757.
|
கைச்சிலை
விழுந்த தோரார் காளையார் மீள "விந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ?" வென்றலு மருங்கு நின்ற
வச்சிலை நாணன் றானு "நானிது வறிந்தே"
னென்பான்,
108 |
757.
(இ-ள்.) வெளிப்படை. கையிலிருந்த வில்
கீழே
விழுந்ததை உணராதவராகிக், காளைபோன்றாராகிய திண்ணனார்,
மீண்டு, "இந்தப் பச்சிலையுடனே பூவும் பறித்து இட்டு, நீரையும்
வார்த்து, நல்ல இக்காரியத்தைச் செய்தவர் யாவரோ?" என்றலும்,
பக்கத்தில் நின்ற வில் ஏந்திய அந்த நாணன்தானும், "நான் இதனை
அறிந்துள்ளேன்" என்று சொல்வானாய். 108
757.
(வி-ரை.) கைச்சிலை -
கையில் ஏந்திய வில்.
விழுந்தது - கைப்பிடி நழுவிக் கீழேவிழுந்தது. மிக்க அன்பினால்
காளத்தியப்பரைத் தழுவித் தம்மை மறந்து நின்றாராதலின்
கையிற்பிடித்த பிடி நீங்க வில் கீழ்வீழ்ந்தது - மிக்க துயரத்தால்
உடல் அவசப்பட்டபோதும் இவ்வாறு நிகழும் என்பது "கையில்
ஊனும் சிலையுடன் சிதறி வீழ" (814) என்றவிடத்துக் காண்க.
இன்பத் துன்பங்கள் மீக்கூர்ந்தபோது உடல் வசமிழந்ததனால் இவை
உளவாகும்.
சிலை
கையினின்றும் வீழ்ந்தது என்று கூட்டி
யுரைப்பதுமாம். ஓரார் - உணராதவராகி. மீள
-
"அகப்பட்டாரச்சோ!" (755) என்றும், "தனியே நீரிங்கிருப்பதே" (756)
என்றும் கூறியவற்றோடு மீண்டும் என்க.
இந்த
- தேவர்திருமேனியில் தாம் நேரே பக்கத்திற்கண்ட
இலை - பூ - நீர் என்ற இவற்றைச் சுட்டிய அண்மைச்சுட்டு.
இலையோடுபூவும்
பறித்திட்டு நீரும்வார்த்து - இவை
பூசையின் அங்கமாக ஆகமங்களில் விதிக்கப்பட்டவை. "பூவொடு
நீர்சுமந் தேத்தி", "பறித்திட்ட விலையும் முகையும் எல்லாம்",
"சலம்பூவொடு தூபம்" முதலிய தமிழ்மறைத் திருவாக்குக்கள் காண்க.
பறித்ததும், இட்டதும், வார்த்ததும் இவர் கண்டிலரேனும், பறித்திட்டு
என மரஞ்செடி கொடிகளினின்றும் பறித்தாலன்றி இவைகிடையா
என்ற முன் அனுபவத்தின் வழிவந்த அனுமானத்தால் பறித்து
என்றும், இடுதல் - வார்த்தல் என்ற இவைகள்,
செய்யும் ஒருவரது
செய்கையில்லாவிடின் இங்குத் திருமேனியிற்காண இயைபில்லை
என்ற அனுபவ அனுமானத்தால் இட்டு - வார்த்துச் - செய்தார்
யாரோ? என்றும் வினவினார்.
மச்சிது
- மஞ்சு - அழகு. மஞ்சிது - நன்றாகிய இதனை.
‘மஞ்சுடை மணிநகு மாலை மண்டபம்' - (சூளாமணி), மஞ்சு என்பது
எதுகைநோக்கி மச்சு என விகாரப்பட்டு நின்றது.
இது தமிழிலிருந்து
பிறந்த தெலுங்கு மொழியில் மஞ்சிது என வழங்கிவருதல் காண்க.
தமிழில் பண்டை உலகவழக்கிலும் நூல்வழக்கிலும் இருந்த
பலமொழிகள் தமிழ் வழக்காறொழிந்தும், தமிழினின்றும் பிறந்த
தெலுங்கு மலையாள முதலியவற்றில் புகுந்து அவ்வாறே வழக்கில்
நின்றுவருதல் காணப்படும். இவை தமிழின் தூய்மையும், தாய்மையும்
காட்டுவனவாம். கடை - ஆவணவீதி எனப் பொருள்படும் அங்காடி
என்ற மொழி பழந்தமிழ் நூல்களிலும் பேச்சுவழக்கிலும் இருந்தது.
நாளங்காடி - (தினப்படி கூடும் கடை - நாட்சந்தை) என்பது
சிலப்பதிகார காலத்தில் வழங்கிவந்த பழந்தமிழ் மொழி. இது தமிழ்
வழக்கொழிந்தும் தெலுங்கில், அங்கிடி என
இன்றும் வழங்கிவருதல்
காண்க. பழந்தமிழ்மொழிகளான குப்பாயம், கடவு, படிஞாயிறு, புழை
(ஆறு), ஊன் (சோறு), களி (விளையாட்டு) முதலிய பல
செம்மொழிகள் இவ்வாறே மலையாளத்தில் வழங்கிவருதலும் காண்க.
இவ்வாறன்றி
மஞ்சு - குற்றம் - அநுசிதம் என்று
உரைகூறுவாருமுண்டு. திண்ணப்பனார், பூச்சூட்டலும்,
நீர்வார்த்தலும் குற்றமென்றும் தகாதசெயலென்றும் நினைத்தற்குக்
காரணமின்று. அன்றியும் செய்தார் யாரோ?
என்று
வினவினரேயன்றி இவ்வநுசிதம் ஏன் செய்தார் எனக்
கேட்டனரல்லர். முன்னை நான்அவர் மங்கலநீர்ச் சுனை படிந்தனர்
(705). அற்றைநாளில்தானே முல்லை குறிஞ்சி வெட்சிப்பூவும்,
முறிகொண்ட கண்ணியும் சூடினர் (706). எனவே, இவை தூய்மையும்
அணியும் செய்வன என்ற உணர்ச்சியுடன் வினவினராதல் வேண்டும்.
இதுபற்றியே பின்னர் "நாயனார்க்கினிய செய்கை, எண்ணிய
விவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண் "டார்.
இக்கருத்தால் இவ் வினாவிற்கு விடைகூறிய நாணனும் "ஓர்
பார்ப்பான் இவை செய்தான்" (758) என்று கூறினானன்றி
இவை தீயனவன்று, நல்லனவே என்று குறிக்குமாறெதுவும் எடுத்துக்
கூறினானல்லன். ஆதலின் அஃதுரையன்றென்க. மற்றிது என்பது
எதுகைநோக்கி மச்சிதுஎன நின்றதென்பாரு
முண்டு.
என்றலும்
- செய்தார் யாரோ? என்ற இவ்வினாவைத்
திண்ணனார் நாணனை நோக்கிக் கேட்டனரல்லர். அவர்
தம்முடைய உலக இருப்பினையே முற்றும் மறந்தாராதலின் அவரது
கண்கள் அடுத்துநின்ற நாணனைக்காணுதல் ஒழிந்தன; அவன்
சொன்ன சொற்களில் தேவரைப் பற்றினவற்றையன்றிப்
பிறமொழிகளை அவர் செவிகள் கேட்டலொழிந்தன. பிரியாமல்
உடன்தொடர்ந்ததோர் நாயினையும் அவர் அறிந்தாரிலர். பிறதுறை
வேட்கை முற்றுநீங்கினார். 765, 766 பாட்டுக்கள் இந்நிலையினை
விளக்கியது காண்க. ஆதலின் இவ்வினா ஐயப்பட்டு அவர்
தமக்குத்தாமே நிகழ்த்தினாரன்றி எவரையும் முன்னிலைப்படுத்திக்
கேட்டவரல்லர் என்க. இதுபோலன்றி முன்னர் மலையை ஏறும்போது
கேட்ட ஒலியைப் பற்றி வினவுவார் நாணனை முன்னிலைப்படுத்தி
"இது என்கொல் நாணா?" என்று வினவியதும் காண்க.
மருங்குநின்ற
அச்சிலை நாணன்தானும் - அவர் தன்னை
நோக்கி வினவாவிடினும் மருங்கு நின்றதனால் அதனைக்
கேட்டவனாதலானும், தன்தலைவனது ஐயத்தை நீக்கும்
பொறுப்புடையவனாதலானும் நாணன்தானாகவே முந்திக்கொண்டு
"இது நான்அறிந்தேன்" என்று தொடங்கிக் கொண்டவனாய்
வரும்பாட்டிற் கண்ட வாறு விடை சொல்கின்றான். இக்கருத்துப்
பற்றிய நாணன் தானும் என்றார்.
நான்
இது அறிந்தேன் - இது - இது செய்தார் யாரோ?
என்ற வினாவிற் குறித்த இது, அறிந்தேன் -
அறிந்தவகையை
வரும்பாட்டில் விரித்துக் கூறுகின்றான். அறிந்தேன்; அறிந்தது
எப்படிஎனில் இப்படியாம் என்க.
என்பான்
- என்று சொல்வானாகி. முற்றெச்சம். என்பான்
(ஆகி) - என்றான் என வரும்பாட்டுடன் முடித்துக்கொள்க. 108
|