788. பழுதுபுகுந் ததுதீரப் பவித்திரமாஞ் செயல்புரிந்து
தொழுதுபெறு வனகொண்டு தூயபூ சனைதொடங்கி
வழுவிறிரு மஞ்சனமே முதலாக வரும்பூசை
முழுதுமுறை மையின்முடித்து முதல்வனார்                         கழல்பணிந்தார்.
139

     (இ-ள்.) வெளிப்படை. பழுது புகுந்ததனா லுண்டாயின
தீங்கைத் தீர்த்தற்குரிய பவித்திரமாகிய செயல்களைச் செய்து
வணங்கிப், பூசைக்குக் கிடைத்த பொருள்களை அமைத்துக்கொண்டு,
நாளுநாளும் வழக்கப்படி செய்யும் தூய பூசையினைத் தொடங்கிக்
குற்றமில்லாத திருமஞ்சனமாட்டுதல் முதலாக வருகின்ற பூசையின்
செயல்களை யெல்லாம் ஆகமங்களின் விதித்த முறைப்படி முடித்து,
முதல்வனாரது திருவடிகளை வணங்கினார் சிவகோசரியார்.

     (வி-ரை.) பழுது புகுந்ததது தீரப் பவித்திரமாஞ்
செயல்
- இறைவன் தூயவுடம்பினன்; அவனது திருக்கோயில்
தூய்மையுடையது; எனவே, அதனைத் தூய்மை செய்தல்
வேண்டுவதெற்றுக்கு? என்பாரை நோக்கிப், பழுது அங்குப்
புகுந்துவிட்ட தாதலின் அதனைத் தீர்க்கப் பவித்திரமாஞ்
செயல்புரிந்து என்றார். பவித்திரம் - தூய்மை - பரிசுத்தம்.
இச்செயல்கள் பவித்திரஞ் செய்வனவாதலின் பவித்திரம்
எனப்பட்டன. "பவித்திர மாந்திரு முண்டத் தானை" (தொழற்பாலதே
யென்னுந் திருக்குறுந்தொகை). பரம் அபரம் ஆகிய சடங்குகளிலும்
தீக்கை முதலியவற்றிலும், தருப்பைப் புல்லால் முடிந்து கைவிரலில்
அணியப்படும் புல்லின் கோவை மோந்திரம் தூய்மை செய்வது
என்ற இப்பொருள் பற்றியே பவித்திரம் என்று வழங்கப்படுவதும்
காண்க. இங்ஙனம் நேர்ந்த குற்றங்கட்குத் தீர்வு பவித்திரம்.
இதனைப் பிராயச்சித்தம் என்று உரைப்பது வழக்கு. இங்குக்
கண்டபடி நேர்ந்தறிவதற்குத் தீர்வாக உள்ள விதிகள்
சிவாகமங்களிற் கூறப்பட்டுள்ளன. அவை புண்ணியாகம் - ஸ்நபனம்
- சாந்தி ஓமம் - செபம் முதலியனவாம். அவையே இங்குப்
பவித்திரம் எனப்பட்டன. இங்ஙனமன்றித் தெரியாது நோந்தவற்றிற்
கெல்லாம் தீர்வாகப் பவித்திரோற்சவம் என்ற உற்சவப் பகுதியும்
சிவாகம விதிகளுட் காணப்படும். நித்தியகருமத்திற் குறைவு
நேர்ந்தவிடத்து அப்போதே செய்யப்படவேண்டுவதாகிய பவித்திரம்
நித்தியாங்க மெனப்படும்.

     செயல்புரிந்து......பூசனை தொடங்கி - நித்திய பூசனையிற்
பழுதுகள் புகுந்தனவாயின், முன்னே அவற்றிற்குத் தீர்வு செய்யும்
சடங்குசெய்து, பின்னர் நித்திய பூசைதொடங்குதல் விதியாதலின்,
பவித்திரமாஞ் செயல் முன் புரிந்து, பூசைணையைப் பின்னர்த்
தொடங்கினார். பூசனை - நித்தியபூசை.

     தொழுது பவித்திரமாஞ் செயல் முற்றியபின் மேலும் பழுதும்
இடையூறும் புகுதாவண்ணம் தொழுது.

     பெறுவன கொண்டு - பெறுவன - அன்றைப் பூசனைக்குக்
கிடைப்பனவாகிய புனல் மலர் முதலியன. கொண்டு - தேடி
அமைத்துக்கொண்டு. பெறுவன கொண்டு என்றதனாற் பெறாதவற்றை
அன்பினால் நிரப்பி என்றதும் கொள்க. "தேடாதன அன்பினி
னிரப்பி" (சண்டீசர் புராண - 37). அன்றைப் "பூசனைக் கேற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு" (784) முனிவர்
முன்னர் அணைந்தாராயினும் அநுசிதமாயினமையின் அவற்றைக்
கழித்தனர்; வேண்டும் பொருள்களை மீண்டும் தேடுதலிற்
காலந்தாழ்க்காது அங்கு அப்போதைக்குக் கிடைத்த மலர்
முதலியவற்றைத் தேடிப் பெற்றனர் என்று குறிக்க இவ்வாறு
கூறினார்.

     வழுவில் திருமஞ்சனமே முதலாக - பரார்த்த பூசையில்,
மூர்த்திகளுக்கு நித்திய பூசையின் முதலிற் செய்யக்கடவன
திருமஞ்சனமும் அதன் முன்பு நின்மா வியங் களைதல்
முதலியனவுமேயாதலின் முதலாக என்றார். வழுவில் - மஞ்சன
மாட்டும் நீரினாலும், ஆட்டும் திறத்தாலும், அது போழ்து செய்யும்
செபம் தியானம் பாவனை முதலியவற்றாலும் வழுவில்லாத. மன
மொழி மெய் என்றிவற்றின் ஒருமைப்பாட்டின் வழுவில்லாத
என்றலுமாம். திருமஞ்சனம் - இறைவன் றிருமேனியை நீராலும்,
விதித்த ஏனைத் திரவியங்களாலும் ஆட்டுதல் அபிடேகம் என்பர்.
"அன்பர் வார்ந்த கண்ணருவி மஞ்சன சாலை" (திருச்சாட்டியக்குடி.
2) என்பது கருவூர்த் தேவர் திருவிசைப்பா.

     வரும்பூசை முழுதும் - திருமஞ்சனத்தின் பின் செய்ய
வேண்டுவனவாகிய திருவொற்றாடை சாத்தல், இலையும் பூவும்
சூட்டி அலங்கரித்தல், அருச்சித்தல், அமுதூட்டல், வலம்வருதல்,
தொழுதல், தியானித்தல் முதலியன. இவைபற்றிய விதிகளைச்
சிவாகமங்களுட் கண்டுகொள்க. திருநீலநக்கர் புராணம் - 9 - 10
திருப்பாட்டுக்களும், பிறவும் பார்க்க.

     முறைமையின் - சிவாகமங்களிற் வகுத்த முறையிலே -
விதிப்படி.

     கழல்பணிந்தார் - இது பூசைமுடிவிற் செய்யும் வணக்கம்.
139