767. 
கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை
                              பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினி லதுக்கிப்
                                 பார்த்துச்
சாலவு மினிய வெல்லாஞ் சருகிலை யிணைத்த
                                கல்லை
யேலவே கோலிக் கூட லதன்மிசை யிடுவா
                                ரானார். 118

     767. (இ-ள்.) வெளிப்படை.கோலிற் கோத்துக்காய்ச்சி
அந்தக்கொழுப்புடைய தசைகள் நல்ல பதத்தில்வேக, அவற்றின்
இனிய சுவையை முன் காண்பதற்காக வாயில் இட்டுப் பல்லினால்
அதுக்கிச் சுவைபார்த்து, அவற்றில் மிக இனியவற்றையெல்லாம்
முன்னரே இலைச்சருகுகளைச் சேர்த்த கல்லைதைத்து அதில்
ஒன்றுசேர இடுவாராயினார். 118

     767. (வி-ரை.) கோலினிற் கோத்துக் காய்ச்சி -
இறைச்சியை உணவாக்குவதில் மூன்றாஞ்செய்கை. வனவேடர்கள்
முதலிய பழங்கால மக்கள் இறைச்சி சமைத்தற்கு இக்கால நாகரிக
மக்கள் கைக்கொள்ளும் கரண்டி - முள் - கோல் - சட்டி முதலிய
உபகரணங்களினின்றிச் சமைத்து உண்டவகை காண்க.
மரக்கடைகோல் நெருப்பைக் கண்டு தந்தது. காய்ந்த கட்டைகள்
நெருப்பை வளர்த்தன. அம்பு தசையை வேறரிந்தது. வேறொருகோல்
இறைச்சியைக் கோத்து அனலிற்காய்ச்ச உதவிற்று. சருகிலைக்
கல்லையே கொள்கலமாயிற்று என்க. இவை 793 - 794-ம்
திருப்பாட்டுக்களில் விரித்துக் காட்டப்பட்டன.

     கோத்துக் காய்ச்சுதல் - ஒரு கோலில் இறைச்சியின்
பகுதிகளைக் கோத்துக் கோலினைப் பற்றியவாறே அவற்றைத்
தீயில் மேலே காட்டிச் சூடேறப்பண்ணுதல். அதனை இட்டுக்
காய்ச்சுதற்குரிய பாத்திரமின்மையானும் கோலிற் கோத்துத் தீயின்
உயரப்பிடித்துக் காய்ச்சுவர். "நெடுங் கோல்கோத்துக் கனலின் கண்
உறக்காய்ச்சி" (795) என்றதுங் காண்க. முதலில் வதக்குதல் அதன்
உடல் முழுதும் ஒரு பாகமாக வெந்து பக்குவப்பட அதன் இனிய
பகுதிகள் இலகுவில் அரிந்தெடுக்க உதவியாதற் பொருட்டு. இங்கு
மறுமுறை காய்ச்சுதல் அவை செம்மையாய் வெந்து உணவாக
அமைதற் பொருட்டு.

     கொழுந் தசை - கொழுவியதசை. கொழுப்பு என்ற
நெய்ப்பசையுள்ள மாமிசப் பகுதி.

     பதத்தில் வேவ - நெருப்பின்மேல் காட்டியதனால்
தசையினின்று கொழுப்பாகிய நெய் மேல்வந்து தீயில் விழாது வடிய
அந்நெய் முழுதினாலும் அத்தசை பதம்பட வேவச்செய்து. பதமாவது
- அதிகமாய்க் காய்ச்சின் தசை கருகியும், சுருங்கக் காய்ச்சின்
செம்மையாய் வேகாமலும் போய் உணவுக்குப் பயன்படாது. ஆதலின்
இவ்விரண்டுமில்லாத நேரான பக்குவம். வாலிய - இனிய.

     அதுக்கிப் பார்த்து - சிறிதுமென்று சுவைபார்த்து.

     சாலவும் இனிய எல்லாம் - முன்பாட்டில் இன்புறு தசைகள்
வெவ்வேறு கொண்டு என்றது கையினிற்றெரிந்த அளவுக்கு இனிய
பகுதிகள். இங்கு இனிய என்றவை அவற்றுள்ளேயும் தீயிற்
சமைக்கப்பட்டபின் வாயினாற் சுவைத்தறிந்தவற்றில் மிகவும் இனிய
பகுதிகள். எனவே, இனியவற்றுள் இனியவாகிய தசைப்பகுதிகள்
என்றபடி. ஏலவே இலைச்சருகு இணைத்த கல்லை கோலி என்க.

     ஏலவே - அதற்குப் பொருந்த. பொருத்தமாவது - கல்லை
இணைக்கும் பொருத்தமும், பன்றியிறைச்சி இடுதற்குரிய
பொருத்தமும், கொண்டுபோதற்குரிய பொருத்தமும், பிறவுமாம்.
இலைச்சருகு
- வாடிய இலை. இங்குத் தேக்கிலையால் இணைத்தனர்
என்றறியப்படும் (793) இவை கல்லையிணைத்தற்குப் பொருந்தச்
செய்து. கோலி - கல்லையினையும் தாமே கோலினார், பணியாளரிருவர் இருந்தமையுணராராதலின் என்க. கல்லை -
உணவு வைக்கும் கொள்கலம். எச்சில் செய்யப்பட்டு எறியப்பட்ட
இலையை எச்சிற்கல்லை என்னும் வழக்குக்குங் காண்க.

     கூட - மேன்மேல் சுவைபார்த்த பகுதிகள் ஒவ்வொன்றாகச்
சேர்ந்து கூட. அதன் மிசை - கல்லையினிடத்து.

     கோலிக் கூட்டி - என்பதும் பாடம். 118