770.
|
கானவர்
போன தோரார், கடிதினிற் கல்லை யின்க
ணூனமு தமைத்துக் கொண்டு, மஞ்சன மாட்ட வுன்னி
மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு, கொய்த
தூநறும் பள்ளித் தாமங் குஞ்சிமேற் றுதையக்
கொண்டார், 121 |
770.
(இ-ள்.) வெளிப்படை. திண்ணனார்தாம்.
வேடர்களிருவரும் போனதை உணராதவராய், விரைவிலே
கல்லையில் ஊனமுதைத் திருந்த அமைத்துக்கொண்டு, தேவரைத்
திருமஞ்சனம் ஆட்ட எண்ணித், தமது தூய வாயினிடத்துப் பெரிய
நதியின் நல்ல நீரைக்கொண்டு, பறித்தனவாகிய தூய நறிய
திருப்பள்ளித் தாமங்களைத் தமது (தூய) தலைமயிரினிடத்தில்
நிறையக் கொண்டவராய், 121
770.
(வி-ரை.) ஒரார் -
உணராதவராய். முற்றெச்சம்.
உணராமைக்குக் காரணம் முன்னர் முகத்தை நோக்கார் (766) என்ற
விடத்தும், பிறாண்டும் உரைக்கப்பட்டது.
கல்லையில் அமுதமைத்துக்
கொண்டு, வாயினில்
மஞ்சனநீர்கொண்டு, குஞ்சிமேற் பள்ளித்தாமங் கொண்டு என,
நீராட்டல் - பூச்சூட்டல் - அமுதூட்டல் என்று தாம் கடைப்பிடித்து
மூன்றற்கும் உரிய திருச்சாதனங்களைத் தேடிக்கொண்டதனை
இப்பாட்டாலும், இவற்றை ஏந்திக்கொண்டு மலைமேற் சென்றதனை
வரும்பாட்டாலும் கூறினாராதலின் இவையிரண்டும் தொடர்ந்து
ஒரு முடிபுபடப் பொருள் கொள்ளப்பட்டன. 559 - 560 -
பாட்டுக்களிலும் இது போன்ற அமைப்புக் காண்க.
திண்ணனார் தாம்
- ஒரார் - (ஆகி) கொண்டு - கொண்டு -
கொண்டார் (ஆகித்) தாங்கி - ஏந்தி - இரங்கி - ஏங்கி -
விரைந்து - வெற்பை நண்ணினார் என இவை இரண்டு
பாட்டுக்களையும் கூட்டி முடித்துக் கொள்க.
கடிதினில்
- தாமதப்படாமல் - விரைந்து. தேவருக்குப் பசி
மிக முடுகுமென்ற கவலையினால் எல்லாம் விரைவில் முடித்த
கருத்துக் குறித்தது. இதனைப் பசிப்பார் என்று இரங்கி ஏங்கி என
வரும்பாட்டில் குறித்ததும், அதுபற்றியே நனி விரைந்து
நண்ணினார் என்றதும் காண்க.
ஊன்
- அமுது - ஊனாகிய அமுது. பண்புத் தொகை.
இதனைப் பெரிய அளவிற்குக் கொண்டனர் என்பது "குவப்பெருந்
தடக்கை வேடன்கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்"
(திருச்சாய்க்காடு
8) என்ற திருநேரிசையா லறியப்படும்
அமைத்துக்கொண்டு
- சாலவு மினியவற்றை ஒவ்வோர்
பகுதியாகச் சுவை பார்த்து உமிழ்ந்தவற்றை ஒன்றுகூட்டி
ஏந்திச்செல்வதற் குரியபடி அமைத்து.
மஞ்சனம்
ஆட்ட - நீராட்ட. நதி பெருமையினையும், அதன்
நீர் நன்மையினையும், அதனைக் கொள்ளும் கொள்கலம்
தூய்மையினையும் உடையன என்பார், மாநுதி - நன்னீர் - தூயவாய்
என்ற அடைமொழிகளாற் சாற்றினார். இவை திரு மஞ்சன நீர்
அமைக்கும் விதிகளைக் குறித்தவாறாம். "குளிர்ந்தநீர்" (758) என்ற
விடத் துரைத்தவை காண்க. "வாய்கலச மாகவழி பாடுசெயும்வேடன்"
என்ற ஆளுடையபிள்ளையாரது இத்தலத் தேவராமுங் காண்க.
"தூயவாய்க் கலசமாட்ட" என்பது திருநேரிசை.
தூநறும்
பள்ளித்தாமம் - தூய்மை - இவராற்
கொய்யப்பெற்றமையாலும், நறுமை - புதுமலர்களானதாலும்
பெறப்பட்டன. "புதுமலர்க்காவில்" (763) என்றது காண்க. இவ்விரண்டு
அடைமொழிகளால் பன்னித்தாமத்தின் இலக்கணங் குறித்தபடியாம்.
இதனை ஆகமங்களினும், புட்பவிதி முதலிய நூல்களிலும் காண்க.
எறிபத்த நாயனார் புராணத்து உரைத்தவையும், முருக நாயனார்
புராணத்து உரைப்பவையுங் காண்க.
குஞ்சிமேல்துதைய
- குஞ்சி - தலைமயிர். தலைமயிரைப்
பூக்கூடையாகக் கொண்டு அதனுள் நெருங்கப் பள்ளித்தாமங்களை
அமைத்துக்கொண்டனர். இடச்சுருக்கம் நோக்கித்
துதையக்கொண்டனர் என்க. தூய
என்றதனைக் குஞ்சியுடனும்
சேர்த்துக.
கொண்டார்
- கொண்டாராகி. முற்றெச்சம். கொண்டு -
கொண்டு - கொண்டாராய் என எறிபத்தர் புராணம் 560-ம்
பாட்டினும் இவ்வாறே கூறியதும் காண்க. இவ்வாறு தனித்தனி
பிரித்து ஒரே சொல்லால் முடிபுகட்டிக் கூறுதல் அந்தச் செயல்கள்
ஒவ்வொன்றையும் பிரித்துக்காட்டிக் கற்போர்மனதை அவற்றிற்
புகுத்தற்பொருட்டும், அவையாவும் ஒன்றுபோலவே
சிவபூசைக்குரியவை என அறிவுறுத்தற் பொருட்டுமாம். 121
|