768.
மருங்குநின் றவர்கள் பின்னு மயன்மிக முதிர்ந்தா;
                                 னென்னே!
யரும்பெற லிறைச்சி காய்ச்சி யதுக்கிவே றுமிழா
                                  நின்றான்;
பெரும்பசி யுடைய னேனும் பேச்சில; னமக்கும் பேறு
தரும்பரி சுணரான்; மற்றைத் தசைபுறத் தெறியா
                                நின்றான்;
119

     768. (இ-ள்.) வெளிப்படை. பக்கத்தில் நின்றவர்களாகிய
நாணனும் காடனும் "மேலும் மிக மயக்கம் முதிர்ந்தவனாயினான்;
என்னே! அரியதாய்ப் பெற்ற இப்பன்றி யிறைச்சியைக் காய்ச்சி
அதுக்கிப் புறம்பு வேறே உமிழ் கின்றான்; தான் பெரும்பசியை
உடையவனேயாயினும் (உண்ணும்) பேச்சில்லான்; பெற்ற இதனை
எங்களுக்கும் கொடுக்கும் பரிசுணராதவனானான்; ஏனை
இறைச்சியைப் புறத்து எறிகின்றான்." 119

     768. (வி-ரை.) மருங்கு நின்றவர்கள் - காடன் -
காணன் எனுமிருவரே. வேறு வேடர்கள் அங்கில்லை. வேறு
வேடர்களுமிருந்தனர் என்று கொண்டுரைப்பாரு முண்டு.

     பின்னும் - மேலும். மிகமுதிர்ந்தான் - மிக அதிகமாகக்
கொண்டான். முதிர்ந்த மயல் கொண்டான் என்பதாம். மயலின்
முதிர்ச்சி அதனைக் கொண்டார்மேல் ஏற்றப்பட்டது. மயக்கம்
மேன்மேலும் முதிர்ந்து பெருகிவிட்டது என்க. பெருகிய தென்றற்கு
அடையாளமாகத் தாங் கண்டவற்றைப் பின்வருமாறு
குறிக்கின்றார்கள் உமிழாநின்றான் - பேச்சிலன் - பரிசுணரான் .
எறியா நின்றான் - ஆதலின் மயல்மிக முதிர்ந்தான் என்றதாம்.
என்னே - மயலின் விளைவுதான் என்ன ஆச்சரியம்.

     அரும்பெறல் இறைச்சி - காட்டுப்பன்றி யிறைச்சியை
இவர்கள் மிகமேலாக மதித்திருந்தார்கள் என்பது. மிக முயன்று -
வருத்தப்பட்டுப்பெற்ற என்றலுமாம். 741-ல் இதனைப்பெற்ற
அருமையை இவர்கள் வியந்து பாராட்டியது காண்க.

     அதுக்குதல் - பல்லினிடை வைத்துச் சிறிது மெல்லுதல்.
வேறு
- தனியாக. உமிழாநின்றான் - எறியாநின்றான் -
ஆநின்று என்ற நிகழ்கால இடைநிலைகள் பலமுறை உமிழ்தலையும்
எறிதலையும் செய்கின்றதனைக் குறித்தன. சில தசைகளை
உமிழ்ந்தும், வேறு சிலவற்றை எறிந்தும் என்க.

     கல்லையில் இட்டவற்றை இவர்கள் உமிழ்தல் என்றும்,
புறத்துத் துப்பிய ஏனையவற்றை எறிதல் என்றும் கொண்டனர்.
அவர் உட்கொள்ளாத நிலையில் இரண்டு ஒத்தனவாயினும்,
கல்லையில் இட்டவையும் தின்னாதவையாயினும், அவற்றை வேறு
ஒரு பயன் கருதியதுபோல அவ்வாறு செய்கின்றார்
என்றறிந்தமையால் இங்ஙனம் பிரித்துக் கூறினார்கள்.
இன்புறுதசைகளை மட்டும் அம்பில் ஈர்ந்துகொண்டு பிறவற்றைக்
கழித்தனர். அவற்றுள்ளும் சுவைத்தவற்றில் சாலவும்
இனியவல்லாதவற்றைப் புறத்துக் கழித்து உமிழ்ந்தனர்.
இவ்விரண்டினையும் மற்றைத் தசை - எறியா நின்றான் -
என்றனர்.

     பெரும்பசி யுடையன் - தமது பசியின் அளவுகொண்டு
அவர் பசியினையும் அனுமானத்தால் அறிந்தனர். அவர் தம்மையும்
மறந்து பசிமுதலியவற்றையும் மறந்த நிலையுற்றதனை இவர்கள்
அறிந்திலர்.

     பேச்சிலன் - பசியை மாற்றிக்கொள்ளும் செயல் சிறிதுமிலர்.
நம்முடன் ஒரு பேச்சுமற்றனர் என்றலுமாம்.

     பேறு - பெற்ற இறைச்சி, உண்மையில் அவர்பெற்ற
கடவுட்பேறு இவர்கட்குந் தரும் வகையிலில்லை என்ற குறிப்பும்
காணத்தக்கது. 119