771.
தனுவொரு கையில் வெய்ய சரத்துடன் றாங்கிக்
                                  கல்லைப்
புனிதமெல் லிறைச்சி நல்ல போனக மொருகை
                                  யேந்தி
யினியவெம் பிரானார் சாலப் பசிப்பரென் றிரங்கி
                                  யேங்கி
நனிவிரைந் திறைவர் வெற்பை நண்ணினார் திண்ண
                              னார்தாம். 122

     771. (இ-ள்.) வெளிப்படை. வெவ்விய அன்பினோடு
வில்லை ஒரு கையில் தாங்கிக் கல்லையினிடத்து இட்ட தூய
மெல்லிய இறைச்சியாகிய நல்ல திருவமுதினை ஒரு கையில் ஏந்தி
"இனியவராகிய எமது பெருமானார் மிகவும் பசித்திருப்பார்" என்று
இரங்கி, ஏங்கி, மிகவிரைந்து, இறைவரது மலையினைச்
சேர்ந்தனர். 122  

     771. (வி-ரை.) ஒரு கையில் வெய்ய சாத்துடன்
தனுதாங்கி
என மாற்றுக.

     கல்லை போனகம் ஏந்தி - அவர் ஏந்தியது கல்லையினை.
இறைச்சிப் போனகம் அதனுள் நின்றது. போனகக் கல்லை ஏந்தி
என்னாது கல்லைப் போனகம் ஏந்தி என்றார், போனகத்திற்குக்
கொள்கலமாகியமட்டில் கல்லைநிற்றலின் அதனை ஏந்துதல் அவர்
கருத்தன்று; போனகம் நிவேதிக்கும் உணவாதலின் அதனை
ஏந்துதலே அவர் கருதியதென்று குறிக்கும் பொருட்டென்பதாம்.
மெல் இறைச்சி - சுவை காணத் தாம் வாயினில் மென்ற - அதுக்கிப்
பார்த்த - இறைச்சி என்ற குறிப்புமாம்.

     இனிய ... என்று - இது அவர் மனத்தில் எண்ணியது.
உள்ள நிகழ்ச்சி.

     இரங்கி - ஏங்கி - இவை அவர் மனநிலை. தேவர்பசிக்கு
அவர் இரங்கினார். இரங்குதல் - பரிவுகொள்ளுதல். "பால்
நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற திருவாசகமும்,
"கன்றகல் புனிற்றா" (761) என்றதுங்காண்க. ஏங்குதல் - இதுவரை
தாழ்க்க நேர்ந்ததே! முன்பே பசிதீர்க்க என்னால் இயலவில்லையே!
என்ற ஏக்கம்.

     நனி - விரைந்து - மிக விரைவாக. பசிதீர்க்கும் ஆவலால்
மிகவிரைந்தனர்.

     நண்ணினார் திண்ணனார்தாம் - செய்வினை முற்றிய
விரைவுகுறிக்கப் பயனிலையை முன்னுரைத்தனர்.

     நீர்சுமந்து, திருப்பள்ளித் தாமங்கொண்டு, ஊனமுது ஏந்தி
விரைதல் மெய்யினாலும், பசிப்பார் என்று இரங்கி ஏங்குதல்
மனத்தினாலும் நிகழ்ந்தன. திருவாயிற் திருமஞ்சன நீர் நிறையக்
கொண்டதனால் வாக்கினாற் பணிசெய்ய இயலாமையின்
இவ்விரண்டுமே கூறினார். இறைவனுக்குத் திருப்பணி செய்தலில்
வேண்டப்பட்டு விதித்த மன மொழி மெய்களின் ஒருமைப்பாடும்
ஆர்வமும் குறித்தது காண்க. 122