791.
திருமலையின் புறம்போன திண்ணனார் செறிதுறுகற்
பெருமலைக ளிடைச்சரிவிற் பெரும்பன்றி
                                 புனமேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை யொளிநின்று
                            கொன்றருளி,  142

     791. (இ-ள்.) வெளிப்படை. திருமலைப் புறத்திலே சென்ற
திண்ணனார் செறிந்து துறுகின்ற கற்களையுடைய பெரிய
மலைகளினிடைச் சரிவிலே புனங்களை மேய்ந்து வருகின்ற
பெரும்பன்றிகளைத் துண்டித்தும், காட்டிலிருந்து ஒருவழியாகப்
போய் ஏறுகின்ற மான்வகைகளை அங்கு அவை தம்மையறியாதவாறு
ஒளியின் கண் நின்று கொன்றருளியும். 142

     791. (வி-ரை.) திருமலை - திருக்காளத்திமலை, 744 -
பார்க்க.

     செறிதுகதல் பெருமலை - செறிந்தனவாயும் முன்னே
நீண்டு துறுகின்றனவாயும் உள்ள பெருங் கற்பாறைகளையுடைய
பெருமலைகள். இவை கிழக்குத்தொடர் மலையிற் காளத்தியை
யடுத்துள்ள பல தனிமலைகள். "அப்பா லெண்ணில்பெருவரைகளிரு
மருங்கு மெங்கும், நிறையருவி நிரைபலவாய்" (1015), "கண்ணப்பர்
திருப்பாதச் செருப்புத் தோய, மானவரிச் சிலைவேட்டை யாடும்
கானும்" (1017) "இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்காளத்தித்
திருமலையிம் மலைகளில்யாதென்று கேட்டார்" (1019) எனவரும்
ஆளுடைய பிள்ளையார் புராணத் திருவாக்குக்கள் காண்க.

     மலைகளிடைச் சரிவு - இரு மலைகளினிடையே சரிவாகிய
தாழ்நத இடங்கள். இவற்றின் மலையினூறிவரும் அருவிநீர்களின்
ஓட்டம் இருத்தலால் மரங்கள் ஓங்கிவளரும். இவையே மலைவாணர்
தினைப்புன முதலியனவும் உண்டாக்குமிடங்களுமாம். சரி - என்பது
பாடமாயின் மலைச்சாரலில் என்க.

     புனம் மேய்ந்தது - தினைப்புன முதலியவற்றை அழித்து
அவற்றின் பயிர்களைத் தின்று. புன்மேய்ந்து - எனப்
பாடங்கொண்டுரைப்பாருமுண்டு. பன்றியை முதலில் வைத்துக்
கூறியதுபற்றி முன் உரைத்தவை பார்க்க. பன்றியிறைச்சிச, மான்வகை
யிறைச்சிகளையே இவ்வேடரும் மலைவாணரும் மிகவிரும்பி
உண்பாராதலின் அவற்றையே முன்னரும் இங்கு சுட்டினார். 782
பார்க்க.

     ஒருவழிச் சென்று ஏறுதுறை ஒளிநின்று - இது
வேட்டைவினையின் ஒரு தந்திரம். பரந்த சாட்டின் பல
பக்கங்களிலும் கூட்டமாக மேய்ந்துவரும் மான் முதலியவை நீர்
குடித்தல், வேறுகாடு மலைகளிற் புகுதல் முதலாகிய
கருமங்களுக்காக வேறிடங்கனிற் போகநேரிடும். அவ்வாறு
செல்லுகையில் சில இடங்களில் அவை செல்ல நெருங்கிய ஒரே
வழிதா னிருக்குமாதலின் அவ்விடங்களில் அவை திரளாகச்
செல்லமுடியாது ஒன்றன்பின் ஒன்றாகவே செல்ல நேரும். அங்கு
மற்றைப்புறத்தில், அவை தம்மைக் காணாதவாறு ஒளிந்திருந்து
அவை ஏறிவரும் அத்துறையில் வரவர ஒன்றொன்றாகக்
கொன்றுவிடுதல் வேட்டைவினையின் ஒரு தந்திரமாம். ஒளி -
மறைவிடம்.

     கொன்றருளி - இங்குக் கொலைச்செயலை அருளி என்றது
குறிக்க. கொலைபாவ வினையாம் என்பது பொதுவிதி. அதுவே
இங்கு அருட்செயலாயிற்று என்றார்; என்னை? விலங்குகளாக
இழிபிறவி எடுத்த இவ்வுயிர்கள் அறிவு விளக்கமின்றிக் காட்டில்
வேண்டியவாறு சரித்துப் பயிர்களையும் உயிர்களையும் அழித்துத்
திரிந்துஒருநாள் இறக்கும்; அவ்வவற்றின் கன்மத்துக்கேற்றவாறு
மீளவும் பிறக்கும்; இவ்வாறு உழலுவதன்றிச்சிவனை உணர்ந்து
தமதுடல் பொருள் ஆவியை அவனுக்குகென்று கொடுத்து
ஈடேறுவது இவற்றுக்குத்கூடாததாம். ஆனால் இங்குத் திண்ணனாரது
திருக்கையினாற் கொல்லப்பட்டமையாலும், இவை சிவனுக்குகந்த
அமுதாம் என்ற அவருடைய பாவனையாலும் செயலாலும்
இவற்றினதிறைச்சி திருவமுதாக வுதவுதலினாலும் சிவபுண்ணியம்
கிடைக்கப்பெற்று இவை உயந்தனவாம். இப்பெரும் பேற்றினை
இவைகட்குக் கொடுத்தலால் இங்குக் கொன்றருளி என்றார்.
விதிக்கப்பட்ட தாவரங்களின், தளிர்,இலை, பூ, வேர், குறடு
என்றிவ்வுறுப்புக்களைக் கொண்டு சிவனுக்குச் சாத்துதல்
சிவபுண்ணியமாகி,அதன் பயன் அத்தாவரங்களும் பெற்றுய்கின்றன
என்ற நூற்கருத்தும் இங்கு வைத்துக் காண்க. (ஒளியினீழலில்)
ஒளியாயிருந்து - சிவமாயிருந்து - கொன்று அருளிப்பாடு தந்தார்
என்றது தொனிப்பொருள். 142