776.
|
அவ்வழி
யந்தி மாலை யணைதலு மிரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி மெய்ம்மையின் வேறு
கொள்ளாச்
செவ்விய வன்பு தாங்கித் திருக்கையிற் சிலையுந்
தாங்கி
மைவரை யென்ன வையர் மருங்குநின் றகலா
நின்றார்.
127 |
(இ-ள்.)
வெளிப்படை. அவ்வழியே அந்திமாலை வரவும்
(திண்ணனார்) இரவிலே சேரும் கொடிய விலங்குகள் இங்குள்ளன
என்று பயந்து உண்மையினின்றும் வேறுபடாத செம்மையாகிய
அன்பினை மனத்தினுள்ளே தாங்கித், திருக்கையிலே (புறத்திலே)
வில்லையுந்தாங்கி இறைவரின் பக்கத்தினின்றும் கரியமலைபோல
நீங்காது நின்றனர்.
(வி-ரை.)
அவ்வழி - கதிரவன் மலையிற்றாழ்ந்த
அவ்வழியிலே அதனைத் தொடர்ந்து.
அந்திமாலை
- அந்தி - செவ்வானம். அந்தியைக் கொண்ட
மாலைக்காலம். அந்தி வண்ணன் என்பது காண்க. கதிரவன் ஒளி
போய் நண்பகல் கழிதலும் மாலை வருதலும் நாட்போதின்
வெவ்வேறு கூறுகள் என்பது குறிக்க அணைதலும் என்றார்.
இவை
யிரண்டிற்கும் வெவ்வேறு தன்மைகளும் குணங்களும் உள்ளன.
இவ்வாறே நாட்கூறுகள், காலக் கூறுகள் பிறவற்றிற்கும் உள்ள
குணத்தன்மை வேறுபாடுகளும் கண்டுகொள்க. ஒளியின் இன்மையே
இருள் என்பது தவறு. ஒளியும் இருளும் வெவ்வேறு பொருள்கள்
என்ற சாத்திர உண்மை இங்கு விளக்கப்படுதலும் காண்க.
ஒளியும் இருளும் பகலுமிரவுமாகிய காலக்கூறுகளில் நிகழும்
பொருள்கள். ஒளியும் இருளும் பிராகிருதமும், காலம் மாயேயமுமாம்.
கங்குல்தான் ... இருளின்கணம் (454), இருள்யாமத்து (455) என்றவை
காண்க.
இரவு
சேரும் வெவ்விலங்கு உள என்று அஞ்சி - இரவு
சேரும் - இரவிலே சஞ்சரிக்கும் இயல்புடைய. இது
கொடுவிலங்குகள் எல்லாவற்றினுக்கு மியல்பாம். கைம்மலை கரடி
வேங்கை யரிதிரி கானம் (756) என்றது காண்க. இவ்விலங்குகளை
யஞ்சியே இவர், துணையின்றித் தனியாய் இருந்த இறைவரைப்
பிரியமாட்டாது (762) வருந்தினார் என்பதும் முன்னர்க் கண்டோம்.
இவ்வாறன்றிச் சேரும் என்றதனை வினைமுற்றாகக்கொண்டு,
இராக்காலம் சேரும் - வரும்; (இங்கு) விலங்குகள் உள என்றலுமாம்;
விலங்கு உள, அவை இரவிற்சேரும் என்று உரைத்தலுமாம்.
விலங்கின் பொதுமை நீக்க வெம்மை என்ற
அடைமொழி
தந்தோதினார்.
சிலையும்
தாங்கி - எய்வதற்குச் சித்தமாக
வில்லைப்பிடித்துக்கொண்டு. அகத்துள்ளே அன்பு தாங்கியதனோடு
கையிற் சிலையும் என உம்மை இறந்தது தழுவியது. உள்ளே அன்பு
தாங்கிய மனமாகிய உட்கரணத்தால் ஏவப்பட்டுப் புறக்கரணமாகிய
கையில் சிலைதாங்கி என்க. இத்தொடர்பை ஈரிடத்தும் தாங்கி
என்ற ஒரே சொற்றந்து பிணைத்து ஒதினார். இஃது ஆசிரியரது
கவிநயமாகிய மரபு என்க. 770-ம் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
மெய்ம்மையின்
வேறு கொள்ளாச் செவ்விய அன்பு -
உண்மைத் தன்மையினைத் தவிர வேறு ஒன்றும் தன்னகத்துப்
பொருந்தாத செம்மையாகிய அன்பு. "தனனெஞ் சறிவது பொய்யற்க",
"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்" என்றபடி பிறரெல்லாம்
கொள்ளும் அன்பு உண்மையினையேயன்றிப் பிறவற்றையும் உள்ளே
பொருந்தக் கொண்டிருப்பன. இவரது அன்பு வேறொன்றினையும்
உட்கலவாத தூய்மையுடையது என்பதாம்.
இனி இதற்கு
இவ்வாறன்றி, மெய்ம்மை - சத்து -
சத்தாந்தன்மை; (இது இறைவனாகிய பொருள்); வேறு கொள்ளா
-
திறவுபடாத; சத்தினிடத்தினின்றும் திரிவுபடாத; செவ்விய
-
வேறுபடாமையாகிய; (செம்மை - செப்பம்; வேறுபடாமையே
செப்பமாம்) என்றுரைத்தலுமொன்று. தாங்கி - சிந்தையில் என
விருவிக்க.
ஐயர்
மருங்கு - குடுமித் தேவரது பக்கல்; ஆறாம்
வேற்றுமைத் தொகை. 752 பார்க்க. மருங்கு நின்று
-
பக்கலினின்றும். அகலா - அகலாது - நீங்காது.
துவ்விகுதி
குறைந்த வினையெச்சம். "முறைகாக்கு முட்டாச் செயின்"
(செங்கோன்மை - குறள்) என்புழிப் போலக் கொள்க.
பக்கலிலிருந்து நீங்காது நின்றனர். மருங்கு நின்று. நின்று
-
ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. உம்மை தொக்கது.
நின்றார்
- நிற்றலையே செய்தார். இருத்தல், படுத்தல்
முதலிய வேறெச்செயலும் செய்திலர். இவ்வாறு வில்லேந்தி நிற்றல்
விலங்குகள் வாராது காவல்செய்தற் பொருட்டு. இந்நாளிலும்
அரசமாளிகைகள் - நிதி நிலயங்கள் முதலியவற்றைக் காவல்
செய்வோர் துப்பாக்கி - கத்தி - முதலிய படைகளை
ஏந்தியவண்ணமாக நின்றபடியும், உலாவியும், காவல்புரியும்
வழக்கினை இங்குவைத்துக் காண்க. "வில்லையேந்திய கையோடும்
... வீரன் ... கங்குல் எல்லைகாண் பளவு நின்றான்;
இமைப்பில னயனம்" என்ற கம்பர் பாட்டுங் காண்க. "அவனே
தானே யாகிய வந்நெறி, யேக னாகி இறைபணி நிற்க"
என்று
சிவஞான போதம் (10-சூத்) உணர்த்தும் இலக்கணத்துக்
கிலக்கியமாய் நின்றார் என்பதும் கண்டு
கொள்க. அதனாலே
மெய்ம்மையின் வேறுகொள்ளாச் செவ்விய அன்பு தாங்கி
என்றதுமாம்.
அகலாநின்றார்
- பக்கலில் நின்றும் அகல்கின்றாராயினார்;
நிகழ்கால வினைமுற்று என்றுரைப்பாருமுண்டு. அது பொருந்தாமை
அறிக. 127
|