787.
பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின் பூசனையுந்
                              தாழ்க்கநான்
இருப்பதினி யென்?" னென்றவ் விறைச்சியெலும்
                             புடனிலையுஞ்
செருப்படியு நாயடியுந் திருவலகான் மாற்றியபின்
விருப்பினொடுந் திருமுகலிப் புனன்மூழ்கி
                      விரைந்தணைந்தார்.
138

     (இ-ள்.) வெளிப்படை. "மலையில் முளைத்தெழுந்த சுடர்க்
கொழுந்தாகிய காளத்தியப்பருடைய பூசனையும் தாழ்க்கும்படி நான்
இங்கே இருப்பதென்ன?" என்று எண்ணி, அந்த இறைச்சியையும்
எலும்பையு முடன்கிடந்த இலையினையும் செருப்படி நாயடிகளின்
சுவடுகளையும் திருவலகினால் மாற்றிய பின்னர், விருப்பத்தினோடும்
திருமுகலியாற்றில் நீர் மூழ்கி விரைந்து வந்தணைந்தனர்.
சிவகோசரியார்.

     (வி-ரை.) பொருப்பில் எழும் சுடர்க்கொழுந்து -
முன்னர்க் கண்டபோது மலை எழு கொழுந்து (754) என்றார்;
இங்குச் சுடர்க்கொழுந்து என்றார். சிவகோசரியார் ஆகமப்படி
பூசித்துத்தியானிக்கும் தவமுடைய முனிவ (784) ராதலின் இறைவரைப்
புறப்பூசையும் அகப்பூசையும் செய்வார். புறப்பூசையில் மலை எழு
கொழுந்தாயும்,
அகப்பூசையில் பேரொளியாயும் வழிபடுவராதலின்
இங்குப் பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தென்றார். மேலும்
மலை சுடர்உருவினதாயின் அதன் கொழுந்து நுனியில் எழுந்து
விளங்கும் என்ற குறிப்பும் காண்க.

     பூசனையும் தாழ்க்க - முன்னர் அநுசிதம் புகுந்ததுவுமன்றிப்
பூசையும் காலத்தாற்றாழ்க்க என்று எச்ச உம்மை இறந்தது தழுவியது.
சிறப்பும்மை என்றலுமாம். தாழ்க்க - தாமதிக்குமாறு.

     இருப்பது இனி என்? - இங்கு இனி இருப்பது
எத்தன்மையாயிருக்கின்றது. என் - குறிப்பு வினைமுற்று. இவ்வகை
அநுசிதம் நேரிடின் விதித்தபடி விரைவிற் பவித்திரம் செய்து
பூசித்தல் வேண்டும்; அவ்வாறு செய்யாமற்றாழ்த்து நிற்பது பிழை
என்பது முனிவர் கருத்து.

     இறைச்சி எலும்புடன் இலை - இறைச்சியும் அதனுள் நின்ற
எலும்பும்கொண்ட தேக்கிலைக் கல்லை (773). இலையை
மாற்றுதலாவது அகற்றுதல்.

     செருப்படியும் நாயடியும் மாற்றுதல் - அவ்வடிச்சுவடுகளும்
அவற்றிற் போந்த அசுத்த முதலியனவும் இல்லையாகும்படி
திருவலகினால் விளக்கித் தூய்மை செய்தல். "ஈங்கொரு வேடுவன்
நாயொடு புகுந்து மிதித்துழக்கி" என்றும், "தொடர்ந்த நாயொடு
தோன்றினன்" என்றும் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தில்
நக்கீரதேவர் உரைத்தவரற்றால், நாயும் திண்ணனாருடன் றொடர்ந்து
வந்தவை பெறப்படும். நாய் வந்த செய்தியை இங்கு ஆசிரியர்
முன்னர்க் கூற வில்லையாயினும் நாயடியும் என்றமையால் ஒரு
நாய் திண்ணனாரைப் பிரியாது பின் றொடர்ந்து வந்தது
என்பதுய்த்துணர வைத்தார். இதற்கு இவ்வாறன்றித், திண்ணனார்
வேட்டைக்கெழுந்து போனவுடன், அந்த இறைச்சியைத் தின்ன வந்த
காட்டிலுள்ள நாய்களின் அடி என்றுரைப்பர் மகாலிங்கையர்.
திருவலகிடுதலாவது திருக்கோயில் முற்றத்திற் காணும்
அநுசிதங்களைப் போக்கி விளக்குதலாம். திருவலகிடும் திருப்பணி
செய்தலின் பயனை "விளக்கினார் பெற்ற வின்பங்மெழுக்கினாற்
பதிற்றி யாகும்" என்று (திருநேரிசை) அப்பர் சுவாமிகள் அருளியது
காண்க.

     விருப்பு - வழிபாடு செய்தலில் வைத்த ஆர்வம்.

     புனன்முழ்கி - முன்னமே மூழ்கி மலரும் புனலும்
முதலாயினவற்றைக் கொண்டு விதிப்படி சிந்தை நியமத்தோடு
வந்தவராயினும், இறைச்சி எலும்பு முதலிய பிணப் பண்டங்களாகிய
அநுசிதங்களைத் தீண்டி மாற்றினாராதலின் அவற்றின்
தொடக்கினால் உண்டாயின இழிவைப் போக்கிக்கொள்ள மீண்டும்
மூழ்கினார் என்பதாம். திருமுகலிப்புனல் உடலுக்கும் உயிருக்கும்
ஒப்பத் தூய்மைசெய்ய வல்லது என்பது மேலுரைக்கப்பட்டது.

     விரைந்து - பூசனையுந் தாழ்க்க நான் இருப்பதென்?
என்றகன்றாராதலின் விரைந்து வந்தனர். 138