பட்ட
- வேட்டையில் கொல்லப்பட்ட, விலங்கெல்லாம்
ஒரு சூழல் இட்டு - வேட்டையாடிய பின் முதலிற் செய்யப்பட்ட
வேலை அவ்விலங்குகளை ஒன்று சேர்த்தல். இங்கு ஒரு துரையில்
ஒளிநின்று கொன்றும், பயில்விளியாவழைத்துக் கணைபோக்கியும்,
துயிலிடையிற்கிடை யெய்தும், தொடர்ந்து எய்தும், இவ்வாறு பலபடி
வேட்டையாடிக்கொன்றவை பரந்த காட்டில் அங்கங்குக் கிடக்கு
மாதலின் அவற்றைக் கொணர்ந்து ஒரு சூழலில் சேர்த்தல் முதலிற்
செய்யும் வினையாம்.
படர்வனம்
- செறிந்து பரந்த காடு. சூழல் - மரங்கள்
சூழ்ந்த இடம். 789 பார்க்க. மரச்சூழலாகிய இடம் தீயுண்டாக்கி
இறைச்சிகளை வதக்கிப் பக்குவமாக்குதற்குத் தக்க தென்பதாம்.
"அணிநிழற் கேழலிட்டு (748) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
அருகுஇட்டு
என மாற்றுக. எல்லா விலக்குகளையும்
ஒன்றுசேரப் பக்கமாக இட்டு. ஒன்று சேர்த்து எல்லாம் அருகுஇட்டு
என்க. அருகுவெட்டி என்று கூட்டிப் பக்கத்திலே
உள்ள மரத்தில்
தீக்கடைகோல் வெட்டி என்றுரைத்தலுமாம்.
இருஞ்சுரிகை
- வலிய உடைவாள். சுரிகை உருவி
அதுகொண்டு தீக்கடை கோல் வெட்டி என்க. இதுவே பன்றியைக்
குத்தின சுரிகை. "மொய்த்தெழுசுடர்விடு சுரிகை" (740).
கோல்தேனும்
மிக முறித்து - கோற்றேன் - மரங்களிற்
சிறு கிளைகளிலும் செடிகளிலும் சிறுவகைத் தேனீக்கள் ஈட்டும்
தேன்கூடுகள். கூடுசிதைந்து தேன் சிந்தி விடாதபடி அச்சிறு
கிளைகளைத் தேன்கூடுகளுடன் அசைவின்றிக் கையால் ஒடித்தலால்
முறித்து என்றார். இவை சிறு கூடுகளாதலின்
வேண்டுமளவு
தேனைப் பெறுதற்குப் பல கூடுகளை எடுத்தல் குறிக்க மிக
என்றார். பெரு மரங்களின் பெருங்கிளைகளிலும்,
மரப்பொந்துகளிலும், மலைப்பாறைகளிலும் பெருந் தேனீக்கள்
ஈட்டுவன பெருந்தேன் எனப்படும். "இம்மலைப்
பெருந்தேன்" (750),
"அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தை" (திருவாசகம்)
என்பன காண்க. அவை பெரிய அளவுள்ளவை. ஆதலில் தேனும்
அதிகம் தருவன. ஆனால் அவற்றைத் தேடிக் காணலும், அழித்துத்
தேன்பெறுதலும் அரிது. அப்பெருந் தேனீக்கள் பெருந்துன்பமும்
விளைப்பன. கோற்றேன் அவ்வாறன்றிக் காடுகளில்
எங்கும்
இலகுவிற் கிடைப்பன; இவற்றின் ஈக்களும் எளிதில் அகற்றக்
கூடியன; ஆதலின் இவை பலவற்றைத் திண்ணனார் முறித்துப்
பயன்படுத்திக்கொண்டனர் என்பதாம். "கோற்றே னெனக் கென்கோ"
என்ற திருவாசகம் காண்க. கூடு இருக்கும் கிளையை முறித்தலைக்
கோற்றேன் முறித்தல் எனவழங்குதல் மரபு.
முறித்தல்
- மிக அசைவுபடாமல் கையினால் ஒடித்தல்.
இறைச்சிக்காகும் விலங்குகளை அருகு இட்டதுபோல்
அவ்விறைச்சியினுட் பிழிந்து கலக்கும் தேன்கூடுகளையும்
மற்றொருபுறம் பக்கத்தில் அமைத்துக் கொண்டனர்.
வட்டமுறு
பெருங்கல்லை - தேக்கிலையால் வட்டமாகத்
தைத்த பெரிய கொள்கலம். தேக்குமரச் சோலை, மலையின்
அருகிலும் முகலி ஆற்றின் இருகரையிலும் மிக வளர்ந்திருந்தன
என்பது முன்னர் உரைக்கப்பட்டது. 743 முதலியவை பார்க்க.
தேக்கிலை மிகுதியாகவும் அடுத்தும் கிடைப்பதுடன் அளவால்
அகன்று பெரியனவாயும் "இறைச்சிப்பாரந்" தாங்கும்
வலுவுடையனவாயுமுள்ளன. அன்றியும் இறைச்சியிடுவதற்குப்
பொருந்திய கொள்கலமுமாம் ஆதலின் தேக்கிலையாற்
கல்லையமைத்தனர். மருங்கு புடைபட - உள்ளிடம்
பக்கங்களில்
இடம் படவும் வாய்குறுகவும் இருக்க. 144