781.
|
வருங்கறைப்
பொழுது நீங்கி மல்கிய யாமஞ்
சென்று
சுருங்கிட வறிந்த புள்ளின் சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற கண்டுயி லாத வீரர்
அரும்பெறற் றம்பி ரானார்க் கமுதுகொண்
டணை வேண்டி,
|
132 |
781. (இ-ள்.)
வெளிப்படை. முன்னிரவு நீங்கி அதனோடு
இருள் நிறைந்த யாமமும் கழிந்து சென்று இரவு சுருங்க, இதனை
அறிந்த புட்கள் நிறைந்த தொகுதியாகச் சிலம்புதலின் ஒசையைக்
கேட்டுக், கரிய கடல்போல நின்ற கண்துயிலா திருந்த வீரராகிய
திண்ணனார் தாம் பெறுதற்கு அரியவராய்ப் பெற்ற தமது
பெருமானுக்கு ஊனமுதம் தேடிக்கொண்டு வந்து அணைவதற்கு
வேண்டி, 132
781.
(வி-ரை.) வரும்
- அந்திமாலை (776)யினை அடுத்து
வருகின்ற மாலைக்கும் நடுயாமத்துக்கும் இடையில் உள்ள காலம்.
பையுண்மாலை (304)யின் பின் இருண்டது நீண்டவான் (305)
என்றுரைத்தது காண்க.
கறைப்பொழுது
- கறை - கருமை. கறைப்பொழுது -
கருமையையுடைய காலம். மல்கிய - இருள் நிறைந்த. மல்குதற்கு
எழுவாய் வருவிக்கப்பட்டது. மல்குதல் - தங்குதல் எனக்கொண்டு
அதுகாறுந் தங்கிய யாமம் எனினும் பொருந்தும். யாமம்
- இங்கு
நடுயாமங் குறித்தது. சுருங்கிட - இரவுக்காலஞ்
சுருங்க. எழுவாய்
வருவிவக்க.
அறிந்த
புள்ளின் சூழ்சிலம்பு ஒசை - அறிந்த - இரவு
சுருங்கியதனை அறிந்த. புள் - கோழியும் ஏனைப்புட்களும். "கோழி
சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்", "கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுக ளியம்பின" என்ற திருவாசகங்கள் காண்க. புள்
-
தொகுதியொருமை. தொகுதி - சாதி; ஜாத்
யேகவசனம் என்ற
வடமொழி தமிழில் சாதியொருமை என்பர். சூழ்
- நிறைந்த. சிலம்பு
ஒசை - சிலம்புதலின் உளதாம் ஒசை. சிலம்புதல்
- ஒலித்தல்.
இரவுக்காலம் சுருங்க வைகறைக் காலம் வரும். இப்புட்கள்
வைகறையிற் சிலம்பும் இயல்புடையன. "புலம்பின போதென்று
புட்கள் சிலம்ப" என்று தற்குறிப்பேற்றம் படத் திருமூல நாயனார்
அருளியது காண்க.
கருங்கடல்
என்ன நின்ற கண்துயிலாத வீரர் - முன்னர்
மைவரை யென்ன (776) உருவம்பற்றிய உவமமாக உரைத்த
ஆசிரியர் இங்கு உருவும் வினையும் பயனும் பற்றிய உவமமாகத்
திண்ணனாரைக் கருங்கடல் என்றார். துயிலாமையாகிய
எதிர்மறைத்
தொழிலும், அன்பினின்று பெருகும் அருள் மேகம்
பொழிதற்கிடமாதலின் பயனும்பற்றி உவமை எழுந்தவாறு கண்டு
கொள்க. "பயன்றூக்கார் செய்த உதவி நயன்றூக்கின், நன்மை
கடலிற் பெரிது" (செய்ந்நன்றியறிதல் - 3) என்றபடி இங்குக் கடல்
என்ற குறிப்பும் காண்க. கடல் (நிலப்பரப்பிற்) கிடந்தும் துயிலாது;
இவர் நின்று துயிலாதவர் என்பது. துயலாமை பொது விலக்கணம்.
கடல் துயிலாமை அகப்பொருள்களில் விதந்து பேசப்படும். இங்கும்
அன்பு மீதூர்தல் என்னும் அகப்பொருட்டன்மை பற்றியே துயிலாமை
போந்ததும் காண்க. "ஆர்த்துன் னமிழ்துந் திருவு மதியு மிழந்தவந்,
பேர்த்து மிரைப்பொழி யாப்பழி நோக்காய் பெருங்கடலே" (173),
"ஒங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத், தீங்கணைந்
தோரல்லுங் தேறாய் கலங்கிச் செறிகடலேயாங்கணைந் தார்நின்னை
யும்முள ரோசென் றகன்றவரே" (179) என்ற திருக்கோவையார்த்
திருவாக்குகளும் காண்க. "கயிலை மாமலை மேவிய கடலே"
(செத்-10) என்ற திருவாசகத்தில் இறைவனை மலைமேலிருந்த
கடல் என்றதும் நினைவு கூர்க. கண்துயிலாத
- கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நீள் இருள் நீங்க நின்றார் (777) என்றதனாற்
கண்துயிலாமை பெறப்பட்டமையின் இது இயல்புணர்த்தல்
என்றமட்டில் அமைந்தது. நின்றபடியும் நடந்துகொண்டும் துயில்வார்
உளராதலின் இவர் கண்துயிலாதே நின்றவர் என்ற குறிப்புமாம்.
வீரர் - இவரது பிற வீரங்கள் நிற்க, ஆன்மாவைப் பீடித்து நிற்கு்
தாமதகுணச் செயலாகிய துயிலை வெல்வதும், பிறராற்
காண்டற்கரியராகிய இறைவரைக் கண்டு கொண்டே நிற்பதும்,
"வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையா,
னஞ்சமுது
செய்தருளும் நம்பியென வேநினையும்" முன்னைப் பிறவியின்
செயலினும் மிக்குத் தம்மையுமறந்து இறைவனையே நினையும்
வீரமும் குறிக்க இங்கு வீரர் என்றார். "ஈர வன்பினர் யாதுங்
குறைவிலா ர் வீரர்" (144) என்றது காண்க.
அரும்பெறல்
- பெறுதற்கரிதாகப் பெற்றவர். "அடியனேற்
கிவர்தா மிங்கேயகப்பட்டா ரச்சோ" (755) என்றது காண்க.
"அருமையி லெளிய வழகே போற்றி" திருவாசகம்.
"அரும்பெறன்
மரபிற் பெரும்பெயர் முருக!" திருமுருகாற்றுப்படை.
தம்பிரானார்
- தமக்குப் பெருமான். எம்பிரான் றிறத்து (819)
என்பது காண்க. தமக்குரிமை பாராட்டிய பொருளும்படக் கூறினார்.
கொண்டு
- சித்தஞ் செய்துகொண்டு. உரிய வகையில் தேடிப்
பக்குவப்படுத்தி அமைத்துக்கொண்டு.
அணையவேண்டி
- மீண்டு இவர்பால் அணைதலே
வேண்டினாராய். வேண்டிப் போந்தார் என வரும்பாட்டுடன்
கூட்டிமுடிக்க. வேண்டித் - தொழுது என்று கூட்டி உரை
கொள்வாருமுளர். அது பொருந்தாதென்க.
வைகிய யாமம் - என்பதும் பாடம். 132 |