775.
|
அன்னவிம்
மொழிகள் சொல்லி யமுதுசெய் வித்த
வேடர் மன்னனார் திருக்கா ளத்தி மலையினார்க்
கினிய
நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னு மெழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையிற்
றாழ்ந்தான். 126
|
(இ-ள்.)
வெளிப்படை. அத்தன்மையவாகிய இந்த
மொழிகளைச் சொல்லி அமுதூட்டிய வேடர் தலைவனாரது
உள்ளத்திலே திருக்காளத்தி மலையிறைவருக்கு இனிய நல்ல ஊன்
இன்னமும் வேண்டும் என்று எழுகின்ற பெருத்த ஆசையினைக்
கண்டு, தனது பலவாகிய நீண்ட கரங்களையும் குவித்துப் பகலோன்
மலையிலே தாழ்ந்தனன்.
(வி-ரை.)
அன்ன இம்மொழிகள் - அன்ன - அத்தன்மை
யுடையனவாகிய. அந்த ஆகமங்களில் விதித்த மந்திரங்களின்
கருத்தே பற்றிய தன்மையுடைய என அகரம் உலகறிசுட்டு.
இம்மொழிகள்
- மேலே கூறிய இவையும் இவைபோன்ற
பல இனியமொழிகளும். இவை பலவும் தாயர் தம் சேய்கட்கு
உணவு ஊட்டும் காலத்து அன்பினில் ஊறி இயல்பின் எழுவன
காண்க. 799 பார்க்க.
அமுது
செய்வித்த - ஊட்டிய. ஊட்டி (758) என்ற
விடத்துரைத்தவை பார்க்க. செய்வித்த என்றதனால் இறைவன்
அதனை ஏற்றுக் கொண்டமை குறிப்பாம்.
வேடர்
மன்னனார் -
திண்ணனார், அன்றைக்கு முன்னாளில்
மன்னராகப்பட்டம் சூட்டிக் கொள்ளப்பெற்றவர்.
திருக்காளத்தி
மலையினார் - குடுமித் தேவர்.
இன்னமும்
வேண்டும் - மேலும் ஊட்டவேண்டும்.
காதல்
கண்டு - திண்ணனாரது ஆசையைக் கண்டு. வேடர்
மன்னனார் காதல் என்று கூட்டுக. ஆறாம் வேற்றுமைத் தொகை.
பன்னெடுங்
கரங்கள் - அனேகங் கோடியாகிய நீண்ட கதிர்கள். கரம் - கதிர். கிரணம்
என்பர். கூப்பி - குவித்துக்
கொண்டு. சத்தியைமடக்கி மறைத்துக்கொண்டு.
மலையில்
தாழ்ந்தான் - அத்தமன மலையின்கீழ் இறங்கி
மறைந்தான். நாம் இருக்கும் நில உலகமாகிய அண்டம் சுழல்வதால்
பகலவனுடைய பார்வையினின்று மறைவதைப் பகலவன்
மறைவதாகக் கூறுதல் உலக வழக்கு. கதிரவன் உச்சி
நண்ண (750) என்ற விடத்துரைத்தவை பார்க்க. இரவி ....
எழும்போதில் 783 என்றதும், இவைபோல்வன பிறவும் இவ்வாறே
கண்டுகொள்க.
இனி, இங்கு,
கரம் - கைஎனவும், தாழ்ந்தான்
-
வணங்கினான் எனவும் கொண்டு இவரது அன்பின்
பெருமையைக்கண்டு கதிரவன் தனது பலப்பலவாகிய கைகளையும்
கூப்பிக்கொண்டு மலைமேல் வணங்கினான் என்று பிறிதோர்
பொருள் உரைக்க நின்ற குறிப்பும் காண்க.
காதல்
கண்டு கதிரவன் மலையில் தாழ்ந்தான் என்றது
இன்னமும் அமுதூட்ட வேண்டும் என்ற திண்ணனார்
காதல்கொண்டனர்; அதற்காகப் பகல்போய் இரவு வருதலும்,
இரவுபோய்ப் பகல் வருதலும் வேண்டும்; அவ்வாறு இரவும் பகலும்
வருவதற்கு முறையேதானும் மேலைமலையிற்றாழ்ந்து கீழ்கடலிற்
றோன்றல்வேண்டும்; பின்னர் அவர் காதலித்த ஊன்பெறுதற்கு
அவ்விலங்குகளைக் காட்டுதலும் வேண்டும்; இவ்வாறு
திண்ணனாருக்கு ஊழியம்செய்து அவரருளினைப்
பெற்றுய்வோமென்று கருதியவன்போலக் கதிரவன் தாழ்ந்தனன்
என்றதாம். திண்ணனாரது பெருங்காதல் கண்டு தாழ்ந்தனன் என்க.
தற்குறிப்பேற்ற அணி.
இக்கருத்தைத்
தொடர்ந்துகொண்டு "மாவளைக்க இட்டகருந்
திரைஎடுத்துக் கைகாட்டு வான்போலக் கதிர்காட்டி எழும்போதில்"
(783) என்று கதிரவன் அன்றிரவுகழிந்த விடியற்காலை
எழுவதனையும் தொடர்நிலைத் தற்குறிப்புப்பேற்ற உவமையணியில்
அழகுபெற அமைத்த சிறப்பும் காண்க. 303-ம் பாட்டும் பார்க்க. 126
|