786.
"மேவநேர் வரவஞ்சா வேடுவரே யிதுசெய்தார்;
தேவதே வேசனே! திருமுன்பே யிதுசெய்து
போதவே! யிவ்வண்ணம் புகுதநீர் திருவுள்ள
மாவதே?" யெனப்பதறி யழுதுவிழுந் தலமந்தார். 137

     786. (இ-ள்.) வெளிப்படை. திருமுன்பு நேர்பொருந்த
வருதற்கு அஞ்சாத வேடர்களே இது செய்தாராதல் வேண்டும்;
தேவதேவீசனே! உமது திருமுன்பிலேயும் இவ்வநுசிதத்தை அவர்கள்
செய்து போவதா? இவ்வண்ணம் அதுசிதம் வந்து புகுவதற்கும்
தேவரீர் திருவுள்ளம் செய்வதா?" என்று பதறி விழுந்து மிக்க
துன்பமடைந்தார். 137

    786. (வி-ரை.) நேர் மேவ வர அஞ்சா - எனமாற்றுக.
மேற்பாட்டிற் கூறியபடி உள்ளமழிந்து மிகப்பதைத்தமையால்
சொற்கள் தடுமாறி முன் பின்னாயின. மேவ நோவா என்று
பாடங்கொண்டு சன்னிதிமுன் வருவதற்கு மனம் நோவாத என்றும்,
அஞ்சா - அஞ்சா இயல்புடைய என்றும் உரைப்பாருமுண்டு. ஓசை
ஒழுங்கு செவ்வே செல்லாமையானும் பிறவாற்றானும் இப்பாடத்தின்
பொருத்தம் ஆராயத்தக்கது.

     கோயில் அமைப்பும் பிரதிட்டை பூசை முதலியனவும் வகுத்த
சிவாமங்களுள் சன்னிதானத்திற் பொருந்த இன்னார்இன்ன
அறுவுமேவ வருதல் கூடுமென்று விதித்தலால் நேர் வரத்தகாத
வேடர் சிவாபராதத்திற்கு அஞ்சாது வந்தனர். எனச் சிவகோசரியார்
மனமுடைந்தனர். சிவாகம விதிப்படி பூசித்தாராதலின் அவ்விதியைக்
கடந்த செய்ல் நாணச் சகியாதவராயினர் என்க. அஞ்சுதல் -
பழியச்சம். தம்பால் அச்சமு மருளு மென்று மடைவிலார் (656)
என்றபடி கொலை யஞ்சாவேடராதலின் நேர் மேவ
வருதலாலுளதாகும் சிவாபராதமாகிய பழிக்கு மஞ்சாராவர். ஆதலின்
அவரே இது செய்தாராதல் வேண்டும் என்றனுமானித்தனர்
சிவகோசரியார். மேற்பாட்டில் "யார் செய்தார்?" என்ற எண்ணம்
வந்தது; செய்தாரைக் கண்டிலர்; செயலைக் கண்டனர்; திருமுன்
இவை கிடக்கச் செய்தலின் நேர்வர அஞ்சாமையும் கிடக்கும்
பொருள் வெந்த இறைச்சியுமெலும்பு மாதலின் கொலையஞ்
சாமையும், அச்செயலுக்குள்ளே கண்டார்; இவையுடையார்
வேடுவராதலின், இங்கு இது செய்தார் அவ்வேடுவரே
என்பதானுமானத்தாற் றுணிந்தனர். வேடுவரது அடையாளமாகிய
செருப்பும் நாயடியும். இதற்குத் துணை செய்தன என்க. இவ்வாறே
"அனறிது செய்தானின்றும் அவன் செய்த தாகும்" (758) என்று
நாணன் துணிந்ததும் காண்க.

     செய்தார் - செய்தாராதல் வேண்டும் என்ற துணிபு குறித்தது.

     தேவதே வீசனே - பெருந் தேவர்க்குந் தேவராய்,
அத்தேவர்கள் சிவாபாரதம் செய்தபோது அவர்தம் பிழைகளுக்குரிய
தண்டஞ்செய் தொறுக்கும் தேவரீர் இவ்வேடர்கள் திருமுன்பு செய்த
இவ்வபசாரதத்துக்குத் தக்க தண்டனை கொடுக்கும் வன்மையும்
தன்மையு முடையீர் என்பது குறிப்பு. தேவதேவேசனே எனக் குண
சந்தியாய் வருதற்பாலது இவ்வாறு திரிந்து நின்றது மருஉ. "இடையுரி
வடசொலி னியம்பின கொளாதவும்" என்ற விதியாற் கொள்க.
தேவதேவ! - தேவர்களுக்குந் தேவ! ஈசனே - ஆளுபவனே! எனப்
பிரித்துரைத்தலுமாம். பவுட்க ராகமத்தில் "பகவன்
தேவதேவேசப்ரஹ்ம விஷ்ண்விந்த்ர நாயக" என முதலில் வரும்
சுலோகத்துக்கு, "தேவதேவா" என்பதனை உம்மைத் தொகையாகக்
கொண்டு, முதல் தேவ பதம் பிறப்பால் தேவரையும், இரண்டாவது
தேவபதம் கர்ம தேவரையும் உணர்த்து மெனவும், ஈச என்பது
அவ்விரு வகைத் தேவரையும் நடத்துவோனே எனவும் பொருள்
கூறியும்; பின்னர், முதல் தேவ பதத்தைத் தனிச் சொல்லாகக்
கொண்டு, தீவ்ய இதி தேவ :- விளங்குகின்றவன் தேவன்)
ஸ்வாநந்தய பரிபூர்ண:- நித்திருப்தன் என்று பொருள் கூறியும்;
தேவேச ப்ரஹ்ம விஷ்ண விந்த்ர நாயக என்பதற்கு தேவ
தேவர்களாகிய வாசவனாதியர்க்கு, ஈச - அதிபதிகளாகிய, பிரம்ஹ
விஷண் விந்த்ர நாயக - அயன், மால் முதலியோரை நடத்துபவனே
என்று உரை கூறியும் விரித்துரைத்தனர் உமாபதி சிவாசாரியார்.
இக்குறிப்பு ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் எழுதியது.

     திருமுன்பே - திருமுன்பேயும். உயர்வு சிறப்பும்மை
தொக்கது. ஏகாரம் தேற்றம். போவதே - செய்தும், அழிவு பெறாது
போவதா? போவதே - ஆவதே - ஏகாரங்கள் வினா. இது
தகாதென்ற அவல முள்ளுறுத்த வினாப்பொருளில் வந்தன.

     இதற்கு நீர் திருஉள்ளம் ஆவதே - உமது திருவுள்ள
மிசைவில்லாவிட்டால் இது முற்றுப் பெற்று நிகழ்ந்திராது. தக்கயாகம்
போலச் செய்தோனும் செயலும் நாசமுற்றிருப்பர். அவ்வாறன்றி இது
நிகழ்ந்து முற்றுப் பெற்றிருக்கக் காண்டலின் தேவரீர்
திருவுள்ளமிருத்தல் வேண்டும். அவ்வாறு இதற்கும் திருவுள்ளம்
செய்திருப்பதா? "உன்றனக் கழகா ?", "உன்றனக் கினிதே" என்று
திருக் கண்ணப்பதேவர் திரு மறத்தில் நக்கீரதேவர் கூறியது காண்க.

     பதறி விழுந்து அலமந்தார் - சிவாபராதமாகிய அநுசிதம்
சன்னிதியில் நிகழக் கண்ட ஆற்றாமை குறித்தன. அலமருதல் -
மிக்கத் துன்பத்தால் மனஞ்சுழலுதல். 137