789. பணிந்தெழுந்து, "தனிமுதலாம் பர"னென்று
                            பன்முறையாற்
றுணிந்தமறை மொழியாலே துதிசெய்து, சுடர்த்திங்க
ளணிந்தசடை முடிக்கற்றை யங்கணரை
                            விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி                          னிடைச்சார்ந்தார்.
140

     (இ-ள்.) வெளிப்படை. பணிந்து எழுந்து, "எல்லார்க்கும்
சிவபெருமானே முழுமுதற் கடவுளாவார்"
என்று பலமுறையாலும்
துணிந்து ஒலமிடும் வேத மந்திரங்களினாலே துதித்து,
ஒளியையுடைய சந்திரனை யணிந்த சடைக்கற்றை முடியினையுடைய
அங்கணராகிய காளத்தியப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு,
தணிவுபெற்ற மனமுடைய சிவகோசரியாராகிய திருமுனிவர் தாம்
தவஞ் செய்யும் வனத்திற் சார்ந்தனர்.

     (வி-ரை.) "தனிமுதலாம் பரன்" என்று பன்முறையால்
துணிந்த மறை மொழி
- விசுவகாரணன், விசுவரூபன்,
விசுவாதிகன், விசுவசேவியன் என்பன முதலாக வேதங்களாலே
பலவகையாலும் துணிந்து துதிக்கப் பெற்ற வேதமந்திரங்கள்.
பன்முறையால்
- பல முறைகளாலும். முற்றுமை தொக்கது.
பன்முறையாவன நமக சமகங்களிற் கூறியபடியும் மற்றும் பலபடியும்
சிவபெருமானே முழுமுதற் கடவுள் எனத் துணிந்து துதித்தல்.
இவற்றை, சிவபெருமான் யாவுமானவர்; அவரே யாவுமல்லாதவர்;
சிவனை ஒப்பாரும் அவனின் மிக்காருமில்லை; சிவன்
எண்குணமுடையவர்; சிவபெருமான் ஒருவரே பிற்ப்பில்லாதவர்;
சிவன் வேதாகம் முதலிய எல்லா நூல்களுக்குங் கர்த்தா;
சிவபெருமான் எண்ணிறந்த கண், கால், சிரம் முதலியவற்றை
யுடையவர்; அவர் எல்லா நாமங்களாலுங் கூறப்பட்டு
எல்லாமாயுள்ளார்; அவர் சோதியுட் சோதி; சிறியதிற் சிறியர்;
பெரியதிற் பெரியர்; சிவனே பசுபதி; அவரே தேவதேவர்
என்பனவாகிய வேதவாக்கியங்களிற் காண்க. மறை மொழி -
அதர்வசிகை, சுவேதாசுவரம் முதலியன. இங்குப் பவன் முதலிய
எட்டு நாமங்களாற் றுதித்துப்பூசை முடிவில் அட்டபுட்பம்
சாத்தும்முறை குறிக்கப்பட்ட தென்பாருமுண்டு.

     சுடர்த்திங்கள் - முன்னர்க் குறைந்த ஒளியை மீண்டும்
சிவனருளால் வளரப்பெற்று அந்த ஒளியை யுடைய திங்கள் -
மூன்றாம் பிறைச் சந்திரன். திருவருளாலே வளர்த்த ஒளி என்று
குறிக்கச் சுடர் என்று சிறப்பித்தார்.

     திங்கள் அணிந்தகடை - அங்கணர் - இவ்விரண்டும்
சேரக் கூறியது, இறைவர் தமது திருமுன்பே இவ்வநுசிதம் நிகழப்
பார்த்தனரே என்றெழுந்த முனிவரது மனக்கொதிப்பையும்
பதைப்பையும் மாற்றி அங்கண்மையுடன் அவர்க்கு உண்மையன்பின்
றிறத்தைத் தேற்றம்பெற உணர்த்தியருளும் திருவருளின் அங்கண்மை
பற்றியாம்.

     தணிந்தமனம் - காம முதலிய தீக்குணங்களை யெல்லாம்
வென்று? ஆன்ற சாந்தமுடைய மனம். இது பெருமுனிவர்களது
மனத்தின் நன்மை யென்பார் திருமுனிவர் என்றார்.
இக்கருத்துபற்றியே வரும்பாட்டிற் பெருமுனிவர் என்றதும் காண்க.
முன்னர் 785 - 786 - பாட்டுக்களிற் போந்த கொதிப்பும்பதைப்பும்
முதலியன சைவசீலன் காக்குந் திறந்தின் அன்புபற்றி எழுந்தன
வாதலின்குற்றமாகாமையோடு, தணிந்த மனத்துக்கு மாறுபடா
என்பதாம். "அறத்திற்கே யன்புசார் பென்பவறியார், மறத்திற்கு
மஃதே துணை" என்றதிருக்குறளும் காண்க. "பற்றி லாநெறிப் பரசம
யங்களைப் பாற்றும், செற்ற மேவிய சீலமு முடையராய்த்திகழ்வார்".
(திருஞான - புரா - 1036) என்றதும், "மறைக ணிந்தனை சைவ
நிந்தனை பொறாமனமும்" என்று திருநந்திதேவர் கேட்ட வரமும்
காண்க. முன்னர்க்கொதித்த மனம் பூசையினால் தணிந்த
மனமாயிற்றென்று உரை கூறுவாருமுண்டு.

     விடைகொண்டு - வழிபாட்டின் முடிவில் இறைவனை
வணங்கி விடை பெற்றுச் செல்லுதல் மரபு. அங்கணரை -
அங்கணரிடம். உருபு மயக்கம்.

     தபோவனம் - தவஞ்செய்தற் கிடமாகிய காடு. 140