796. எண்ணிறந்த கடவுளருக் கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணவெரி வாயின்கண் வைத்ததெனக் காளத்தி

யண்ணலார்க் காம்பரிசு தாஞ்சோதித் தமைப்பதற்குத்
திண்ணனார் திருவாயி லமைத்தாரூன் றிருவமுது.
147

     796. (இ-ள்.) வெளிப்படை. எண்ணிறந்த தேவர்களுக்கு
இடுகின்ற உணவைக் கொண்டு சென்று ஊட்டுகின்ற சிவந்த
எரிக்கடவுளது வாயிலே வைத்ததுபோலக் காளத்திநாதருக்கு
ஆகின்ற தன்மையைத் தாம் பரிசோதித்து அமைப்பதற்காகத்
திண்ணனார் திருவாயிலே ஊனாகிய திருவமுதினை அமைத்தார். 147

     796. (வி-ரை.) வைத்ததென.....அமைத்தார் - கடவுளருக்கு
இடும் உணவைக் கொண்டு ஊட்டும் எரி வாயில் வைத்ததெனக்
காளத்தி அண்ணலார்க்கு (ஊன்) அமுது ஆகும் பரிசு
அமைப்பதற்குத் திண்ணனார் திருவாயில் அமைத்தார்.

     எண்ணிறந்த கடவுளர் - சிவபெருமா னல்லாத
ஏனைத்தேவர்கள். இவர்கள் பிரமன் விட்டுணு இந்திரன் வருணன்
இயமன் முதலியோர். இங்குக் கடவுளர் என்றது முதற் கடவுள்
என்ற பொருள் குறியாது தேவர் என்று குறிக்கும் பொதுப்பெயர்
மாத்திரையாய் நின்றது. முப்பத்து முக்கோடி தேவர் என்பது காண்க.
முதற் கடவுளாகிய பதி ஒருவரே என்பது வேத முடிபாகிய
சித்தாந்தமாதலின் இங்கு அதற்கு மாறாய் அநேகேசுவரவாதப்
பொருள்படுமா றில்லையாதல் கண்டுகொள்க.

     கடவுளருக்கு உணவு எரிவாயில் வைத்தல் - இது
அக்கடவுளரைக் குறித்துச் செய்யப்படும் யாகங்களிற் காணப்படும்.
உணவு - உணவை. கொண்டு அதனைக் கொண்டுபோகும்.
கொண்டு ஊட்டும் எரி
- இக்கருத்துப் பற்றியே தீக்கடவுளை
வடநூலார் ஹுதகம் என வழங்குவர்; (ஹுத-ஓமம் செய்யப்பட்டது -
அவி; வகம் - வகிப்பது - தாங்குவது - கொள்வது.) வண்ணவாய் -
எரியினது சிவந்த வாய் - அழகிய வாய் என்றலுமாம். வைத்தது
இறந்தகால இமைடநிலை பெற்றுவந்த துவ்வீற்றுத் தொழிற்பெயர்.
என
- உவம உருபு. எரிவாயில் கடவுளரது உணவை வைத்தலாவது,
அவ்வவர்க்குரிய மந்திரங்களால் எரிவளர்த்து, அவ்வத் தேவர்
பெயராற் கூவி, இதனை உண்க என்று சுவாகாந்தமாகிய
மந்திரங்களைச் சொல்லி, அவ்வுணவை எரிக்கடவுள் வாயின்
வைத்தல். அவ்வாறு வைக்கவே எரிக் கடவுளுடைய வாயின்மூலம்
அவ்வக் கடவுளரும் கொண்டு உவந்து உண்கின்றனர். கொண்டு
ஊட்டும் எரி
- இவ்வாறு கடவுளர் எரிவாயின்கண் உண்பதனையே
எரிக் கடவுள் கொண்டு அவ்வவர்க்கும் ஊட்டுவதாக உபசரித்துக்
கூறினார்.

     திண்ணனார் திருவாயின் - திருவாய்க்கு எரிவாய் உருவும்
பயனும் பற்றி உவமிக்கப்பட்டது. எரிவாய் தன்னுட்பட்ட பொருள்கள்
எவையேயாயினும் அவற்றை முன்னைநிலையாகி. அசுத்தமெல்லாம்
நீக்கித் தூயனவாக்குதல்போலத், தீய இறைச்சியைத் திண்ணாரது
திருவாய் தூயதிருவமுதாக்கிற் றென்பதும் காண்க.
சிவபெருமானுக்குப் புண்ணியக் கங்கைநீரிற் புனிதமாந்
திருமஞ்சனமும், அவர் உவமிக்கும் திருவமுதும் ஆக்குதலானும்,
தூயனவல்லாதவற்றையும் தூயனவாக்குதலானும் திருவாய் என்ற
அடைமொழி புணர்த்தி ஓதினார். உவமித்த எரிவாயினும் இது
உயர்ந்த தென்பார் அதனைச் சிறப்பாகிய அடைமொழியின்றி வாளா
எரிவாய்
என்றார்.

     எண்ணிறந்த கடவுளருக்கு - ஊட்டும் எரி -
எரிவாயினன்றித் தேவர்கள் நேரே அவி உணவு உண்ண இயலாது.
"எரியலா லுருவ மில்லை", "எரிபெ ருக்குவ ரவ்வெரியீசன,
துருவருக்கம தாவ துணிர்கிலார்" எனவரும் தேவாரத்
திருவாக்குக்களாலுணர்த்தப்படுகின்றவாறு எரி அரனாரதுருவாமம்.
ஆதலின் அரன்யாகமுதல்வனா யிருந்து அவியைப் பெற்று அவ்வத்
தேவர்களாலாம் பயனை அவ்வவர் தரச்செய்வன். இதனால்
சிவபெருமானது முழுமுதற் றன்மையும், அன்பின் அவரது
பெருமையும் உடன் குறித்தபடியாம். யாகங்களில் இடும் அவியுணவு
வேதப் பிரமாணமர்கித் தேவர்க்கு இனியவாதல் போலத்
திண்ணனார் ஊட்டும் ஊன் சிவபெருமானுக்கு வேத விலக்காகாது
அந்த அவியுணவினும் உகந்ததாயிற்று என்ற குறிப்பும்பெற
இவ்வாறுவமை கூறிய கருத்துங் காண்க.

     எண்ணிறந்த கடவுளர் என்று ஏனைத்தேவர்களை
யெல்லாங் கூறிய ஆசிரியர், இங்கு அவர்க்கெல்லாம் பெரியராய்த்
தேவதேவ ராவார் இவ்விறைவர் என்று குறிக்க அண்ணலார்
என்றார்.

     சோதித்தமைப்பதற்கு - இனிய பகுதிகள் இவையிவை
என்று சுவைபார்த்து இனியவற்றையே அமைத்தற்கு.

     ஆம் பரிசு - ஆம் - ஆகும். அண்ணலார் உண்ணுதற்கு
ஏற்றவாறு இனியவாகின்ற தன்மையை. வாயில் அமைத்தார் -
வாயிலிட்டுஅதுக்கிச் சுவைபார்த்தனர்.
இறைச்சியாகியதோர்
அநுசிதப்பொருள், மேலும் வாயில் வைத்ததால்எச்சிலாகியதொரு
அநுசிதமுமாயிற்று என்று எண்ணலுறுவார்க்கு அஃது
அவ்வாறன்றாகி உயர்வாகும் படியையும், வேதத்தில் விதித்தபடி
அமைந்த உணவாம்படியையும் இப்பாட்டால் உணர்த்தவும்
இவ்வுவமையாற் கூறினார். "கிஞ்சித் பக்ஷிதமாம்ஸ சேஷகபளம்
நால்யோப ஹாராயதே" என்று பாராட்டிய துதியும் காண்க.

     அமைப்பார் போல் - என்பது பாடமாயின் -
அமைப்பாராய், முற்றெச்சம்; போல் - அசை என்க. 147