச்சுனர் பாசுபதம் வேண்டாது
முத்தியை வேண்டினர். அவர் "நீவிரும்பித் தவஞ்செய்த பாசுபதத்தை
இப்போது தருவோம். இன்று வேண்டிய முத்தியைக் காளத்தியிற்
றருவோம். எம்மை வேடனென்று இகழ்ந்தமையால் வேடனாகப்
பிறந்து காளத்தியில் எம்மை அடைவாய்" என்றருள அவ்வாறே
அருச்சுனர் வந்து அடைந்தனர் என்று சீகாளத்திப்புராணம் கூறும்.
"பத்தியிற்
பணிந்துபின் பாண்டு மைந்தனு, ‘மத்தவுன்
னருளினா லடிய னேனும், மெத்தவெம் பவத்தினான் மிகவு
நொந்தனன், முத்தியை யரு' ளென முதல்வன் கூறிடும் (63);
"வாங்குவிற்
றடக்கையாய் வாரிசூழ்நிலத், தோங்கிய
பகைஞரை யொறுக்கு மாற்றினாற், றீங்கறு கணைபெறச் சிந்தை
செய்துநீ, யோங்கிய தவமிக வுஞற்றி வைகினாய் (64);
"முன்னிய பகழிநீ
கோடி முன்'னெனத், தன்னிகர் சங்கரன்
றான ளித்தெமை, யின்னல்செய்வேடனென் றிகழ்ந்து கூறினை,
யன்னதால் வேட்டுவரசனாகியே (65)
"தென்றிசைக்
கயிலையைச் சென்று சேர்ந்துநீ, குன்றலிலன்
புருக்கொண்டு நம்மய, னன்றிகொளி லிங்கபூ சனைநற் பத்தியா,
லொன்றையு முணர்ந்திடாது வந்து செய்தரோ (66),
"கோலமே முதலிய
விலங்கு கொன்றுநீ, சாலவே தசையமு
தருத்திச் சாருநா, ளேலவே முத்தியு மீதும் போ' வெனா, நீலமார்
களத்திறை, நீங்கினானரோ. (67)
என்பது சீகாளத்திப்புராணம்
(சிலந்தி முதலிய முற்கதைச்
சருக்கம்).
இறைவன் அருளியவாறே
அருச்சுனர் வேடராய்ப் பிறந்து
திண்ணனாராய்த் திருக்காளத்தியை அடைந்தனர். முன்னர்த்
தவஞ்செய்த திருக்கயிலைமலைச் சாரல் திருக்காளத்திமலைச்சாரல்;
முன்தவநிலையில் இறைவனைக்காண ஒருபன்றி துணைக்காரணமாய்
நின்றது போல இங்குக் காளத்தி யப்பரைக் காண்பதற்கும் ஒரு
பன்றி துணையாய்வந்து அழைத்துச்சென்றது; என்றிவ்வாறு
தொடர்புகள் பலவும் பொருந்தக் கண்டுகொள்க.
காளத்திகயிலையேயாம் என்பது சீகாளத்திப்புராணம்
நக்கீரச்சருக்கத்தினானும் உணர்க. "கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணுளானே", "காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண்" என்பவை தமிழ்வேதத் திருவாக்குக்கள்.
முடிவிலா
இன்பமான அன்பினை எடுத்துக்காட்ட -
முடிவிலா - காலத்தாலும் இடத்தாலும் அளவுபடாத - முடிவு
பெறாத. "பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா
மாளா இன்பம்" என்ற திருவாசகம் காண்க. முடிவு -
அழிவு என்று
கொண்டு அழிவில்லாத என்றலுமாம். "இறவாத இன்ப அன்பு"
என்றது காண்க. உலகத்து இன்பங்கள் எல்லாம் ஒருகாலத்தில்
அழிந்து ஒழிவன. இறைவனது இன்பம் ஒன்றே என்றைக்கும் முடிவு
இல்லாதது என்றதாம். "ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே
என்னுடைய யன்பே" என்ற திருவாசகத்திலும் இக்கருத்தே காண்க.
இன்பமான அன்பு - அன்புதானே முடிவிலா இன்பமாகவிளையும்.
ஆன என்றது ஆயின - அதுவாய்விளைந்த என்ற பொருளில்
வந்தது. "அன்பே சிவமாவ தாரு மறிகிலார்" என்ற
திருமந்திரமுங்காண்க. அந்தமில் இன்பத் தழிவில் வீட்டுக்கு
ஏதுவாகிய அன்பு. "இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே"
என்றது தமிழ்வேதம்.
எடுத்துக்காட்ட
- உள்ளிருந்து உயிருணர்ச்சிக்குப்
புலனாக்க. இவர்முன்பு தவஞ்செய்த பண்பட்டுத் திருந்தியமையால்
அது அன்பினையும், அந்த அன்பே முடிவான இன்பத்தினையும்
இவர்க்கு உணர்த்தியன. முன்னைத்தவமுடையாரே இவ்வாறு
காண்பர். திருக்காளத்தியைக்காணும் ஏனையோர் எவரும் இவ்வாறு
கண்டணையாமைக்கு இஃதிலாமையே காரணமாம். காட்ட -
காட்டலால் என்க. பொங்குதற்குக் காரணங் கூறியவாறு.
தவம்
என்றது ஈண்டுச் சிவபூசை குறித்தது. ஏனைத்
தேவர்களை நோக்கிச் செய்வன முடிவிலா வின்பமான
அன்பினைக்காட்டுந்தவமாக. "செத்துச்செத்துப் பிறப்பதே
தேவென்று, பத்திசெய்மனப் பாறைகட் கேறுமோ" என்றதுகாண்க.
மாபாரதம் 13-ம் நாட் போர்ச்சருக்கங் கைலாசயாத்திரை
கூறுமிடத்துப் "பாவை பங்கன்மேற் புரிந்தில னின்னமும் பூசை
யென்றனன்", "மனமொன்றியே சிவாகடவுரையிற் சாத்தினான்" என்ற
இவை முதலியவற்றானறிக. "தவத்தினிலுணர்த்த விட்டு" என்ற
ஞானசாத்திரமுங்காண்க. ஈண்டுத் தவத்தினீட்டம் காட்டிய
முறையினை - நீர்வேட்கையால் குளிர்ந்த நதிகாணவந்த
திண்ணனார் அரைக்காவததில் மலைச்சாரற் சோலைகண்டார்;
அக்காட்சி அக்குன்றில் நண்ணுவோம் என்ற விருப்பைத்தந்தது;
நாணன் அங்குப்போயின் நல்லகாட்சிகாணும் எனக்கேட்டதும் தன்
மேற்பாரம்போவது போலத் தோன்றிற்று; ஆசைமிக்கு
நெஞ்சில்வேறோர் விருப்புவிரைந்தது; அவ்வாறே நதியூடு
வந்தார்க்குச் சிந்தை தெளிவுற்றது; இந்நிலையில் பின்னும்
காளத்திகண்டு கொண்டு நதிகடந்து சாரல் சேர்ந்தார்; அங்கு
நாணன் ‘இம்மலைப்பெருந்தேன் சூழ்ந்து மதுமலர் ஈக்கள் மொய்த்த'
ஒலியினையும் அதனால்பெரிய இன்பநிலையத்தினையும்
நினைவூட்டினான். அப்போது முன்னைத்தவம் முடிவிலா இன்பமாய்
விளைந்த அன்பினை எடுத்துக் காட்டிற்று; காட்டவே இன்பத்தை
அடைய முயலுதல் ஆன்மாக்களின் இயல்பாதலின், அதனில்
அளவிலா ஆர்வம்பொங்கிற்று - என்று இவ்வாறு முன் உரைத்த
மனநிகழ்ச்சி மாறுபாடுகளினும், திண்ணனார் உலகநிலைவிட்டுச்
சிவச்சார்புபெறச் செல்லும் படிமுறையான செயல்களினும் வைத்துக்
கண்டுகொள்க. இக்கருத்துப் பற்றியே "பேணுதத் துவங்க ளென்னும்
பெருகுசோ பானமேறி" என வரும் பாட்டிற் கூறினார்.
தவப்பெருக்கினாலே உயிர் உலகத்தை விடவிடச் சிவத்தைப்
பற்றுகின்ற தென்ற உண்மையும் காண்க.
ஆர்வம்பொங்கி
- தவம் உள்ளிருந்து இன்பமான அன்பை
உயிருக்குக்காட்ட அவ்வுயிருணர்ச்சி அளவுபடாமற் பொங்கி.
மன்பெருங்
காதல் கூர - நிலைத்த பெருங்காதலாகச்
சிறந்துவர. இது அந்த உயிருணர்ச்சி மனத்திலே தாக்கி மிக்க
காதலாய்மாறிய நிலைகுறித்தது. மன்னுதல் பின்னர் எஞ்ஞான்றும்
மாறாது நிலைத்தல்.
வள்ளலார்
மலையை நோக்கி - வள்ளலார் - இறைவர்.
"காளத்திகண்டுகொண்"டே (749) வந்தவர் காதல்கூர்ந்ததனால்
அதனையே நோக்கி என்க. நோக்குதல் - ஊன்றிப்
பார்த்தல். ஒரு
பொருளை மிக இச்சித்தவன் அதனையே நோக்கிக் குறிவைத்துச்
செல்வது உலக ஒழுக்கத்தினும் காணப்படும். காதல்மிக்கபோது
அதுவே வெளிப்பட மற்றெல்லாவற்றையும் மறந்து சரித்தலுங்
காணப்படும். உருவெளிப்பாடு முதலிய அகப்பொருட்டுறைகளும்
இக்கருத்துப்பற்றியன. ஒரு பொருள் வெறி (Monomania)
என்று
சாத்திரிகள் கூறும் மனநிலை இதனோடொத்ததாம்.
என்புநெக்குறுகி
- பெருங்காதல் கூர்ந்தபோது உளதாம்
மெய்ப்பாடு. உடலுக்காதாரமாயுள்ள எலும்பும் உள்ளுருகி. எனவே
உடல்முழுதும் பரவசமாய் உருகிற்று என்பதாம். நெக்குஉருகி
-
மிக உருகி என்க. எலும்பும் தனது கடினத்தன்மை நெகிழ்ந்து
இளகி மென்மையை அடைந்து "புன்புலால் யாக்கை புரை புரை
கனிய......என்பெலாமுருக்கி" என்ற திருவாசகமும் காண்க.
வேட்கை
- காதலித்தபொருளைப் பெறுதற்கண்உளதாகும்
உள்ளநிகழ்ச்சி. 101
|