807.
|
"உனக்கவன்றன்
செயல்காட்ட நாளைநீ
யொளித்திருந்தா
லெனக்கவன்றன் பரிவிருக்கும் பரிசெல்லாங்
காண்கின்றாய்;
மனக்கவலை யொழி" கென்று மாமுனிவர்க்
கருள்செய்து
புனற்சடிலத் திருமுடியா ரெழுந்தருளிப்
போயினார்.
|
158 |
807.
(இ-ள்.) வெளிப்படை. "நாளைக்கு நீ நம்பக்கல்
(அவன் காணாதபடி ஒளித்திருந்தாயாகில், அவனது செயல்களை
நாம் காட்ட (அச்செயல்களினின்று என்னிடத்து அவனுடைய அன்பு
இருக்கும் தன்மையெல்லாம் காண்கின்றாயாகுவை; உனது
மனக்கவலையொழிவாயாக!" என்று பெருமுனிவராகிய
சிவகோசரியாருக்கு அருளிச் செய்து, கங்கையைத் தரித்த
சடைமுடியுடையாராகிய சிவபெருமான் மறைந்தருளினார். 158
807.
(வி-ரை.) நாளை நீ ஒளித்திருந்தால் - பரிவிருக்கும்
பரிசெல்லாம் - அவன்றன் செயல் - உனக்குக் - காட்டக் -
காண்கின்றாய் - என மாற்றி உரைத்துக்கொள்க. காட்ட
-
காட்டுதற்காக, நீ ஒளித்திருந்தால் என்று கூட்டி உரை
கொள்வாருமுண்டு.
நாளை
- அன்றிரவு விடிய வரும்முறை ஆறாம் நாள்
குறித்தது. (810).
ஒளித்திருந்தால்
- திண்ணனார் இவரைக் காணாதபடியும்,
இவர் அவரைக் காணுமாறும் உள்ள நிலையில் ஒளித்திருத்தல்
குறித்தது. பின்னர்க் காளத்தியப்பரின் திருக்கண்ணில் உதிரங்
கண்டு திண்ணனார் "யாரிது செய்தார்? இம்மலையிடை எனக்கு
மாறா மீளிவெம் மறவர் செய்தா ருளர்கொலோ?" என்று வில்
எடுத்து அம்பும் தெரிந்து கொண்டு (815 - 816) மனமழிந்து
கடுஞ்சினத்தோடு தேடும்போது முனிவர் அவர்க்கெதிர் காணப்படின்
பொல்லாது என்று இறைவர் முனிவரை ஒளித்திருந்து காணுமாறு
கட்டளையிட்டனர் என்க.
எனக்கு
அவன்றன் பரிவு இருக்கும் பரிசு - என்னிடத்து
அவனது அன்பு இருக்கின்ற தன்மை. எனக்கு -
என்பால் -
வேற்றுமை மயக்கம். பரிசு - தன்மை - நிலை.
இவை 806-ல் கூறிய
பரிசுகள். எல்லாம் - இப்பரிசுகளைக் காட்டும்
செயல்கள்
812 - 826 வரை உள்ள திருப்பாட்டுக்களால் உரைக்கப்பட்டன.
காட்டக்
காண்கின்றாய் - செயலின் வாயிலாக நாம் காட்ட
நீ காண்பாய். மேற்பாட்டில் "இவ்வாறு; அறி நீ" என்றருளுவார்
அறிவித்துக்காட்டும்முறை இப்பாட்டாற் கூறினார். நாம் காட்டக்
காண்பாயாதலின் பரிவின் நிலை அறிவாய் என்றபடி. "காட்டுவித்தா
லாரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்
காலே" என்பது தனித் திருத்தாண்டகம்.
செயல்
காட்டப் பரிவிருக்கும் பரிசு எல்லாம்
காண்கின்றாய் - பரிவின் பரிசினை - அன்பின் நிலையை - அது
காரணமாக வெளிப்படும் செயலாலன்றி உணரலாகாமையால்,
செயல்களைக் காட்டவே அவைபற்றி அவற்றைத் தூண்டிய பரிவின்
பரிசு கண்டறிந்துகொள் என்றதாம். "அன்பிற்கு முண்டோ
வடைக்குந்தாழார்வலர், புன்கணீர் பூச றரும்" (குறள்) என்றது
காண்க. இதன்படி செயல்களின் வாயிலாகக் காட்டப் பரிவின் பரிசு
ஞானமா முனிவர் கண்டார் என 828-ல் உரைத்ததும்
காண்க.
காண்கின்றாய்
- காண்பாய். தெளிவுபற்றி நிகழ்கால
வினைமுற்று எதிர்காலங் குறித்துவந்தது. "வாராக் காலத்து
வினைச்சொற் கிளவி, இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்று,
மியற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை" (சொல் - வினை - 48)
என்ற தொல்காப்பியத்தா னுணர்க.
ஒழிக
- ஈற்றகரங் குறைந்து நின்றது. மனக்கவலை ஒழிக -
நீ மனத்துட்கொண்ட கவலையை நீக்குவாயாக. இவரது மனக்கவலை
786 - 804 பாட்டுக்களில் உரைக்கப்பட்டது. முன்னை மூன்று
நாள்களிலும் இச்செயல்களை அநுசிதமென்று கொண்டு தாமே
அவற்றைமாற்றிப் பழுது புகுந்தது தீரப் பவித்திரமாஞ் செயல்
செய்து பூசித்த முனிவர் அற்றை நாளில் "உன்னுடைய திருவருளால்
ஒழித்தருள வேண்டுமெனப்"ப் பிரார்த்தித்தனர். "தனக்குவமை
யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற லரிது"
(குறள்) என்றபடி, அவனருளை நாடி அவன்றாள் சிந்தித்தராதலின்
அன்றிரவே மனக்கவலை ஒழிக என்று இறைவர் அருளினார் என்க.
மறைமுனிவர்க்கு
- அந்த முனிவர்க்கு எனச் சுட்டு
விரித்துரைக்க.
புனற்சடிலத்
திருமுடியார் - முன்னர் "மின்றிகழும்
சடைமவுலி வேதியர்" (805) என்றார். மின்போலத் திகழும்
சடையுடையார் என்றதனால் முனிவர்க்கு விளக்கஞ் செய்யவந்தமை
குறிக்கப்பட்டது. இங்குப் புனற்சடிலத்திருமுடியார் என்றதனால்
தம்மை நோக்கித் தவஞ்செய்த பகீரதற்காய்க் கங்கையைத் தாங்கி
உதவியதுபோல, மறைமுனிவர்க்கு அவரது கவலை நீங்கக் கண்ணும்
உதிரமும் காட்டி அவ்வழியே அறிவு கொளுத்தி உதவினார் என்பது
குறிக்கப்பட்டது. வேதார்த்தங்களாய் விரிந்துகிடக்கும் ஆகமங்கள்
சடை என்றும், அவ்வாகமார்த்தங்களை விளக்கவல்ல அருள் கங்கை
என்றும் கூறுவாருமுண்டு. 158
|