790. இவ்வண்ணம் பெருமுனிவ ரேகினா; ரினியிப்பான்
மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை
                                தனியாடிச்
செய்வண்ணத் திறமொழிவேன் றீவினையின்
                          றிறமொழிவேன். 141

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு பெருமுனிவர் சென்றனர்;
இனி இங்குக் காட்டினிடத்து, மையினது வண்ணமாகிய கரிய
குடுமியிணையுடைய வனவேடர் தலைவனார் கையினாலே அழகிய
வில்லினை வளைத்துக் கான்வேட்டையைத்தனியாக ஆடிச் செய்யும்
வினைத்திறத்தினை மொழிவேன்; அதனால் தீவினையினது
திறத்தினை ஒழிவேன்.

     (வி-ரை.) இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் - சரித
நிகழ்ச்சியில் (இங்குச் சன்னிதியில்) இவ்வாறாக முனிவரின் பூசைக்
செயல் முறறிய பகுதியை முடித்துக் காட்டி, ஆசிரியர், மேலே
அங்குககாட்டில் திண்ணனாரது வேட்டைவினை
சொல்கின்றாராதலின், இதுவரை கூறிய சரிதப் போக்கை இவ்வாறு
முடித்துக் கொண்டனர்.

     இனி - இப்பால் மேற்சொல்லப்படுவது வேறு பொருள்
என்று குறிக்க இவ்வாறு கூறித் தொடங்குகின்றார்.      

     இப்பால் - இப்பகுதியிலே திண்ணனர் வள்ளலைத் தொழுது
வேட்டைக்குப் போந்த (782) இப்புறத்திலே. இப்போது நமது கருத்து
முனிவர் ஒளித்திருந்த அங்கு நின்றும் இறைவர்க்கு அமுதுபெறும்
பொருட்டு வேட்டைக்காகக் காட்டுக்குப்போன திண்ணனாரிடம்
திரும்பிச் சென்றதனால் இப்பால் என்ற அண்மைச்சுட்டினாற்
கூறினார்.

     மைவண்ணக் கருங்குஞ்சி - மிகச் செறிவாகிய கருமை.
"வண்ண நீடிய மைக்குழம் பாமென" (455) என்றது காண்க.
மைவண்ணம் - உருவம் பெற்ற இருள் என்றலுமாம். "பொன்வண்ண
மெவ்வண்ண மவ்வண்ண மேனி" என்புழிப்போல வண்ணம்
என்றதனை உவம உருபாகக்கொண்டு, மைபோன்ற என்பாரு முண்டு.
மைவண்ண வேடர், கருங்குஞ்சி வேடர் எனக் கூட்டியுரைத்தலுமாம்.

     கை - கையினால், வண்ணச்சிலை கைவளைத்து என
மாற்றுக. சிலைக்கு வண்ணமாவது வலிமை, குறி தவிராது
அம்பினைச் செலுத்தும் நேர்மை, வளைக்க முறியாத தன்மை
முதலியன. வண்ணம் - அழகு.

     வேட்டை தனிஆடி - முன்னைநாள் வந்ததுபோல மற்ற
வேட்டைமக்கள் பலரும் உடனின்றித் தாமே தனியாக
வேட்டையாடி. தனிவேட்டை என்று
கூட்டியுரைத்தலுமாம்.
இதுபோலத் தம்மை முற்றும் மறந்து தேவரையே முற்றுநினைந்து
அவர்க்காகவே தம் அனுபவங்கொண்டு ஆடிய வேட்டை
பிறிதொன்றில்லையாதலின் தனி என்றதுமாம்.

     செய் திற(த்தின்) வண்ணம் என்க. திறமொழிவேன் -
திறமொழிவேன் -
சொற்சிலேடை. திறத்தனை மொழிவேனாதலின்
அத்துணையான் திறத்திணை ஒழிவேனாவேன் என்றதாம். இனிச்
சொல்லப்புகும் வேட்டைவினைத் திறம், முன்னை நாளின்
வேடர்களுடன் கூடியாடிய வேட்டைபோ லல்லாது
பிறிதொன்றிலாசையின்றி இறைவனையே நினைந்து அவனருள்வழி
நிகழும் வேட்டையாதலின் அருட் செயலாயிற்று. கொன்றருளி என
வரும்பாட்டிற் கூறுதலும் காண்க. அருட் செயல்களைக் கூறுதல்
தீவினையை ஒழிக்கும் சாதனங்களில் ஒன்றாமென்பது ஞான
சாத்திரமுடிபு. ஆதலின் இவ்வேட்டை திறம் மொழிவேன். அதனால்
தீவினைத் திறம் ஒழிவேன் என்றார். இவ்வேட்டை, கொலையாகிய
தீவினையாகாது, அதனைச் சொல்கின்ற நமது தீவினையை ஒழிக்கும்
நல்வினையே யாயிற்று என்றபடி. இவ்வாறு கூறிய இதனாற்
பின்வரும் செய்தியினது அருட்சிறப்பை, இதனைப் படிப்போர்
மறந்து வேறு பொருள்பற்றிச் சென்றுவிடாமல் அதனையே ஊன்றி
நினைக்குமாறு செய்வதாம். இது ஆசிரியரது கவிமரபு. "ஒருமணத்
திறத்தி னங்கு நிகழ்ந்தது மொழிவே னுய்ந்தேன்" (173) எனவும்,
"மூவாண்டி னுலகுய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்" (திருஞான
புரா - 54) எனவும் கூறும் மரபு காண்க. 141