782. |
ஏறுகாற்
பன்றி யோடு மிருங்கலை புனமான்
மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை வினைத்தொழில்
விரகி
னாலே
யூறுசெய் காலஞ் சிந்தித் துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு வள்ளலைத் தொழுது
போந்தார். |
133
|
782. (இ-ள்.)
வெளிப்படை. ஏறும் குறிய கால்களையுடைய
பன்றியோடும், பெரிய கலையும் புனமான்களும் ஏனைய வெவ்வேறு
விலங்கினமு மாகியவற்றை வேட்டை செய்வினைத் தொழிலின்
தந்திரத்தினாலே கொன்று கைப்படுத்தற்குரிய காலத்தை நினைத்து,
உருவம் மிகத் தெரியாத பொழுதாகிய அதிகாலையில், பகை
எவற்றையும் அழிக்கவல்ல தமது வில்லைனையுங் கைக்கொண்டு,
வள்ளலாராகிய குடுமித் தேவரைத் தொழுது போந்தனர். 133
782. (வி-ரை.)
ஏறுகாற் பன்றி - வயிறு பெரிதாய்க் கீழே
தாழ்ந்துதொங்க, அதற்குள் ஏழுறியதாய்க்காட்டும் குறிய
கால்களையுடைய பன்றி. உடலுக்குத் தக்க காலில்லாமையின்
ஏறுகால் என்றார் என்பர் ஆறுமுகத் தம்பிரானார். செங்குத்தான
மலைகளிலும் ஏறும் காலினையுடைய என்பாருமுண்டு.
பன்றியோடும்
- பன்றியை முன்வைத்து ஓடு உருபுதந்து
ஏனை விலங்குகளையெல்லாம் ஒரு சேரப் பின்வைத்தது இச்சரிதத்
தொடர்பிற் பன்றிக்குலச் சிறப்பு நோக்கி. அடலேனம் புலகரடி (693),
ஏனமோடு மானினங்கள் (727), பன்றியும் புலியுமெண்கும் (652) என
முன்னர் உரைத்தவற்றையும் உன்னுக. இவ்வேடர் முதலியோர் ஏனை
இறைச்சிகளினும் பன்றியிறைச்சியை மிக விரும்பியுண்ணும் இயல்புங்
குறித்தது.
இருங்கலை
- பெரியனவாய்க் கிளைத்து நீண்ட
கொம்புகளையுடைய கலைமான். கலைமான் (728) என்றவிடத்
துரைத்தவை காண்க.
புனமான்
- மலைகளிலும் மலைச்சார்புடைய தாழிடங்களிலும்
தினைப்புன முதலியவற்றை மேய்ந்து வாழும் மான் சாதி.
மற்றும்
வேறுவேறு இனங்கள் - மானின் வேறு பல
வகைகளும், மானல்லாத வேறு விலங்கினங்களும்.
வெவ்வேறென்னாது வேறுவேறு இனங்கள் என்ற
கருத்துமிது.
மானின் பலவகைகளைப்பற்றி 728-ல் பார்க்க. இனங்கள்
இரண்டனுருபு தொக்கது. இனங்களை ஊறுசெய்காலம் என்று
முடிக்க.
வேட்டை
வினைத்தொழில் விரகு - வேட்டைத்தந்திரம்.
வேட்டைவினை - வேட்டையாகிய செயல். தொழில்
விரகு -
தொழிற்குரிய தந்திரம். உபாயம் - சாமர்த்தியம் என்பர்.
வினைத்தொழில் என்று கூட்டி இருபெயரொட்டாக
உரைப்பினுமாம்.
கைம்மைவினை (461) என்றதும் காண்க.
ஊறுசெய்காலம்
- ஊறுபடுத்திக் கொல்வதற்கு ஏற்ற நேரம்.
வைகிருளின் புலர்காலை (705) என்றவிடத் துரைத்தவை காண்க.
ஊறுசெய்தல் - இங்குக் கொல்லுதல் குறித்தது. சிந்தித்து
-
தக்கநேரம் இதுவேயாமென்று நினைத்துத் துணிந்து.
உருமிகத்
தெரியாப் போது - விலங்கினத்தின் உருவம்
தமக்கும், தம் உருவம் அவற்றுக்கும் விளக்கமாய்த் தெரியாத
விடியற்காலம். கழிகின்ற இரவின் இருளும், வருகின்ற பகலின்
ஒளியும விரவியுள்ள காலம்.
மிகத்தெரியா
- உருத்தெரியாத இரவாயின் விலங்கினத்தைக்
கண்டு வேட்டையாட இயலாது. உருத்தெரியும் காலைப்போதாயின்
அவை தம்மைக் கண்டு ஓடி மறைந்துவிடும். ஆதலின் சிறிது
தெரிந்தும் முற்றும் தெரியாமலும் உள்ள நேரமே வேட்டையாடு
தற்குரிய தென்ப்து வேடர் கையாண்ட முறை என்று குறிப்பார்
உருத்தெரியா என்னாது உருமிகத்தெரியா என்றார்.
மாறு
- பகை. அடுதல் - அழித்தல்.
மாறடுசிலை - பகையா
யெதிர்ப்பது எது வாயினும் அழிக்கவல்ல வில். பாரப்பெருவில் (711)
என்றதும் பிறவுங் காண்க.
வள்ளல்
- குடுமித்தேவர். தொழுதுபோந்தார் - பிரிதலின்
வணங்கிப் போயினார். பிரியும்பொழுது வணங்குதல் மரபு.
முன்னரும் "மலர்க்கையாற்றொழுது போந்தார்" (762) என்றது
காண்க. இதற்கு விலங்கினம் அப்புறம் போகவொட்டாமற்
கொல்லுதல் வேண்டித் தொழுதனர் என்றுரை கூறுவாறுமுண்டு.
அஃதுரையன்றென விடுக்க. சுருங்கிட - வீரர் ஓசைகேட்டு
-அணையவேண்டி - சிந்தித்து - போதில் - கொண்டு - தொழுது
போந்தார் என்று முடிக்க. 133
|