785.
வந்துதிரு மலையின்கண் வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மததோடுஞ் செல்கின்றார் திருமுன்பு
வெந்தவிறைச் சியுமெலும்புங் கண்டகல மிதித்தோடி
"யிந்தவது சிதங்கெட்டே! னியார்செய்தா?"
                           ரென்றழிவார். 136

     785. (இ-ள்.) வெளிப்படை. திருமலையில் வந்து தேவர்
பெருமானது பக்கத்தில் சிந்தை நியமத்துடனே செல்கின்றவராகிய
அம்முனிவர், வெந்த இறைச்சியும் எலும்பும் சன்னிதானத்திற்
கிடக்கக் கண்டு, தூரத்தே தாண்டி மிதித்து ஓடிப்போய், "ஓ!
கெட்டேன்! இந்த அநுசிதத்தை யாவர் செய்தனர்?" என்று
மனமழிவாராகி, 136

     785. (வி-ரை.) திருமலையின்கண் வந்து - எனமாற்றுக.
வானவர் நாயகர் - தேவரை நடத்துபவர். "யாதோர் தேவ
ரெனப்படு வார்க்கெலா, மாதே வன்னலாற் றேவர்மற் றில்லையே"
என்ற திருக்குறுந்தொகையுங் காண்க. மருங்கு - பக்கம்.
"நம்பக்கலன்பு" என்றதுகாண்க.

     சிந்தை நியமம் - சிந்தையினது நியமம். ஆறாம்
வேற்றுமைத் தொகை. செயப்படுபொளில் வந்தது. இதனைக்
கர்மணிசட்டி என்பது வடவர் வழக்கு. "சிந்தையை யடக்கியே சும்மா
விருக்கின்ற" (தாயுமானார்) என்பது காண்க. சிந்தையினடக்கமாவது
புறப்பொருள்களைப்பற்றிய சங்கற்ப விகற்பஞ் செய்யும் சிந்தையைச்
சிவன்பால் வைத்தல். "சிந்தனை நின்றனக்காக்கி" என்ற திருவாசகம்
காண்க. "சிவாநுபவஞ் சுவாநு பூதிகமாம்" என்ற சித்தியார் உரை
பார்க்க. சிந்தைக்குரியதாய் - சிந்தையினாற் செய்யப்படுவதாய் -
விதிக்கப்பட்டநியமம். அவை சிவத்தோடொன்றவைத்திருத்தல்,
சாந்தமுடைமை முதலாயின. நியமம் - அடக்கம் - வரம்பு.
சிந்தையின் நியமம் கூறவே, ஏனை - வாக்கு - உடல் நியமங்களும்
உடன் கொள்ளப்படும்.

     செல்கின்றார் - (மனம்) அழிவார் - அலமந்தார் என
வரும்பாட்டுடன் கூட்டுக.

     வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு - இவை திண்ணனார்
குடுமித் தேவரை ஊட்டிப் பாவனையினால் அவர்
உண்டருளியனவாகக் கொண்டவை.

     அகலமிதித்து ஓடி - அநுசிதப் பொருள்களாதலின் அவை
காலிற்படாதபடி தூரத்து எட்டி அடிவைத்து.

     கெட்டேன் - இந்த அநுசிதம் யார் செய்தார் என்று
பொருள் தொடர்ந்து செல்லாதபடி, கெட்டேன் என்ற அவலச்சொல்
குறுக்கிட்டது முனிவரது உள்ளப் பதைப்பின் மிகுதியை
உணர்த்திற்று. 136
.