760.
"இவர்தமைக் கண்டே னுக்குத் தனியரா யிருந்தா;
                                  ரென்னே!
யிவர்தமக் கமுது செய்ய விறைச்சியு மிடுவா ரில்லை;
யிவர்தமைப் பிரிய வொண்ணா; தென்செய்கே;
                                 னினியான்
சால விவர்தமக் கிறைச்சி கொண்டிங்கெய்தவும்
                          வேண்டு மென்று, 111

     760. (இ-ள்.) வெளிப்படை. இவரைக் கண்டவனாகிய
எனக்கு இவர் தனியராய் இருந்தார்; என்னே! இவருக்கு அமுது
செய்ய இறைச்சி இடுவாரும் இல்லை; இவர் தம்மைப் பிரியவும்
முடியாது; யான் என்னசெய்வேன்? இனி நான் இவர்க்கு
வேண்டுமளவு இறைச்சியைக் கொண்டு இங்குச் சேரவும் வேண்டும்"
என்று எண்ணி, 111

     760. (வி-ரை.) கண்டேனுக்கு - கண்ட எனக்கு. எனது
காட்சிக்கு. தனியர் - வேறு துணையில்லாதவர். உம்முடன்
துணையாயுள்ளார் ஒருவருமின்றி (107) என்ற விடத்துரைத்தவை
காண்க. கண்டேன் - வினையாலணையும் பெயர். ‘அயலே குடி
தானிருந்தாற் குற்றமாமோ? கொடியேன் கண்கள் கண்டன
கோடிக்குழகீர்' என்ற ஆளுடைய நம்பிகள் மனக்கருத்தும் இங்கு
வைத்துக்காண்க.

     என்னே! - இது என்ன நிலைமை? தனியராயினமையின்
நான் பிரியாது துணை யிருத்தல்வேண்டும்.

     இறைச்சி இடுவாரும் இல்லை என்று உம்மை
பிரித்துக்கூட்டுக. துணையிருப்பாரில்லாததன்றி என்று உம்மை
இறந்தது தழுவியது. இல்லை, ஆதலின் நான்பிரிந்து போய் இறைச்சி
கொணரவும் வேண்டும். ஆனால் மேலே சொன்ன காரணத்தால்
பிரியஒண்ணாது என்றது அதன்மேல் நிகழ்ந்த உள்ளநிகழ்ச்சி.
பிரியாமலிருக்கவும் வேண்டும் - பிரியவும்வேண்டும். ஆதலின்
என்செய்கேன் என்றார். இறைச்சி - உணவு. 758-ல் உரைத்தவை
பார்க்க. தமது பசியைமறந்தார். ஆனால் தேவர் பசியை அறிந்து
அதனைத்தீர்க்கத் தம்பசி தீர்க்கும்வகைபோல இறைச்சிதேட
முற்பட்டார்.

     திண்ணனார் புண்ணியமென்றும் பாவமென்றும் தெரியாது
வேட்டுவத் தொழிலில் ஈடுபட்டார். இப்போது சிவத்தில் ஈடுபட்டு
அன்பராயினார் என்றும், அன்பர் தமது உணவை ஆண்டவனுக்கு
ஊட்டுவர் என்றும், அன்பு பாவபுண்ணிய நிலையைக் கடந்தது
என்றும், பாவபுண்ணியங்களிற் கட்டுப்பட்டுழல்வோர்
அன்புநிலையிலிருப்போருடைய செயல்களைத் தம்மதியால்
ஆராய்ந்து முடிவு காணப்புகுவது அறியாமை என்றும், திண்ணனார்
இங்குச்செய்த செயல்கள் அன்புவழி நிகழ்வனவாதலின் அவற்றைக்
கட்டுப்பாடுகளில் நுழைத்துப்பார்ப்பதே தவறு என்றும், இறைவன்
விரும்புவது அன்பு - கட்டுப்பாடன்று என்றும் இங்கு விசேடவுரை
காண்பாருமுண்டு. இவை சில மயக்கங்கட்குக் காரணமாதலின்
இவற்றை விளங்க உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். விதிநிலை
என்றும், விதிகடந்த நிலை என்றும் உயிர்கள் இறைவனை அடையும்
வழிகள் இரண்டு உள்ளன. இவையிரண்டும் அன்புபற்றியே எழுவன.
புண்ணிய பாவங்களுக்கு அன்பும் அன்பின்மையுமே காரணமாம்.
இவையும் இறைவன் விதித்த விதிகளின்படி வருவனவேயன்றி இவை
மனிதர் தம்மனம்போனவாறு ஒதுக்கிக் கொள்ளக்கூடியனவல்ல.
கொலையும் புலையும் பாவமென்பது இறைவன் வகுத்த வேத
நூல்களில் விதித்தது. கொலையும் புலையும் என்ற இவை எல்லா
நூல்களாலும் அறிஞர்களாலும் உலகர் யாவர்க்கும் ஒப்பக்
கடியப்பட்டன.

     "மாஹிம்சியாத்" (கொலைசெய்யாதே) "தர்மம்சர" - என்பது
வேதம். "அறவினை யாதெனிற் கொல்லாமை" என்பது திருக்குறள்.
நல்ல நினைப்பொழிய நாள்களி லாருயிரைக், கொல்ல
நினைப்பதுவுங் குற்றமு மற்றொழிய" என்பது தமிழ்வேதம்
(ஆளுடைய நம்பிகள் தேவாரம் - திருவாரூர் - புறநீர்மை - 4).
இவற்றை வெறுங் கட்டுப்பாடுகள் என்பது பெருந்தவறாம். அன்பின்
வழியே நின்று விதிவிலக்குக்களை அறிந்து விதிவழி யொழுகித்
தவஞ்செய்யின் அன்பு முறுகும். சிவனருள் சிறக்கும். முடிவில்
அன்பே உருவாகி உலகக்கட்டுவிட்டுச் சிவத்தைச்சாரும் நிலை
வரும். அப்போது விதிவிலக்குக்கள் தோன்றாது விதி கடந்தசெயலும்
நிகழும். அவைதாம் புண்ணியபாவங்கள் என்ற விதிகளுக்குக்
கட்டுப்படா என்பது துணிபு. தூங்கியவன் கைப்பாக்குப் போல
உலகச்சிந்தை தானாகவே நழுவியபின் இந்நிலை உளதாம். அன்றியும்
சுவர்க்க நரகங்களுக்கும், மீளப்பிறவிக்கும் ஏதுவாகிய புண்ணிய
பாவங்களை, முத்திக்கே ஏதுவாகிய சிவபுண்ணியங்களோடு
மயங்கியுணர்தல் பெருந்தவறு. அன்பின் வழிநின்று நூல்கள் விதித்த
விதியொழுக்கமும், உலகைமறந்து விதிகடந்த ஒழுக்கமுமாகிய
இரண்டும் உயிர்களின் பக்குவநோக்கி இறைவன் அருளுதலால்
இவையிரண்டும் அவன் விரும்புவனவேயாம். இச்சரிதத்தில்
அன்புபற்றி விதிவழி ஒழுகிப் பூசித்த சிவகோசரியாரையும்,
அவ்வன்பே பற்றி விதிகடந்து பூசித்த திண்ணனாரையும் இறைவன்
ஆட்கொண்டமை காண்க. இவ்வாறன்றி உலகினை ஒருவாற்றானும்
விடாது பற்றிக்கொண் டுழல்வோர் உலகை மறந்தோர்போலத்
தம்மை மதித்தோ அல்லது விதி விலக்குக்களை அறியாமலோ,
விதிதவறித், தமது உணவு என்கின்ற காரணத்தால் அதனையே
இறைவனுக்கும் ஊட்டுவதும் விதிதவறிய பிறவும் செய்யின் அவை
அன்புநிலை யாகாது பெரும்பாவமேயாம் என்க.

     பிரிய ஒண்ணாது - பிரிய - பிரியவும். பிரியாது இருக்கவும்
ஒண்ணாது என எதிரது தழுவிய எச்ச உம்மை தொக்கது.
கொடுவிலங்குகள் திரியும் கானமாதலின் இவ்வா றஞ்சினார். 756
பார்க்க. உண்மையில் உயிர்கள் இறைவனைப் பிரிய ஒண்ணாதன
என்பது ஞானசாத்திர முடிபுதானே?

     எய்தவும் வேண்டும் - பிரிய ஒண்ணாத நான் பிரிந்துபோய்
இவர்க்கு இறைச்சிகொண்டு சேர்தலும் வேண்டும்என உம்மை
இறந்தது தழுவியது. தனியராய் இருந்தார் - ஆதலின்
பிரியஒண்ணாது; இடுவார்இல்லை - ஆதலின் எய்தவும்
வேண்டும்
என நிரனிறையாகவைத்துக் காரண காரியமாகவும்
கண்டுகொள்க.

     என்செய்கேன் - இதனை 762-ல் விரித்துரைத்தனர். 111