779.
|
விரவுபன்
மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை
பொங்க
மரகத மொளிகொ ணீல மணிகளு மிமைக்குஞ் சோதி
பொரவிரு சுடருக் கஞ்சிப் போயின புடைக டோறு
மிரவிரு ளொதுங்கி னாலே போன்றுள தெங்கு
மெங்கும். 130
|
(இ-ள்.)
வெளிப்படை. (மேலும்) அங்குப் பொருந்திய
பலவகைமணிகளும் வெளிவிட்ட விரிந்த கதிர்ப்பரப்புப்
பொங்குதலால், மரகதமணிகளும், ஒளிபொருந்திய நீலமணிகளும்
இமைக்கும் சோதியானது, இருசுடர்களாகிய சூரிய சந்திரர்கள்
பொர, அதற்குப் பயந்து ஒளிந்து போயின பக்கங்களிளெல்லாம்
இரவும் இருளும் ஒதுங்கினதுவே போன்ற தோற்றம் எங்கெங்கும்
உள்ளது.
(வி-ரை.)
பன்மணிகள் - முத்தும் அரதனமும் மரகதமும்
நீலமும் ஒழிந்த ஏனை வைர முதலிய மணிகள்.
விரிகதிர்ப்படலை
- விரிந்து வீசுகின்ற கிரணங்களின்
கூட்டம்.கிரணத்தொகுதி. படலை - பரப்பு - விரிவு. பொங்க
-
மிக்குவிளங்க. பொங்க இமைக்கும் சோதி எனக் கூட்டுக.
"கதிர்மணியின் வளரொளிக ளிருளகல நிலவுகாளத்தி மலையே"
என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமுங் காண்க.
மரகதமும்
நீலமணிகளும் - என்க. எண்ணும்மை தொக்கது.
இமைக்கும்
- கண்ணிமைத்தல்போல விட்டுவிட்டு ஒளிவீசும்.
ஒளிபடும் போது கதிர்காட்டுதல். "விலகி வில்லுமிழ்" என்றது காண்க.
பொர
இருசுடருக்கு அஞ்சி - இருசுடரும் அடர, அதனுக்கு
அஞ்சி, சுடர் பொருதலாவது போர்செய்து துரத்துதல்போல இருளை
எதிர்நில்லாது ஓடச்செய்தல்.
இருசுடர்
- சூரிய சந்திரர்கள்.
இரவு
இருள் - இரவும் இருளும். இருளும் இருள் பொதுளிய
இரவும் என மாற்றி உம்மை விரித்துரைக்க. சூரியனாற் றுரத்தப்பட்ட
பகல் இருளும், சந்திரனாற் துரத்தப்பட்ட இரவு இருளும்.
மரகதமும் நீலமணிகளும்
கரிய ஒளிகாட்டும் மணிகளாம்.
ஏனை மணிகளினின்றும் வீசப்பட்ட கதிர்த்தொகுதிகள்
இவற்றின்மேற் றாக்கவே ஒனிக்கதிர் எதிர்வீசும்போது இக்கரிய மணிகள் தமது ஒளி
காணப்பட்டு மறையும் தோற்றம் சூரிய
சந்திரர்களாற் றுரத்தப்பட்ட இருளும் இரவும் ஒருபுடை ஒதுங்கித்
தமது ஒளிகள் விட்டுவிட்டுக் காணுதல் போன்றிகுந்தது என்பதாம்.
மேற்பாட்டிற் பரிதியுடன் சந்திரன் கூடிவந்தாற்போலும் எனக்
கூறினாராதலின் அதனையே தொடர்ந்து அவ்வாறு போந்த
இருசுடர்களும் பொரஇருள் ஒதுங்கினாற்போல என்று இப்பாட்டில்
உவமை கூறினார்.நீலமணிகள் பக்கங்களில் ஒளி வீசுதலால்
இங்ஙனங் கூறினார்.
ஒளியின்முன்
இருள் நில்லா தென்பது சாத்திர உண்மை.
திண்ணனார் நீளிருள் நீங்க நின்றார் (777); அதற்குத் துணையாய்
இருசுடர் போந்தன (778); சுடர் போகவே இருள் ஒதுங்கிற்று (779);
அவ்வாறொதுங்கிய இருள், மேலும் அங்குள்ள வேறு சோதிகளால்
தன் வலிமுற்று மடங்க இராக்கால மென்பதில்லையாயிற்ற (780);
திண்ணனார் நீளிருள் நீங்க நிற்றலுக்கு இவை துணையாகச் சேவகஞ்
செய்தன என்று இம்மூன்று பாட்டுக்களாலும் தொடர்ந்ததோருண்மை
புலப்பட நிற்றலும் காண்க.
பிறிதெவ்வாற்றாலும்
காணுதற்கரியார் தம்மை அன்பினிற்
கண்டுகொண்டே நிற்றலால் அகத்தே சிவவொளிப்பிழம்பு
தோற்றலால் திணிந்த அகவிருள் இல்லை எனும்படியாயிற்று.
அகவிருளில்லை யாயினார்க்குப் புறவிருள் தோற்றாதாதலின்
புறவிருளும் இல்லையென்பதாயிற்று. அகவிருள் நீங்கச் சிவவொளி
துணைசெய்தாற் போலப், புறவிருள் இல்லையாகச்செய்ய மணிகளும்
தீபமரங்களும் பெருஞ்சோதியும் துணைசெய்தன என்பதாம். "கரவி
லுள்ளமாம் விசும்பிடைக் காசற விளங்கும், பரசி லாச்சுடர்க் குதய
மீறின்மையாற் பகலு, மிரவு நேர்படக் கண்டிலர்" (வாதவூரடிகளுக்
குபதேசித்த படலம் 39) என்ற திருவிளையாடற் புராணக்
கருத்தினையும் இங்கு வைத்துக் காண்க. "சிதாதிக்யோ ஹ்ருதாகாசே
ப்ரதிபாதி நிரந்தரம், நாஸ்தமேதி நசோதேதி" என்பது அபியுத்தர்
வாக்கியது.
இப்பாட்டிற்கு
இவ்வாறன்றி, இருசுடருக்கு அஞ்சிப் புடைகள்
தோறும் ஒதுங்கிய இருளை மணிகளின் சுடர்ப்படலையும்,
இமைக்குஞ் சோதியும் பொருதல் போன்றன என்றும், மேற்பாட்டில்
சந்திர சூரியர்களுக்கு முத்துக்களையும் மணிகளையும் ஒப்புக்
கூறியமையின் அதற்கேற்ப அச்சுடர்களுக்குப் பகையாகிய இருளைத்
தமக்கும்பகை எனக் கருதி இருளை அங்கங்குச் சென்றழித்தன
என்றும் உரை கூறுவாருமுண்டு. அஃதுரையன்மை தெளிக. அவர்
இப்பாட்டின் உவமைக் கூற்றின் தேற்றத்தை அறிந்திலர் என்க. 130
|