772.
இளைத்தனர் நாய னாரென் றீண்டச்சென், றெய்தி,
                                 வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு, முடிமிசை மலரைக்
                                 காலில்
வளைத்தபொற் செருப்பான் மாற்றி, வரயின்மஞ்
                              சனநீர் தன்னை
விளைத்தவன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல்
                               விட்டார்.
123

     (இ-ள்.) வெளிப்படை. தமது தலைவராகிய தேவர்
இளைத்தனர் என்று, வேகமாய்ப்போய், மலையில் முளைத்தெழுந்த
முதல்வராகிய அவரைக் கண்டு, அவரது திருமுடிமேல் இருந்த
மலர்களைத் தமது காலில்தரித்த அழகிய செருப்பினாலே மாற்றித்,
திருவாயிலிருந்த திருமங்சனநீரை விளைந்த அன்பினை
உமிழ்வார்போல விமலனாரது திருமுடியின்மேல் விட்டனர்.

     (வி-ரை.) இளைத்தனர் - பசியால் மேனியிளைக்கும்
இயல்புபற்றி இவ்வாறு எண்ணினார். இளைத்தல் - கரணங்கள்
சத்திகுறைதல். களைத்தல் என்றலுமாம். தேவரது இளைப்பே இவர்
மனத்தின்முன் நின்றபடியால் பின்வரும் பயனிலையாகிய
இளைத்தனர் என்றதனை முன்வைத்துக் கூறினார்.

     நாயனார் - 759 பார்க்க. என்று - என்று எண்ணிக்
கவலைகொண்டு. முன்பாட்டிற் சாலப்பசிப்பர் என்ற கவலை
தொடர்ந்து நின்றதென்பது.

     ஈண்ட - விரைவு குறித்தது. "ஈண்டுநீ வருவாயோலம்" (432)
என்றது காண்க.

     கண்டு - இதுவரை பிரிந்திருந்தமையால் திரும்பிச்
சென்றவுடன் மிக்க ஆர்வத்தோடும் கண்டு என்க.

     முடிமிசை .......... மாற்றி - நாட்பூசையின் தொடக்கம்
முன்னைப் பூசையின் நின்மாலியங் களைதலாதலின், முதலில்
நாதனார் முடிமேலிருந்த மலர்களைச் செருப்புக் காலால்
மாற்றினார். பழம்பூக் களைதலினை நாணன்
சொன்னவனல்லனாயினும் பழய பூக்களைக் களைந்தா லல்லது நீர்
வார்த்தற்கும் புதிய பூச்சாத்துதற்கும் இயைபில்லை என்றறிந்து
திண்ணனார் இதனைச் செய்தனர். முன்பிறப்பிற் பூசனைசெய்த
வாசனைபற்றி இவ்வாறு செய்தார் என்றலுமாம். பழம்பூக்
களைந்தபின் அபிடேகஞ் செய்தல் வேண்டுமாதலின் வாயின்
மஞ்சனநீர் தன்னை இறைவன் றிருமேனியில் விட்டனர். கைகளில்
வில்லும் இறைச்சியுமேந்துதலாற் காலால் மாற்றினார்.

     முளைத்தெழுமுதல் - தானாய் முளைத்து எழுந்த முதல்வர்;
சுயம்பு மூர்த்தி, மலைமிசை யெழுந்து (745) என்றதும், மலையெழு
கொழுந்தாயுள்ள (754) என்றதும் காண்க. முதல் - முழுமுதல்வர் -
ஏகநாயகர் - எல்லார்க்கும் முன்னவர்.

     காலில் வளைத்த பொற் செருப்பு - காலின்கண்
வளைந்து சூழ்ந்த அழகிய செருப்பு. நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப
(711) என்றவிடத் துரைத்தவை காண்க.

     "பொன்னார் திருவடி" என்புழிப்போல பொன் என்று
அருமைபடக்கூறிய திறமும் உணர்க.

     நீர் தன்னை - முடிமேல் விட்டார் - என்று முடிக்க. நீர்
விடுதல் என்பது வழக்கு. "... தொழிற், பூசனை தன்னைப் புக்கொரு
காலில், தொடுசெரும் படியால் நீக்கி வாயில், இடுபுனன் மேனியி
லாட்டித் தன்றலை, தங்கி யதுவர்ப்பூ வேற்றி யிறைச்சியிற், பெரிதும்
போனகம் படைத்துப் பிரானைக், கண்டுகண்டுள்ளங் கசிந்து
காதலில், கொண்ட தோர் கூத்துமுன் னாடிக் குரைகழல், அன்பொடு
மிறுக விறைஞ்சி யாறா, "அன்பொடு கானக மடையும்", எனநக்கீரர்
(திருக்கண்ணப்பதேவர் திருமறம் 57 - 66) கூறும் முறையினையும்
காண்க.

     விளைத்த அன்பு - விளைந்த என்பது எதுகை நோக்கி
வினைத்த என விகாரமாயிற்று. முன்பு செய்தவங் காரணமாக
இப்போது தானே விளைந்த அன்பு - இவர்க்கு முன்னைப்
பிறவியினின்றும் உடன்வந்த குணவிசேடமாம் என்பது 675-ல்
உரைத்தவற்றாலும் உணர்க.

     அன்பு உமிழ்வார் போல - வாய் கலசமாகக்
கொண்டுவந்த நீரினால் நீராட்டுவித்தல் தம்முள்ளே விளைந்த
அன்பினை உமிழ்ந்ததுபோல இருந்தது என்பதாம். அன்பு
காரணமாக நிகழ்ந்த செயலுக்கு அன்பினையே உவமித்தது இதற்கு
உவமை பிறிதின்மையும் தோன்றக் கூடியபடியாம். வாயின்
மஞ்சனநீரை முடி மேல் விட்டது அன்பினை உமிழ்ந்தது போன்றது
என்றமையின் தற்குறிப்பேற்ற உவமையின் பாற்படும். "பொருவில்
அன்பு உருவமானார், (753) என்றபடி இவர் முழுதும் அன்பே
உருவமாக ஆயினவராதலின், அன்புருவத்தில் அன்பினையன்றி
வேறொன்றும் விளையாமையால் அவ்வாறு உள்ளே விளைந்த
அன்பினையே மேல் வழியுமாறு உமிழ்ந்தார் என்பது கருத்து.
460 - 752 திருப்பாட்டுக்களின் கீழ் உரைத்தவையுங் காண்க.

     1"பூட்டு கார்முகந் தன்னொடுந் தோன்றிய புயல்வா, யூட்டு
தண்புன னந்தியங் கிரிமிசை யுகுத்தல், வேட்டு வக்குலத்
திண்ணனார் மஞ்சனம் விமலற், காட்டுகின்றதோர் தனிச்செயல்
போன்றுள தன்றே" என்ற கந்தபுராணத் திருப்பாட்டில்
(ஆற்றுப்படலம் - 6) இக்கருத்தை உவமை முகத்தால் வைத்துப்
பாராட்டியிருத்தலும் இங்குவைத்துக் காண்க.

     விமலனார் - நின்மலராதலின் அவரை மஞ்சன மாட்டித்
தூய்மைப் படுத்துதல் வேண்டப்படுவதன்று. அன்பினில்
ஆடுதலையே அவர் விரும்புவராதலின் இங்கு இவரது திருவாய்நீர்
மஞ்சனத்தை விரும்பி ஏற்றனர் என்ற கருத்துப் புலப்பட இங்கு
இப்பெயராற் கூறினார். 806 பார்க்க. இத்தன்மையினைப் பின்னர்
818-ல் "விமலனார்" என்று திண்ணனார் திருவாக்காற் குறிப்பதும்
காண்க. அவர் இயல்பாகவே பாசங்களினீங்கியவர்; திண்ணனார்
பொருவில் அன்பு உருவமாயினவர். ஆதலின் இவரது வாய்நீரால்
அவரது தூய்மை அநுசிதப்படவில்லை என்பதும் குறிப்பு. "யாவையும்
சூனியஞ் சத்தெதிராதலின்" என்றபடி, சத்தின்முன் அசத்து
விளக்கமுறாது. இங்கு இந்த அன்பாகிய சத்து விளக்கிட உணராத
விடத்துச் சிவகோசரியார் இச்செயல்களை அநுசிதமென்றனர்.
பின்னர் இறைவனார் "அவனுடைய வடிவெல்லா நம்பக்கலன்பு"
(806), "அவனுடைய செயலெல்லா நமக்கினியவாம்" என்று காட்டவே
(807), இவை தூயனவாகிய பரிசெல்லாங் காண்கின்றார்.

     விட்டார் - உமிழ்ந்தார் - மஞ்சனமாக வார்த்தார். மஞ்சன
மாட்ட எண்ணி நதியின் நீரினை வாயினில் கொண்டார் (770) என
உரைத்தபடி, இவர் இந்நீரினைக் கொண்டு அபிடேகம் செய்வதாகப்
பாவித்தார். இங்கு விட்டார் என்பது பாவனாபிடேகம் என
ஆகமங்களில் விதித்தபடிக் குள்ளதொரு வழிபாட்டுச் செயல் என்க.
ஒரு வாயின் அளவுமட்டிற் கொண்ட நீர் இறைவனது திருமேனி
முழுதும் ஆட்டுதற்குச் சிறிதும் போதாமையால் இங்குத் திண்ணனார்
அந்த நீரினால் இறைவன் திருமேனி முழுதும் நீராடி
யமைந்தனராகப் பாவித்துக்கொண்டனர் என்பது கொள்ளத்தக்கது.
இறைவனும் அந்தப் பாவனையினுள்ளே நின்று அமர்ந்துகொண்டு
பாவனைப்பயனை அருளினர் என்க. "பாவிப்பார் மனம் பாவிக்
கொண்டானை" என்பது தேவராம். சண்டீச நாயனார் ஆட்டிய
பாலாகிய திருமஞ்சனத்தை வெண்மண லிலிங்கத்
திருமேனியினுள்ளிருந்து, "அன்ப ரன்பின் பாலுளதாய், மூள வமர்ந்த
நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச்சூழ், கோளமதனி னுண்ணிறைந்து
குறித்த பூசை கொண்" டருளியதும் இங்கு உன்னுக. திண்ணனார்
என்ற எழுவாய் மேற்பாட்டியின்றும் வருவிக்க. 123


     1. இத்திருப்பாட்டில் கரிய பெரிய மேகம் இந்திரவில்
ஏந்தியதும், மேகமாகிய வாயினில் நீரினைக் கொண்டதும்,
அதனையே நந்திமலைமேல் உகுத்ததும் திண்ணனாருக்கு மெய்யும்
உருவும் வினையும் பயனும் பற்றிய முற்றுவமமாக அமைந்திருத்தல்
காண்க. நந்தி என்பது இறைவனது பெயராயினமையின் அதுவும்
முற்றுவமத்திற்கு அங்கமாய்ப் பொருந்தி அழகுசெய்து நின்றது.
விளைந்த அன்பு உமிழ்வார்போல என்றதனைத் தனக்குவமை
யில்லாத தனிச்செயல் என்றார். கருவரை காளமேக
மேந்தியதென்ன (664) என்ற விடத்துத் திண்ணனார்க்குக்
காளமேகத்தை உவமை கூறிய கருத்தினைத் தொடர்ந்த விரிவுரை
போல இப்பாட்டு விளங்குகின்றதும் காண்க.