777.
சார்வருந் தவங்கள் செய்து முனிவரு மமரர் தாமுங்
கார்வரை யடவி சேர்ந்துங் காணுதற் கரியார் தம்மை
யார்வமுன் பெருக வாரா வன்பினிற் கண்டு
                                  கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிரு ணீங்க
                                நின்றார்.
128

     (இ-ள்.) வெளிப்படை. சார்தற்கரியனவாகிய தவங்களைச்
செய்தும், மேகங்கள் தவழும் மலைகளையும் காடுகளையும்
சேர்ந்தும், முனிவர்களும் தேவர்கள் தாமும் காணுதற்குரியவராகிய
சிவபெருமானை ஆசைமுன்னே பெருக ஆராத அன்பினாலே
கண்டுகொண்ட படியே நேர்பெற நோக்கி நின்றார்; நீண்ட இருள்
நீங்கும்படி நின்றார் (திண்ணனார்).

     (வி-ரை.) சார்வரும் தவங்கள் - விரதம், யோகம்
முதலியன. தவம் - தபித்தல் - வாட்டுதல் - என்ற பொருளில்,
இங்கு உடலைவாட்டிப் புலன்களை ஒறுக்கும் முயற்சியிற்
செய்ப்படுவனவாகிய சாதனங்களைக் குறித்து நின்றொழிந்தது.
அவை வெயிற்காலத்துத் தீயினிடை நிற்றல். குளிர்காலத்து
நீரினிடை நிற்றல், இட்டிகளை இயற்றல் முதலியன.

"மலர்தலை யுலகத்துப் பலபல மாக்கண், மக்களை மனைவியை
                                 யொக்கலை யொரீஇறு,
 மனையும் பிறவுந் துறந்து நினைவருங், காடு மலையும் புக்குக்
                                         கோடையிற்,
 கைம்மே னிமிர்த்துக் காலொன்று முடக்கி, யைவகை நெருப்பி
                                    னழுவத்து நின்றுங்,
 மாரி நாளிலும் வார்பனி நாளிலு, நீரிடை மூழ்கி நெடிது
                                           கிடந்துஞ்,
 சடையைப் புனைந்துந் தலையைப் பறித்து, முடையைத் துறந்து
                              முண்ணா துழன் தாங்கவ
 காயுங்கிழங்குங்காற்றுதிர்சருகும், வாயுவுநீரும் வந்தனவருந்தியுங்,
 களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டுத், தளர்வுறு
                                        மியாக்கையைத்
 தளர்வித் ரம்மை முத்தி யடைவதற் காகத், தம்மைத் தாமே
                                சாலவு மொறுப்பர்...

             
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (19)

என்று பட்டினத்தடிகள் இவற்றை விரித்துரைத்தது காண்க.

     செய்து - செய்தும். சிறப்பும்மை தொக்கது.

     முனிவர் - மனனசீல முடையார். அமரர் - சாவா
மருந்துண்ணல் முதலியவற்றால் மரணத்தைத் தடுத்து
நிற்பவர்வானோர்; இவர்கள் முதலியோரினும் உயர்ந்த நிலை
புடைமையால் முனிவர் முன்வைக்கப்பட்டனர். உம்மைகள்
உயர்வு சிறப்பு.

     வரை அடவி - வரைகளையும் அடவிகளையும். அடவி
மரங்கள் அடர்ந்த காடு, தவங்கள் செய்தும் அடவி சேர்ந்தும்
என்க. செய்து சேர்த்தும், சேர்ந்து செய்தும்,
எனக்
கூட்டியுரைப்பினுமாம். "புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
யுண்டியாயண்ட வாணரும் பிறரும், வற்றி யாருநின் மலரடி
காணா மன்ன!" (செத்திலாப்பத்து - 2) என்பது திருவாசகம்.

     காணுதற்கு அரியார் - அருந்தவங்களாலும்
காண்டற்கரியார். இவை ஆன்மபோத முனைப்பினாற்
செய்யப்படுவன ஆதலின் அரியராயினார். அன்பு மிகுதியால்
ஆன்மபோதம் சிவபோதத்துளடங்கி நின்றவழி இறைவர் எளியராய்
வெளிப்பட்டருளுவர் என்பது எல்லா நூல்கட்குந் துணிபாம்.
"முத்திக் குழன்று முனிவர் குழா நனிவாட - அத்திக் கருளி
அடியேனை யாண்டுகொண்டு - பத்தி கடலுட் பதித்த பரஞ்சோதி"
என்ற திருவாசகக் கருத்தும் உன்னுக. இதுபற்றியே இங்கு
"ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே" எனப்
பின்னர்க்கூறுவது காண்க.

     ஆரா அன்பினிற் கண்டுகொண்டே - மேன்மேல்
வளர்ந்து மீதூரும் அன்பாதலின் அதனுள் இறைவன் வெளிப்பட,
அவனைக் கண்டவண்ணமாகவே. "பாசங்கழித்த கண்களா லரனுருக்
கண்டுகொண்டு" (திருவாத - உப - படலம் - 38) என்பது
திருவிளையாடற் புராணம்.

     நேர் பெற நோக்குதல் - காண்பானும் காட்சிப் பொருளும்
காட்சியும் வேறு தோன்றாமல் ஒன்றாம் வண்ணம் ஊன்றிப்பார்த்தல்.
நின்றார்
- அச்செயலிலே நிலைத்து நின்றனர். மேற்பாட்டில்
அகலா நின்றார் என்றதும் காண்க. மேற்பாட்டால் அவர் நின்ற
புறச்செயலும், இப்பாட்டால் அவர் நின்ற அகச்செயலும் கூறப்பட்டன.

     நீள் இருள் நீங்க நின்றார் - நீள் இருள் - நீண்டு
சென்றதாகிய அவ்விரவு. தலைவனிடத்துப் பணிசெய்யும்
அன்புமிகுதி யுடையார்க்கு அந்தப் பணிவிடைக்கும் தமக்கும்
இடையில் இடையூறாய்த் தடுத்துநிற்கும் காலம் சிறிதேயாயினும்
அது ஊழிபோல நீண்டுக் காட்டும் என்பது அகத்திணையினியல்பாம்.
"மிகுபுலவிப் புனர்ச்சிக்கண் ஊழியா மொருகணந்தான்; அவ்வூழி
யொருகணமாம்" (ஏயர் கோன் - புராண - 268) என்று இதன்
இயல்பை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வைத்து ஆசிரியர்
சுவைபடக் காட்டுவது காண்க.

     நீங்க நின்றார் - நீள் இருள் நீங்குதலை எதிர்பார்த்து
நின்றார். உய்யவந்தான் என்புழிப்போலக் கொள்க. "புலரும் படியன்
றிரவும்" (222) என்றபடி, இந்நீண்ட விரவு நீங்குவதனையும், பொழுது
விடிவதனையும், இறைவனைப் பின்னரும் ஊட்டுவதனையும்
எதிர்பார்த்து நின்றனர். இனி, நீள் இருள் நீங்க - அநாதியே
பந்தித்து உயிருடன் தொடர்ந்த நீண்ட இருளாகிய ஆணவமலம்
நீங்கியதனாலே - முன்னர் அங்கணரது அருட்டிரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கயதனாலே;
நின்றார் - சிவத்தோடொன்றாய் நிலைபெற்றனர் என்ற குறிப்பும்
காண்க. ஆணவமலம் நீங்காதவழிக் கறங்கோலைபோல ஆன்மா
ஒருவழியில் நில்லாது சுழற்சியுறும். "மலங்களைந் தாற்சுழல் வன்றயி
ரிற்பொருமத்துறவே", "வன்மத்திட வுடைந்து, தாழியைப் பாவு
தயிர்போற் றளர்ந்தேன்" என்ற திருவாசகங்கள் காண்க. ஆதலின்
ஆணவமலம் நீங்கியதனால் நின்றார் என்பது.

     நீங்க நின்றார் - மேற் பாட்டில் அகலா நின்றார் என்றார்;
எவ்வகை நின்றாரெனின்? நேர் பெற நோக்கி நின்றார்; எவ்வளவும்
நின்றார் எனின்? நீளிருள் நீங்கு மளவும் நின்றார் என இவ்விரண்டு
பாட்டுக்களும் தொடர்ந்து பொருள் பொருந்த உரைத்துக் கொள்ள
நின்றன.

     நோக்கி நின்றார் .... நீள் இருள் நீங்க நின்றார் -
இருள்நீங்க
- உயிர்கள் இருளை நீங்க என்று கொண்டு, அவர்
நோக்கி நின்றதானால் உலகத்தில் உயிர்கள் அன்பின் நிலைகண்டு
ஆவணஇருள் நீங்கி உய்யுமாறு நின்றார் என்றதொரு குறிப்பும்
காண்க. நீங்கநின்றார் - நின்றாராகிய திண்ணனார் என
வினையாலணையும் பெயராக்கிப் பெரிய மலவிருள் அகத்தினின்று
நீங்கும்படி நின்றவராகிய திண்ணனார் நேர் பெற நோக்கி நின்றார்
என்று பொருள்பொண்டு கூட்டி உரைப்பாருமுண்டு. 128