769.
"தேவுமால் கொண்டா னிந்தத் திண்ணன் ;மற்
                           றிதனைத் தீர்க்க
லாவதொன் றறியோந்; தேவ ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க வேண்டுமவ்
                              வேட்டைக்
காட்டி லேவலாட் களையுங் கொண்டு போது"
                 மென் றெண்ணிப் போனார்.
120

     769. (இ-ள்.) வெளிப்படை."இந்தத் திண்ணன் தெய்வ
மயக்கம் கொண்டான்; இதனைத் தீர்க்கும் வழியொன்றினையும் நாம்
அறியோம்; நாம் ஊருக்குப் போய்த் தேவராட்டியை நாகனோடு
கொண்டுவந்து இதனைத் தீர்க்கவேண்டும்; அந்த வேட்டைக்
காட்டில் நின்ற ஏனைய ஏவலாட்களையும் கூட்டிக்கொண்டு
ஊர்க்குப்போவோம்" என்று எண்ணிப்போயினர். 120

     769. (வி-ரை.) தேவுமால் - கடவுட்பித்து. கடவுளைப்பற்றிய
பித்து. கடவுளால் மேல்கொள்ளப்பட்ட பித்து என்றலுமாம். இதனை
மருள், ஆவேசம்
முதலிய பெயர்களாற் கூறுவர்.

     தீர்க்கல் ஆவது ஒன்று - தீர்த்தற்கு ஆகும்வழி
ஒன்றணையும். தீர்த்தற்கு - என நான்கனுருபும், ஒன்றும் என்ன
முற்றும்மையும் விரித்துரைக்க.

     நாம் மேவி நாகனோடு தேவராட்டியைக் கொணர்ந்து
என மாற்றுக. மேவி - உடுப்பூர்க்குச் சென்று. இந்தத் தேவுமால்
தீர்த்தற்குரியவள் அவளே என்றெண்ணிய சிறப்புப்பற்றித்
தேவராட்டியை முன்வைத்தனர். நோய் கண்ட போது அதனைப்
போக்கற்குரிய மருத்துவனது பெயர் முதலில் நினைவுக்கு
வருதல்போல அவளது நினைவே இவர்கள் மனத்தில் முதலில்
நிகழ்ந்தது. மால் தீர்த்தற்கன்றாயினும் தன் மகன் நிலையறிந்து
ஆவன பிற பலவும் செய்தற்பொருட்டுத் தேவராட்டியை அடுத்து
நினைவு வரத்தக்கவனும், இந்நிலையினால் முதலாகப்
பந்தப்பட்டவனும் தந்தை நாகனே யாதலின் நாகனோடு என்று
அவனை அடுத்துவைத்து, இவ்விருவரும் ஒன்றுபோல இங்கு
உடன்வரத்தக்கார் என்று குறிக்க உடனிகழ்ச்சிப் பொருளில் ஓடு
என்ற மூன்றனுருபு புணர்த்திக் கூறினார். ஓடு விகுதியை நாகன்பாற்
சார்த்திக் கூறியது சிறப்புநோக்கி. தீர்க்கவேண்டும் - இதனை -
(தேவுமாலினை) - எனச் செயப்படுபொருள் வருவிக்க.

     அவ்வேட்டைக்கான் - அந்தக்காடு. நாம் அதிகாலையிற்
போந்து வேட்டையாடிப் பல காதங்கள் பிரிந்துவந்த அந்த என்று
இடத்தாற் சேய்மை குறிக்க அ என்ற சேய்மைச் சுட்டாற் கூறினார்.

     ஏவல் ஆட்கள் - வார் வலைகொண்டு காடுசூழ்ந்தும்,
வேவுபார்த்தும், இயங்கள் முழக்கியும், வேட்டையாடியும், பிறவாறும்
தலைவன் ஏவலில் நின்று பணி செய்த வேடர். இவர்கள் மீளி
வேடர் - (717), மள்ளர் (718), வெற்பர் (719), வேடர் (720),
வேடு (721), வேடர்சேனை (722), ஒற்றர் (723), முதலிய பெயர்களால்
முன்னர்க் கூறப்பட்டனர்.

     போதும் - உடுப்பூர்க்குப் போவோம்; என்று எண்ணி -
என்றிவ்வாறு அவ்விருவரும் ஒருவர்க் கொருவர் பேசித்
துணிந்து. 120