761.
|
போதுவர்
மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
காதலி னோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாப்
போல்வர்;
"நாதனே யமுது செய்ய நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே;
னென்பார்; 112
|
761.
(இ-ள்.) வெளிப்படை. (சிறிது தூரம்) போவார்;
மீண்டும்
வருவார்; தழுவிக்கொள்வார்; மீளப்போவார்; காதலால் நோக்கி
நிற்பார்; கன்றினைவிட்டுப் போகும் ஈன்றணிய பசுவினைப்
போல்வார்; "நாதனே! தேவரீர் அமுது செய்ய நல்ல மெல்லிய
இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து அமைத்துக் கொண்டு
இங்கே வருவேன்" என்பார்; 112
761.
(வி-ரை.) போதுவர் - சிறிதுதூரம் போவார்.
இறைச்சிகொண்டு எய்தவும் வேண்டுமென்ற எண்ணம் தீவிரமாய்
இறுதியில் நிகழ்ந்ததனால் அதனை முன்னிட்டுப் போவார் என்க.
மீண்டு
செல்வர் - அவ்வாறு துணிந்து முன்செல்லும்
செயல்மாறி ஊக்கிய ஊசல்போலப் பின்வரும் செயலாகியது.
தனியராயினமையாற் பிரிய ஒண்ணாதென்ற எண்ணம் தோன்றி
அவரைப் பின்னிழுக்கவே மீண்டு செல்வார் என்க.
புல்லுவர்
- சிறிதகன்று போனதாலும், பின்னரும் அகன்று
வரவேண்டுதலாலும் பிரிவு ஆற்றும் பொருட்டுத் தழுவிக்கொள்வர்.
மீளப்போவர்
- பின்வந்த ஊசல்மீள முன்செல்வதுபோல
இவரது பசிக்கு இறைச்சி வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
மறுபடியும் போவாராயினர்.
காதலின்
நோக்கி நிற்பர் - போய்வரும் எண்ணம்
மேலிட்டதாகவே முன்னர் வந்ததுபோல் மீண்டு வராது, சென்று,
சிறிது தூரத்தில் நின்றபடியே ஆசையோடு நோக்கி நிற்பாராயினர்.
இந்நிலையினையே
"அன்புட னோக்கி
நிற்ப ரழுவர்கை தொழுவர் வீழ்வர்
இன்புற வெழுவர் பின்பா லேகுவ ரிரங்கி மீள்வர்" |
எனவரும் திருப்பாட்டிற்
(திருவாதவூரர் புராணம் -
திருப்பெருந்துறைச் சருக்கம் - 128) கூறுதலும் காண்க.
கன்று
அகல் புனிற்று ஆ போல்வர் - புனிற்று ஆ -
ஈன்றணிய பசு. இது கன்றைப் பிரியமாட்டாது நிற்பதனையும்,
மேய்ச்சற் காட்டுக்குப் போவதற்குச் சிறிது போவதனையும்,
கன்றின்மேல் உள்ள அன்பு மேலீட்டினால் செல்லாது மீண்டு
வருவதனையும் நாம் காண்கிறோம். இதனைப் பேரன்புக்கு
உதாரணமாகப் பெரியோர் கூறுவர். இங்கு இறைவன் கன்றாகவும்,
திண்ணனார் அதனை ஊட்டுவித்துக் காக்கும் தாயாகவும்
கொள்ளப்பட்டதும் உன்னுக. இது திண்ணனாரது அன்பே வடிவாகிய
உள்ளநிலை நோக்கியாம். இதுபற்றி 214-ம் திருப்பாட்டில் "ஈன்றஆன்
கனைப்புக் கேட்ட கன்று" என்றவிடத் துரைத்தவையும் பார்க்க.
இறைவனே எல்லா
வுயிர்க்கும் எல்லாம் கொடுத்துத்
தாய்போலக் காப்பவன். "தாயே யாகி வளர்த்தனை போற்றி", "தாயு
மாயெனைக் கேதலை கண்ணுமாய்" என்பனவாதி அளவில்லாத
தமிழ்மறைத் திருவாக்குக்கள் காண்க. தாயுமானவராகியதும்,
பன்றிக்குட்டிக்குப் பால்கொடுத்ததும் முதலிய திருவிளையாடல்களும்
காண்க. "சேணிடை விட்ட கன்று கோவினைக் கண்டனைந்
ததுவென" (வெள்ளானைச் சருக்கம் - 42) முதலியனவும் இங்கு
நினைவுகூர்க. ஆனால், இந்நிலை மாறி இறைவனைக்
கன்றெனக்கொண்டு தாம் அவரை வளர்க்கும் தாய் என்று எண்ணி
மனமுழுதும்கொடுத்த பெரியோர்களுமுண்டு. இது பற்றி யன்றோ
காரைக்காலம்மையாரை "மற்றிவன் நம்மைப் பேணும் அம்மை
காண்" என்று சொல்லி இறைவன் அவரை "அம்மையே"
என்றழைத்தனர்?
கன்றினைப் பிரியமாட்டாது
பசு திரும்பித்திரும்பி நின்று
கன்றினைப் பார்த்துக் கசிந்துருகுவதுமுண்டு. "கற்றாவின்
மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" - திருவாசகம்;
"ஈற்றா
விருப்பிற் போற்றுபு நோக்கி" - பொருநராற்றுப் படை
- 151;
"கன்றகல் புனிற்றா வென்னக் கசிந்திரு கண்ணீர் வார,
நின்றுநின்றிறைஞ்சி யையா நீத்தியோ வென்று நொந்து" -
திருவாதவூரர் புராணம் - திருப்பெருந்துறை - 150
என்றவையும்
காண்க.
நல்ல
மெல் இறைச்சி -இவர்க்கேற்றவாறு தெரிந்த
சுவையுடைய மெல்லிய இறைச்சி. நானே கோது அறத்தெரிந்து
-
குற்றநீங்குமாறு நானே சுவை பார்த்தறிந்து. பிறரெவரும் அன்றி
நானே என்க. வேறெவரும் அன்போடுசெய்யார்.
செய்தற்கு
வேறெவரும் இல்லை என்றபடி. மருங்குநின்ற நாணனும் பிறர்எவரும்
உள்ளார் என்ற நினைவுமுற்றும் மறந்தார் என்பது காண்க.
இக்கருத்துப்பற்றியே "ஆர்தம ராக நீரிங் கிருப்பதுஎன் றகல
மாட்டேன்" என வரும்பாட்டிற் கூறுவதும் காண்க.
வருவேன்
என்ற இதனால் போதல் குறிப்பிற்கூறினார்.
உலகவழக்கிலும் இவ்வாறு வழங்குதல் காண்க. "செல்லாமை யுண்டே
லெனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ்வார்க் குரை" என்ற
திருக்குறளில் இதன் நுணுக்கம் புலப்படுத்தியது காண்க.
என்பார்
- செல்வர் - போவர் - நிற்பர் - என்பன அவரது
செயல்நிலையும், போல்வர் என்பது அவர்
மனநிலையும், என்பார்
என்பது சொல்நிலையும் உணர்த்தின. 112
|