792.
பயில்விளியாற் கலையழைத்துப் பாடுபெற வூடுருவும்
அயில்முகவெங் கணைபோக்கி யடியொற்றி
                              மரையினங்கள்
துயிலிடையிற் கிடையெய்து தொடர்ந்துகட
                              மைகளெய்து
வெயில்படுவெங்கதிர் முதிரத் தனிவேட்டை                         வினைமுடித்தார். 
143

      792. (இ-ள்.) வெளிப்படை. கலைமான்போலக் கூப்பிடும்
பயிலோசையினாலே கூவி, அவைகள் அணுகியபோது அவை
வருந்த அவற்றின் உடலில் ஊடுருவிச் செல்லும் கூரியநுனியுடைய
வெவ்விய அம்புகளைப் போக்கியும், அடிச்சுவடுகளினாற் கண்டு
மரையினங்கள் துயிலுமிடத்தில் அவற்றை எய்தும், கடமைகளைத்
தொடர்ந்து எய்தும், இவ்வாறாக வெயில் தருகின்ற வெப்ப மிகுந்த
கதிர்கள் முதிரத் தனியாகிய வேட்டைத் தொழிலை முடித்தனர். 143    

     792. (வி-ரை) பயில்விளி - விலங்குகள் கூவுவனபோல
ஓசைசெய்தல். இதனைப் பயிலோசை யென்பர். இது வனவேடர்
கைவந்த பழக்கம். இந்நாளிலும் மலைவாணரிடம் இதனைக்
காணலாகும்.

     பயில்விளியாற் கலையழைத்து - விளியோசை கேட்டு
விலங்குகள் அதனைத் தம்மினங்களின் ஓசையென
மயங்கிஉடன்வந்தணைய அப்போது அவற்றைப் பிடித்தும்
வேட்டையாடியும் பயன்படுத்திக் கொள்வது வேட்டைத்
தந்திரன்களில் ஒன்று. இதுவும் இந்நாளிற் காணலாம்.

     அயில்முகம் - கூரியநுனி. வெங்கணை - வெம்மை -
கொடுமை; விளியால் ஏமாற்றி அழைத்து அவற்றை வஞ்சித்துக்
கொல்லுதலா லிங்கு வெம்மை என்றடைமொழி தந்தார்.

     அடி ஒற்றி - அவைகூடித் துயிலும் கிடையை அவற்றினது
அடிச்சுவட்டின் வழியே சென்று அறிந்து. கிடை கிடக்குமிடம்.
"ஓதுகிடை" (சண்டேசர் - புரா -3) என்றதும் காண்க. மான், மரை
முதலிய பிளவுக்குனம்புடைய உயிர்வருக்கங்கள் ஒன்றுகூடி வாழும்
இயல்பினால் அவையிருக்குமிடம் கிடை எனப்படுவது வழக்கு.

     வெயில்படு வெங்கதிர் - வெயில் - இங்கு ஒளி குறித்தது.
உச்சிவரையில் காட்கூறு ஏற ஞாயிற்றின் கதிர்கள்ஒளியும்வெப்பமும்
மிக்குத்தருவன. படுதல் - உண்டாதல்; தருதல். முதிர - முதிரும்
வேலைவர. கதிர்முதிர்தல் 12 நாழிகையளவு ஆதலும் உச்சிவேளை
வருதலும் குறித்தது. "காலையே போன்றிலங்கு மேனி கடும்பகலின்,
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு" என்று அற்புதத்
திருவந்தாதியில் அம்மையார் அருளியவாற்றானும் அறிக. காலையிற்
சிவந்து வெப்பங்குறைந்து காட்டும் வெயிறகதிர்கடும்பகலில் வெள்ளி.
ஒளியும் வெப்ப மிகுதியும் கொள்ளுதல் காணப்படும். "வெம்பந்திய
கதிரோனொளி" (11) என்ற ஆளுடைய பிள்ளையாரது
திருவண்ணாமலைத் தேவாரமும் காண்க. கதிர்முதிர - முடித்தார்
எனக் கூட்டுக.

     தனிவேட்டை - தனியாடி (790), தனிப்பெரு வேட்டை (810).
துணிபடுத்து - கொன்றருளி - கணைபோக்கி - கிடையெய்து -
தொடர்ந்தெய்து - என அவ்வப் பிராணிகளுக் குரியவாறு
செய்வினைகளைவெவ்வேறு உரிய வினைச்சொற்களாற் கூறி
அவ்வினைகளின் வேற்றுமை புலப்படுத்தியது காண்க.
எண்ணும்மைகள் தொக்கன. இங்குக் கூறியன ஏனை
வேடர்களினுதவியின்றித் திருவமுதமைக்கத் தனியாகச் செய்த
வேட்டை வினைத்தொழில்கள். காடுவளைத்தல். மா எழுப்புதல்
பலரும் பலபுறமும் வேட்டையாடுதல் என முன்னர்க் (717-735)
கூறியனதொகுதியாய்கூடிய வேடர்கள், விலங்குகள் மிக நெருக்கி
மீதூர்ந்து வருதலைத் தடுக்கும்பொருட்டு ஆடும் பெருவேட்டை
வினை என்பது காண்க.

     திண்ணனார் - துணிபடுத்து - கொன்றருளி - கணைபோக்கி
- எய்து - எய்து - கதிர்முதிர் -வேட்டைவினைமுடித்தார் என
இவ்விரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. 143