முகம்காட்டும்
- முகமண்டலத்தைக் காட்டும். ஒருவர்
முகத்தை மற்றவர்க்கும் காட்டும் என்று கூறுதலுமாம். முகம்
ஆகுபெயராற் கண்ணை யுணர்த்திற்று எனக்கொண்டு கண்ணுக்குப்
பொருள்களைக் காட்டும் என்றலும் பொருந்தும்.
தேன்இரவி
- வெவ்வேறாகிய ஏழு நிறமுள்ள
ஏழுகுதிரைகளைப் பூட்டிய ஒற்றைச் சக்கரமுடையதோர் தேரில்
சூரியன் ஊர்ந்து வருவதாகக் கூறுதல் மரபு. 303 பார்க்க.
மெய்
காட்டும் அன்புடைய - "மெய்ம்மையின் வேறு
கொள்ளாச் செவ்விய அன்பு" (776) என்றதும் ஆண்டுரைத்தவையும்
காண்க. மெய் - சத்து - இறைவன்; மெய்
காட்டும் -
இறைவனைத் தமக்குள் அமையக் காட்டும் என்றுரைத்தலுமாம்.
"உள்ளத்திற் றெளிகின்ற வன்பின் மெய்ம்மை யுருவினையு
மவ்வன்பினுள்ளே மன்னும், வெள்ளச் செஞ் சடைக்கற்றை நெற்றிச்
செங்கண் விமலரையு முடன்கண்ட" (திருஞான - புரா - 1023)
என்றது காண்க.
வில்லியார்
- வில்லையுடைய திண்ணனார். தனி - ஒப்பற்ற.
தனித்துச் சென்ற என்றுரைப்பாருமுண்டு. எய் -
முள்ளம் பன்றிகள்
நிறைந்த என்றுரைப்பாருமுளர்.
மாவளைக்க
இட்ட கருந்திரை - வேட்டையாடுமுன்
விலங்குகள் தப்பி ஓடாமல் வேட்டைக் காட்டை வ்ளைத்துக் காவல்
செய்தல் குறித்தது. 724 பார்க்க. உருமிகத் தெரியாப்போதிற்
போந்தாராதலின் இரவி எழுந்து, முன் மூடிய கருந்திரையை
எடுத்துக் கையினால் விலங்குகளைச் சுட்டிக் காட்டுவான்போலக்
கதிர்களை விரித்துக் காட்டினான் என்க. தற்குறிப்பேற்ற உவமை.
கதிர் - கரம் எனவும்படும். இச்சிலேடைப்
பொருள்படக்
கைகாட்டுவான் போலக் கதிர்காட்டி
என்றார்.
குடுமித் தேவர்க்கு
இன்னமும் ஊன் ஊட்டவேண்டுமென்ற
திண்ணனாரது ஆசைகண்டு மலையிற்றாழ்ந்தானாதலின் (775),
அச்செயலைத் தொடர்ந்து அவர் ஆசைப்பட்ட ஊன் பெறும்
வழியைக் காட்டுவானாகி, அவ்வூன் உள்ள விலங்குகளை
மறைத்துநின்ற திரையை எடுத்துக் கைகாட்டுவான் போல என்று
தொடர் நிலைத் தற்குறிப்பேற்ற உவமையாகக் கூறினது காண்க.
காட்டி னமர்விளைக்க என்றும் பாடங்கொள்வர்.
எழும்போதில்
- கொண்டு - அணைந்தார் என வரும்
பாட்டுடன் கூட்டிமுடிக்க. 143