754.
மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா
                                  யுள்ள
வேகநா யகரைக் கண்டா; ரெழுந்தபே ருவகை
                                  யன்பின்
வேகமா னதுமேற் செல்ல மிக்கதோர் விரைவி
                                   னோடு
மோகமா யோடிச் சென்றார்; தழுவினார்; மோந்து
                            நின்றார்.
105

     (இ-ள்.) வெளிப்படை. ஆகாயத்தை அளாவி நிறைந்தோங்கி
திருக்காளத்தி மலையில் எழும் கொழுந்தாகியுள்ள ஏகநாயகராகிய
இறைவரைத் (திண்ணனார்) கண்டனர்; அக்காட்சியால் எழுந்த
பெரிய மகிழ்ச்சியாகிய அன்பினது வேகமானது மேற்செல்ல,
மிகுந்ததோர் விரைவினோடும், மோகமாகி ஓடிச்சென்று (அவரைத்)
தழுவிக்கொண்டு உச்சிமோந்து நின்றனர்.

     (வி-ரை.) மாகம் - ஆகாயம். ஆர்தல் - நிறைதல்.
மாகமார்
- ஆகாயத்தை அளாவ உயர்ந்து நிறைந்த. மாகம் -
ஆகுபெயராய் விண்ணவரைக் குறித்ததாகக் கொண்டு,
விண்ணவர்கள் வணங்குதற்பொருட்டுக்கூடி நிறைந்த
என்றுரைப்பதுமொன்று. "கடவுண்மால் வரையி னுச்சி அதிர்தரும்
ஓசை யைந்தும்" (750) என்றுகூறியதும் காண்க. மாகமாவது பூமிக்கும்
சுவர்க்கத்திற்கும் நடு என்பார் பரிமேலழகர் (பரிபாடல் - 1. 47)

     மலை எழு கொழுந்து - மலையின் சிகரத்தில் எழுந்து
விளங்கும் கொழுந்து போல்பவர். கொழுந்து - தாவரங்களிற்
றளிர்தோன்று முறுப்பு. மலை - சிவமாக, இவர் அதன் இளைய
நுனிப்பகுதிபோல்வார் என்றதாம். குடுமித்தேவர் என்றதுமிது.
இத்தலத் தேவாரத்தில் ஆளுடைய நம்பிகள் "கொழுந்தே!
யென்குணக்கடலே!" (8) என்று போற்றியதும் காண்க. "கோட்டூர்க்
கொழுந்தே!" என்ற தேவாரமும், "சைவக்கொழுந்தே! தவக்கடலே!"
என்ற கந்தர்கலி வெண்பாவும் காண்க. சுயம்பு, காணம், ஆரிடம்,
முதலியனவாய் வகுக்கப்பட்ட இலிங்கங்களுள்ளே இம்மூர்த்தி
மலையின் உச்சியில் அருவுருவத் திருமேனியாகிய சதாசிவ
மூர்த்தமாய்ச் சுயம்புவாய் முளைத்தெழுந்த மூர்த்தி என்பது.

     ஏகநாயகர் - தனிமுதற் கடவுள். "ஒருவனே போற்றி"
"ஒருவனென்னு மொருவன்", "ஏகநா யகனை யிமையவர்க் கரசை"
என்றற்றொடக்கத்த தமிழ் மறைகளும், "ஒன்றென்ற தொன்றேகாண்
ஒன்றேபதி" என்பது முதலிய ஞான சாத்திரமும் காண்க. "சிவன்
ஒருவனே கர்த்தா, பிறர் ஒருவர்இன்று" என வேதாந்தங்கள்
கூறுகின்றன. "பிரபஞ்சம் விசித்திர காரியமாய்க் காணப்படுதலின்
இவ்வாறு நடாத்தும் முதற்கடவுள் முற்றுணர்வும் அளவிலாற்றலும்
பேரருளும் சுதந்தரமும் முதலிய நிரதிசய
குணங்களுடையனென்பதூஉம் பெறப்பட்டது. படவே
இத்தன்மையனாகிய முதற்கடவுளொருவனே யமையுமாகலின்
வேறுமத்தன்மையருண்டெனக்கொள்ளின் மிகையென்னுங்குற்றமாம்.
அல்லதூஉம் இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமையில்வழி
இலக்கியம் பலவாதல் செல்லாதென்னுங் கருத்தால் ‘ஒன்றலா
வொன்று' என வரையறுத்தோதினார்" என்று சிவஞானபோதம்
முதற்சூத்திரத்தில் ‘ஒன்றலா வொன்றால்' என்னும் வெண்பாவின்கீழ்
எமது மாதவச்சிவஞானசுவாமிகள் உரைத்தவையுங் காண்க.

     கண்டார் - "தேவரங் கிருப்ப தெங்கே" என்று அளவிலா
ஆர்வம் பொங்கிக் காதல்கூரப் பெருவேட்கையோடும் (751)
காண்பதற்கு வந்த திண்ணனார், தேவரைக் காணா முன்னே
தேவரது அருட்கண்ணால் காணப்பெற்றார். பெறவே அவரது
உயிரும் கரணங்களும் "அங்கண் மாயை யாக்கையின்மே லளவின்
றுயர்ந்த சிவமயமாய்ப், பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கி"
(சண்டீசர் புரா 55) விளங்கின. இவ்வாறு சிவமயமாகப்பெற்ற
கண்களாற் கண்டார்.

     எழுந்த பேருவகை அன்பின் வேகம் - எழுந்த -
முன்னர் உள்ளேநின்று இப்போது மேல்எழுந்த. பேருவகை -
பெருமகிழ்ச்சியாகிய இன்பம். அன்பு - இன்பமான அன்பு. வேகம் -
ஆர்வம், காதல், வேட்கை என (751) மேற்சொல்லப்பட்டவை.
வேகம் - சிவானந்தத்திற்கு ஏதுவாகிய அன்பின் கதி என்பர்
இராமநாதச்செட்டியார். இங்கு வேகம் என்றது பசி, தாகம், தூக்கம்
முதலிய உபாதி வசப்பட்ட வேக மன்று. இந்த வேகங்கள்
கெட்டபோதே சிவத்தை அடைவதாகிய இங்குக் குறித்த அன்பின்
வேகம் - சிவவேகம் - உண்டாகும். "வேகங்கெடுத்தாண்ட வேந்தன்
அடிவெல்க" என்பது திருவாசகம். இந்த வேகம் உள்ளடங்காது
மேல்எழுந்து இவரைத் தன்வசப்படுத்தி ஈர்த்துச்சென்றது. இவர்
தம்வசமிழந்து தம்மை முற்றும் மறந்தார்; இறைவர் வசமேயாயினார்.
இந்நிலையினை மேல்வரும் இரண்டு பாட்டுக்களிற்கூறுவார்.
இதன்மேல் வரும் சரித நிகழ்ச்சிகள் யாவும் இந்நிலையின் நிகழ்வன.

     மோகம் - குறித்த பொருளிடத்து அதிக ஆசை.
தழுவுதல்
- மோந்துநிற்றல் முதலியவை அன்பு மேலீட்டால்
நிகழ்வன. இதனைக் குறிக்க மோகமாய் என்றார்.

     சென்றார் - தழுவினார் - (நின்றார்) என்ற
வினைமுற்றுக்கள் சென்று தழுவி மோந்து (நின்றார்) என
எச்சப்பொருள் தந்தன. திண்ணனார் முன்னம் குடுமித்தேவர் என்ற
அவரது நாமம்கேட்டார்; அதன்பின் செவ்வே கோணமில்....தேவர்
இருப்பர் என்று அவரிருக்கும் வண்ணம் கேட்டார்; பின்னர்த்
திருக்காளத்தி மலைமிசை என்று அவனுடைய ஊர்கேட்டார்.
இவ்வாற்றால் வேகமாய் ஓடிச்சென்று அவர் வசமாகித்
தழுவிக்கொண்டார்; தாய்தந்தையரையும் உலக ஒழுக்கம் முதலிய
முன்னைச் சார்புகளையும் அன்றே விட்டார்; தம்மையு மறந்தார்;
அத்தேவரது தாள்களைத் தலைப்பட்டார் என்றிந்தநிலைகளை.

"முன்னமவனுடையநாமங்கேட்டாள்;
                      மூர்த்தியவனிருக்கும்வண்ணங்கேட்டாள்;
 பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள்; பெயர்த்து மவனுக்கே
                                        பிச்சி யானாள்;
 அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள்; அகன்றா ளகலிடத்தா
                                          ராசாரத்தைத்
 தன்னை மறந்தாடன் னாமங் கெட்டாள்; தலைப்பட்டா ணங்கை
                                      தலைவன் றாளே"

என்ற திருத்தாண்டகத்தி லருளிச் செய்யப்பட்டவாறு கண்டு
கொள்க. இவையே முன்னைத் தவத்திற்கேற்றவாறு உயிர்கள் பெறும்
பக்குவநிலையில் அடையும் அனுபவங்களாம். 105