778.
|
கழைசொரி
தரளக் குன்றிற் கதிர்நில வொருபாற்
பொங்க,
முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயி லொருபான்
மொய்ப்பத்
தழைகதிர்ப் பரிதி யோடுஞ் சந்திரன் றலையு
வாவிற்
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றா
லொக்கும். 129 |
(இ-ள்.)
வெளிப்படை. மூங்கில்கள் சொரியும்
முத்துக்குவைகளின் கதிராகிய நிலவு ஒருபக்கம் பொங்குதலாலும்,
குகைகளிற் பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மணிகளின் செஞ்சுடர்
ஒருபக்கம் மொய்த்தலாலும், அத்தோற்றமானது சந்திரன் தழைத்த
கதிர்களையுடைய ஞாயிற்றினுடனே கூடிக் குழையணிந்த
செவியினையுடைய சிவபெருமானது இந்தத் திருமலையைத்
தலையுவாவிற் சேவிக்க வந்தாற் போன்றிருந்தது.
(வி-ரை.)
தரளக்குன்று - முத்துக்குவை. குன்றுபோற்
குவிந்தன என்பார் குன்று என்றார். கழை -
மூங்கில். மூங்கில்
குறிஞ்சிக் கருப்பொருள்; மூங்கிலிலிருந்து முத்துக்கள்
விளைந்துபடும். வேரல் வினையுங் குளிர்முத்தும் (492) என்ற
விடத்துரைத்தவை பார்க்க. இங்குக் குளிர்முத்து என்றதற்கேற்ப
ஈண்டுக் கதிர்நிலவு என்று சந்திரனுக்குவமித்தார்.
முத்துக்களினின்று வரும் கதிர்கள்வெள்ளியனவாயும்
தண்ணியனவாயும் இருக்கும் என்பது கருத்து.
முழை
- மலைப்பொந்துகள் - குகைகள். இவற்றைப்
பெருவிலங்குகள், மலைப்பெரும் பாம்புகள் முதலியவை தமது
இருக்கைகளாகக் கொண்டு வாழும்.
அரவு
உமிழ்ந்த செய்யமணி . அரவுகளில் உயர்ந்தவை
தம் தலையில் மாணிக்க மணிகளைக் கொண்டுள்ளன வென்பதும்,
அந்த மணிகள் தாமே செவ்விய மிக்க ஒளி வீசுவன என்பதும்,
அரவுகள் இந்த மணிகளை இராக்காலங்களில் வெளியில் உமிழ்ந்து
அவ்வொளியின் உதவிகொண்டு உலாவி இரைதேடி வந்து பின்னர்
அவற்றை மீள உட்கொண்டுவிடும் என்பதும் பழமரபாய்
வழங்கிவரும் உண்மைகள். "ஊருமர வம்மொளிகொண் மாமணி
யுமிழ்ந்தவை யுலாவி வரலாற், காரிருள் கடிந்துகன கம்மென
விளங்குகா ளத்தி மலையே" -(சாதாரி - 7) என்ற
ஆளுடையபிள்ளையாரது இத்தலத் தேவராத்தில் இக்கருத்து
விளங்கி நிற்றல் காண்க.
மணிவெயில்
- சிவந்த அரதனமணிகள் வொளிவீசும்
செஞ்சுடர். வெயில் - சூரியவொளிபோன்ற
செங்கதிர் குறித்தது.
பொங்க
- மொய்ப்ப - பல மணிகளினின்று பலபுறமும்
மிக்குவீசும் மிகுதியும் தொகுதியும் குறித்தன. பொங்குதலால் -
மொய்த்தலால் எனக் காரணப் பொருளில்வந்த வினையெச்சங்கள்
ஒக்கும் என்ற வினைமுற்றுக்கொண்டு முடிந்தன.
தழைகதிர்ப்
பரிதி - (மதியின் கதிர்ப்போலன்றித்)
தழைத்துவீசும் வெங்கதிருடைய ஞாயிறு. தழைத்தலாவது
காலைப்போதிலிருந்து நாட்கூறு மேலேறச் கதிரின் ஒளியும்
வெப்பமும் கூர்ந்து மிகுதல். "காலையே போன்றிலங்கு மேனி;
கடும்பகலின், வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின்,
றாங்குருவே போலுஞ் சடைக் கற்றை" என்று அற்புதத்
திருவந்தாதியில் அம்மையார் ஞாயிற்றின் கதிர் தழைத்துக் காட்டும்
வகையை அழகுபெற எல்லாம் இறைவனது திருமேனியாக
உவமித்துக் காட்டுதல் காண்க.
பரிதி
- சூரியன் - ஞாயிறு. பரிதி, சந்திரன் என்ற
உவமப்பொருள்களின் பொதுத் தன்மையை நினைவுறுத்தற்கு
நிலவு - வெயில் - என்று கூறினார். சந்திரன் பரிதியோடு
சென்றால் ஒக்கும் என மாற்றி உவமத்தை நிரனிறையாக்கிக்
கொள்க.
தலையுவா
- அமாவாசி. சந்திரனும் சூரியனும் உலக
அண்டங்களின் சுழற்சியில் வான வீதியில் நேரிடத்துக்காண நிற்கும்
நாளும், எதிர் எதிர் காண நிற்கும் நாளும் என இரண்டும் உவா
எனப்படும். இவற்றை அமாவாசி, பௌர்ணமி என வழங்குவர்.
மதியின் கலைகள் சேரத்தலைப்படும் காலமாதலின்
அமாவாசியினைத் தலையுவா - என்ற பெயரால்
வழங்குவர் என்ப.
குழை
அணி காதர் - குடுமித்தேவர். சிவபெருமானது
திருச்செவிகளிரண்டில். வலது செவியிற் குழையும் இடது செவியிற்
றோடும் உள்ளன என்பர். குழை மகரமீன் வடிவினதாய் அமைந்த
காதணி.
வெற்பைக்
கும்பிட - வெற்பின் இறைவரைக் கும்பிடலன்றி
வெற்பினையே கும்பிட என்றதும் குறிப்பு. இறைவன் எழுந்தருளிய
இடமாதலானும், இது கயிலையே யாதலானும் இதனை வலம்வந்து
கும்பிடுதல் மரபு. "தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது
கொண்டே" என்றதும் (திருஞான - புரா - 1022) காண்க.
கும்பிடச்
சென்றால் - கும்பிடச் செல்வதாயின் அவ்விரு
சுடர்களது விளக்கங்களின் தோற்த்தை ஒக்கும். தன்மைநவிற்சியை
உள்ளுறுத்த தற்குறிப்பேற்றம். பொங்க - மொய்ப்ப -
அத்தோற்றம் ஒக்கும் என எழுவாய் வருவித்துரைக்க.
திண்ணனார் நீள்
இருள் நீங்க நின்றாராதலின், அவ்விரவின்
இருள் நீங்கும் வகையினைக் கூறுவார், முதலில் இரவின்
முன்பாகத்தில் இருள்கூடிக் கலந்த பகுதியைத் தலையுவாப்போல்
என இப்பாட்டாற் கூறினார். அது கடந்து செல்ல இருள் முற்றிய
நடுஇரவுப் பகுதியை நீலமணிச் சோதியால் இரவிருள்
ஒதுங்கினாற்போல் என வரும்பாட்டாற் கூறுகின்றார். அதன்மேல்,
விடியும் இரவின் பிற்பகுதியைப் பல வொளிகளால்
"இரவொன்றில்லை" எனக்கூறுவார். இவ்வாறு திண்ணனார் குடுமித்
தேவரைக் காவல் செய்யும் இரவு முழுதும் உறங்காமற்கழித்ததனை
அறிவுறுத்தும் சிறப்புக்காண்க. இரவு முழுதும் திண்ணனார் தேவரை
ஆரா அன்பினிற் கண்டுகொண்டே நேர்பெற நோக்கி
நின்றனராதலின், அம்மலையின் அவ்விரவு முழுதினும் அதற்குத்
துணையாகத், தரளமும் மணிகளும் நீலமணிகளும் இமைத்தன;
தீபமரங்களும் மணிவிளக்கொளிகளும் விளக்கஞ் செய்தன;
ஐந்தடக்கிய பெரியோர் தியானவொளியுடன் சோதி விரித்தனர்; என
அம்மலை முழுமையும் இருள் நீங்கியதாய் உணர்வொளி மயமாகக்
காட்டியதும் ஆசிரியரது தெய்வமணக்கும் செய்யும் நயமாம்.
வெற்புக்கும்பிட
- என்பதும் பாடம். 129
|