759.
உண்ணிறைந் தெழுந்ததேனு மொழிவின்றி யாரா
                                  வன்பிற்
றிண்ணனார் "திருக்கா ளத்தி நாயனார்க் கினிய
                                  செய்கை
யெண்ணிய விவைகொ லா "மென் றிதுகடைப்
                         பிடித்துக் கொண்டவ்
வண்ணலைப் பிரிய மாட்டா வளவிலா தரவு நீட,
110

     759. (இ-ள்.) வெளிப்படை. உள்ளத்திலே நிறைந்து
எழுந்ததாயினும், இடையீடில்லாது பெருகிய அளவுபடாத
அன்பினாலே திருக்காளத்தி நாயனாராகிய குடுமித்தேவருக்கு இனிய
செய்கைகள் எண்ணப்பட்ட இவையேபோலும்" என்று திண்ணனார்
இதனையே கடைப்பிடித்துக் கொண்டு, அந்த அண்ணலாரைப்
பிரியமாட்டாத அளவற்ற ஆதரவு பெருக, 110

     759. (வி-ரை.) உள்நிறைந்து எழுந்ததேனும் -
மனத்தினுள்ளக முற்றும் வேறொன்றிற்கும் இடமின்றி நிறைந்து
மேலெழுந்ததேயாயினும். முகைமலரின் வாசம்நிறைந்து
வெளிப்படுமாறுபோல் முன்னையறிவின் றொடர்ச்சியினாலே
சிந்தைவிரிய அதனுடனே நிறைந்துவிரியும் செவ்விய அன்பாகிய
வுணர்ச்சியாதலின் உள்நிறைந்து எழுந்தது என்றார்.

     எழுந்ததேனும் ஒழிவின்றிஆரா - எழுந்ததேயாயினும்
மேலும் ஓய்தலில்லாமல் தொடர்ந்து அடங்காது பெருகிய. ஏனும்
என்னும் வினையெச்சவிகுதி நிறைந்து எழுந்ததாயினும் உள்ளத்தின்
அளவில் நில்லாமல் மேன்மேலும் அளவின்றிப் பெருகுதல்
குறித்தது. "எழுந்தபே ருவகை யன்பின் வேகம்" (754) என்றது
காண்க. ஒழிவின்றி சிறிதுபோது நின்று கழிவதன்றாய் இடையறாது
நின்ற, "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின், அயரா அன்பின்
அரன்கழல் செலுமே" என்று சிவப்பேற்றினை எடுத்துக்காட்டும்
சிவஞானபோதத்திற் (11-ம் சூ) கூறியபடி இங்கு இறைவர்
கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கஞ்செய்து இவரது உள்ளத்தைக்
கண்டு காட்டினாராதலின் அயர்த்தலில்லாத அன்பு இடைவிடாது
மேன்மேற் பெருகி எழுந்தது. ஆர்தல் - நிறைதல் எனக்கொண்டு
ஆரா எப்போதும் நிறைவுபெறாத - அடங்காத - போதியதென்று
முற்றுப்பெறாத என்றுரைத்தலுமாம். "நின்பூசனை யென்று
முடிவதில்லை நம்பாலென" (திருக்குறிப்பு - புரா - 68) என்ற
பொருளை இங்குவைத்துக் காண்க.

     திருக்காளத்தி நாயனார் - திருக்காளத்தியில் எழுந்தருளிய
தலைவர். குடுமித்தேவர். நாயனார் - தலைவர்.

     இனிய செய்கை எண்ணிய இவைகொலாம் - இனிய -
உகந்த - விரும்பிய. எண்ணிய - எண்ணப்பட்ட. படு விகுதி
தொக்கது. பெரியோர்களால் தக்கதென எண்ணப்பட்ட - எல்லா
நூற்றொகுதிகளாலும் இனியவை என எண்ணப்பட்ட. தேவர் தமக்கு
இனியசெய்கை என்று எண்ணிய என்றலுமாம். இவைகொலாம் -
இவையேபோலும். தேவர்திருமேனியில் தாம்
பொருந்தக்கண்டவற்றாலும், நாணன் பண்டும் இவற்றையே கண்டேன்
என்றறிவித்தமையாலும், பண்டு தொட்டு நடைபெற்று
வருகின்றமையால் இவர் விரும்பியவை இவையேபோலும்
எனத்துணிந்தார். "எண்ணி லாகம மியம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை" - (திருக்குறிப்பு - புரா - 51) என்ற
கருத்துங் காண்க.

     இது கடைப்பிடித்து - இதுவே செய்யத்தக்கதென்று
உறுதியாகப்பிடித்து, கடைப்பிடித்தல் - விடாதுபற்றுதல். "நன்மை
கடைப்பிடி" - ஆத்திசூடி. இது - "இது செய்தார் யாரோ?
என்றதிற் குறித்ததும், நாணன் அன்றிது செய்தான் என்றதாற்
போந்ததும் ஆகிய இது. நீராட்டலும் இலைப்பூச்சூட்டலும் ஊட்டலும்
ஆகிய இது."

     அண்ணலைப்பிரியமாட்டா ஆதரவு - இது
கடைப்பிடித்தாராதலின் நீரும் இலையும் பூவும் ஊனும் வேண்டும்;
அவை தேடிக்கொணர இவரைப்பிரிதல் வேண்டும் என்ற
நினைவுவந்தது. வரவே பிரியமாட்டாத ஆதரவு நீடிற்று என்க.
ஆதரவு - ஆசை. நீட - மிக.

     பிரியமாட்டாதளவில் - என்பதும் பாடம். 110