773.
தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங்கா
                                  ளத்தி
மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச்
                               சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார்
                               சேர்த்த
கல்லை யிலைமிசைப் படைத்த வூனின் றிருவமு
                        தெதிரே வைத்து, 
124

     773. (இ-ள்.) வெளிப்படை. வில்லின்மேல் விளங்கிய
செம்மையாகிய கையினையுடைய திண்ணனார் தமது தலையின்மேற்
குடுமியிற் சுமந்து கொண்டு வந்த திருப்பள்ளித்தாமத்தைப் பெரிய
காளத்திமலையின்மேல் எழுந்த தமது பெருமானாருடைய
திருமுடியின்மீது வணங்கிச்சாத்திச் சேர்த்துத்தைத்த சருகு இலைக்
கல்லையிற்கொண்ட ஊனாகிய திருவமுதினை எதிரில்வைத்து, 124

   773. (வி-ரை.) தலைமிசை - தலையின்மேல் உள்ள
குடுமியின்மேல். குஞ்சி மேற் றுதையக்கொண்டார் (770) என்றது
காண்க. உடலில் உயர்ந்தது தலை, அதனின் மேலாகிய உச்சியில்
உள்ளது குஞ்சி. குடுமித்தேவர்க்குரிய திருப்பள்ளித்தாமத்தை
அதனினும்மேலாக வைத்தனர்என்று திண்ணனார் அதைப்போற்றிய
தன்மை குறிக்கப்பட்டதாம். சுமந்த - மிகுதியாக - சுமையாகக்
கொணர்ந்த. "பூவொடு நீர்சுமக்கும் நின்னடியார்", "பூநாளுந்
தலைசுமப்ப" என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     தம்பிரானார் - திண்ணனார் இவரைத் தமது தலைவராக -
இனிய பிரானாராகக் கொண்ட அன்புநிலை குறிக்க இவ்வாறு
கூறினார். "இனிய எம்பிரானார்" (771) என்றுது காண்க.

     முடிமிசை வணங்கிச்சாந்தி - ஒரு கையினில் அம்பும்
வில்லும், மற்ற ஒருகையனில் ஊனமுதும் கொண்டனர் ஆதலின்,
கையால் எடுத்துச்சாத்துதல் இயலாமையின் தமது தலையினைத்
தேவரது திருமுடியின்மேல் வருமாறு நின்று வணங்கித்
தலையிற்கொண்ட திருப்பள்ளித்தாமத்தை அவரது திருமுடியின்மேல்
உதிர்த்தனர் என்க. இதனையே சாத்தி என்றார். வணங்கி என்றது
தமதுமுடி அவர்முடி மேல் வரும்படி வளைந்து குனிந்து - என்க.
வணக்கம் - பூச்சுட்டும்போது வணங்கி அச்செயல் செய்யவேண்டிய
வழிபாட்டு முறையும் குறித்தது காண்க.

     இப்போது நாம் கண்டு தரிசிக்கும் திருக்காளத்தி நாதரது
திருமுடிமீது தமது திருமுடியினால் வணங்கிப் பூக்களை
உதிர்க்கவேண்டுமாயின் திண்ணனார் இக்காலத்து நாம் காணும்
மனித வர்க்கத்தாரின் மிகநீண்ட உடல் நீளத்தின் இரண்டு
பங்குக்குமேல் அதிக நீண்ட திருமேனியுடையரா யிருந்திருத்தல்
வேண்டுமென்பது ஊகிக்க உள்ளது.

     சிலைமிசைப் பொலிந்த - வில்லினை உள்வைத்துப்
பிடித்த. செங்கை - மெம்மையுடைய - அழகிய - திருக்கை.
இலைசேர்த்த கல்லை மிசைப்படைத்த எனமாற்றுக. 124