797. நல்லபத முறவெந்து நாவின்க ணிடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன் பிழிந்துகலந்
                             ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித் தாமமுந்தூய்
                             மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோ லுடன்கொண்டு
                         வந்தணைந்தார்.
148

     (இ-ள்.) வெளிப்படை நல்ல பதம் பொருந்த வெந்தபின்
நாவினிடத்து இட்டுச் சுவைகண்ட இறைச்சியின் பகுதிகளைக்
கல்லையிலே சேர்த்துத், தேனைப் பிழிந்து கலந்து அதனை
(அமுதாக) அமைத்துக்கொண்டும், மிகவிரைந்து திருப்பள்ளித்
தாமமும் தூயதாகிய திருமஞ்சனமும் முன்னைநாளிற் போலவே
உடன் அமைத்துக் கொண்டும், விரைவாக வந்து அணைந்தனர்
திண்ணனார்.

     (வி-ரை.) நல்ல பதம் உற - பதம் - பதத்தில் வேவ
(767), உறக் காய்ச்சி (795) என்றவற்றினுரைத்தவை பார்க்க.

     வெந்து(பின்) இடும் இறைச்சி - என்று கூட்டுக.
நாவின்கண் இடும்
- நாவினாற் சுவைபார்த்த. "வாலிய சுவைமுன்
காண்பான் வாயினி லதுக்கிப்பார்த்து" (767), "நாவிற் பழகிய இனிமை
பார்த்து" (774), "அடியேனுஞ் சுவைகண்டேன்" (799) என்றவை
காண்க.

     படைத்து - இட்டுச் சேர்த்துக் கூட்டி. "சருகிலை இணைத்த
கல்லை ஏலவேகோலிக் கூட்டி யதன்மிசை யிடுவா ரானார்" (767)
என்ற முன்னைநாட் செயல் காண்க.

     தேன்பிழிந்து கலந்து - முன்னர் "நறுங் கோற்றேனை மிக
முறித்து" (783) என்றபடி முறித்த தேன்கூடுகளின் உள்ள ஈக்களைப்
போக்கி, அக்கூடுகளின் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும்
ஈக்குஞ்சுப் புழுக்களையும் அகற்றித் தேனீக்கள் உணவுக்காக ஈட்டி
அக்கூடுகளின் வேறு தனி அறைகளிற் பொருந்த மூடிச்சேமித்து
வைத்திருக்கும் தேனைப் பிழிந்தனர். இவ்வாறு தேன்கூடுகளின்
அமைப்புக்களை அறிந்து தேனைமட்டும் கண்டு பிழியாதவிடத்து ஈ
குஞ்சுப்புழு முதலியனவும் சேர்ந்து பிழியப்பட்டுத் தேன்
கெட்டுவிடும் ஆகலின் தேன்பிழிந்து என்றார். கலந்தது -
கல்லையில் சேர்த்த இறைச்சிப் பகுதிகள் முழுதும் தேன்
பொருந்தும்படி கலந்து வைத்து. வெந்த ஊனைத் தேனிற் றோய்த்து
உண்ணுதல் வேடர்களின் சிறந்த உணவு விசேடங்களில் ஒன்று.
இவ்வாறு சுவைத்துண்ட முன் அநுபவ உணர்ச்சிகொண்டு, தமது
இனிய உணவே தேவர்க்கும் இனிதாம் என்று திண்ணனார்
ஊட்டுவாராயினார். "விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று,
சுரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த, பெரிய அன்பு"
(திருவிடை மருதூர் மும்மணிக்கோவை - 30) என்று
பட்டினத்தடிகள் இதன் இயலை இலக்கியத்துடன் உணர்த்தி
யருளியது காண்க.

     தேன் இவ்வேடர்கள் உண்ணும் இறைச்சி முதலிய உணவுப்
பண்டங்களுக்கு மணமும் குணமும் தருவதுடன் அவற்றைச்
சீரணிக்கச் செய்வதுமாம் என்ப. அன்றியும் தேன் சுகந்தந்து
உடலைக்காத்து நீண்டநாள் வாழச்செய்யும் உணவாகும் என்பது
மருத்து நூலிற் கண்ட முடிபாம். இவைபற்றி 684-ல் உரைத்தவையும்
பார்க்க.

     கலந்தது - கலந்ததனை. வினையாலணையும் பெயர்.
இரண்டனுருபு தொக்கது. கொண்டும் - உடன்கொண்டும் என
எண்ணும்மைகள் விரிக்க.

     ஒல்லையினில் - நொடிப்பொழுதில், வல்விரைந்துஎன்பது
அவர் வந்தவேகத்தையும், ஒல்லை என்பது வருதலாகிய செயல்
நிகழ்ந்த காலச்சுருக்கத்தையும் குறித்தன.

     அணைந்தார் - மலையடிவாரத்திணை அணைந்தனர். 148