798.
|
வந்துதிருக்
காளத்தி மலையேறி வனவேடர்
தந்தலைவ னாரிமையோர் தலைவனார்
தமையெய்தி
யந்தணனார் பூசையினை முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய பூசனையின்
செயன்முடிப்பார், |
149 |
798.
(இ-ள்.) வெளிப்படை வந்து திருக்காளத்தி மலையினை
ஏறி வனவேடர் தலைவனாராகிய திண்ணனார் தேவர்
தலைவனாராகிய குடுமித்தேவரைச் சேர்ந்து சிவகோசரியாரது பூசை
நின்மாலியங்களை முன்னாளிற்போல நீக்கியபின் முன்னைமுறையிலே
தம்முடைய பூசனையின் செயலை முடிப்பாராய். 149
798.
(வி-ரை.) வந்து - மேலே கூறியவாறு
மலையடிவாரத்துக்கு வந்து.
திருக்காளத்திமலை
- இங்கும் இச்சரிதத்திற் பிற இடத்தும்
மலை என்றலே திருக்காளத்திமலை என்று பொருள்தருமாயினும்,
இம்மலையின் பெயர் சொல்லுதலே பேறு தருவதாம் என்று
காட்டுதற்கு இவ்வாறு கூறினார். இது ஆசிரியர் மரபு. பெயராற்
கூறாவிடினும் திருமலை என்றாவது கூறுவர். திருக்காளத்தி (650,
759), காளத்தி (749, 796), திருக்காளத்திமலை (745, 754, 780),
காளத்திமலை (771), திருக்காளத்தி மலையினார் (775), திருமலை
(744,785,791) என்பன காண்க. இவ்வாறன்றிக், கடவுண் மால்வரை
(750), வள்ளலார் மலை (751, நளிர்வரை (752), மொய்வரை (763),
இறைவர்வெற்பு (771) என்பனவாதி அடைமொழிகளாற் றுதித்தலும்
இவரது பண்பாம். திருக்காளத்தி (803, 809, 811, 813, 821, 827, 830)
எனப் பின்னரும் கூறுதல் காண்க. வேடர் முதலிய பிறர் கூற்றாகக்
கூறுமிடத்து வாளா மலை என்றமைப்பர். இது உலகர் கண்டு
பின்பற்றி உய்யுமாறு கருணைத்திறத்தால் ஆசிரியர் காட்டிய
மரபென்க. திருத்தில்லையைக் கூறுமிடங்களிலும் இவ்வா றடை
மொழிகளாற்றுதித்துச் செல்லும் மரபும் ஆளுடைய நம்பிகள் சரிதம்,
ஆளுடைய அரசுகள், ஆளுடைய பிள்ளையார் புராணங்களினும்,
பிறாண்டும் இவ்வாறே கண்டுகொள்க.
வனவேடர்
தம் தலைவனார் - இமையோர் தலைவனார்
தமை எய்தி - இருவரும் தலைவனார். அவர் அடைபவர் - இவர்
அடையப்படுபவர் என உயிரிலக்கணத்தையும், பதியிலக்கணத்தையும்
எய்தி என்றதனாற் குறித்தது காண்க. ஆனால் திண்ணனார்
வனவேடர் தலைவனார். அவர்களது அரசராவர்
என்றதோடு
"மனிதரிற்றலையான மனிதரே" (திருப்பூவனூர்த் திருக்குறுந்தொகை)
என்றபடி இறைவனையே உள்ளமர்த்தினராதலானும் தலைவனார்
என்ற குறிப்புமாம். வேடர்களுள் வளர்ந்த அரசகுமாரன் என்ற
சிவஞானபோதக் (8-ம் சூத்) கருத்தினையும் இங்குவைத்துச் சிந்திக்க.
பொருட்டன்மையில் இரண்டினுடைய ஒற்றுமையையும் சொல்
ஒற்றுமையாற் குறித்தார். இது ஆசிரியர் மரபு. "நாவரசருழைச்சண்பை
நகரரசர் நண்ணுவார்" (திருஞான - புரா - 930) என்றதும்,
அன்னபிறவும் காண்க.
அந்தணனார்
- "தணிந்தமனத் திருமுனிவர்" (789)
என்றதற்கேற்ப அந்தணனார் என்றார். எவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் என்ற
திறங்குறித்தது.
முன்புபோல்
அகற்றியபின் - முன் அகற்றியமுறையை
"முடிமிசை மலரைக்காலின், வளைத்த பொற்செருப்பால் மாற்றி" (772)
என்றதிற் காண்க. வேட்டையினும் அமுதமைத்தலினும் இற்றைநாட்
செயல் வேறுபட்டமையால் அவற்றை, 791 முதல் 797 வரை,
விரித்துக்கூறிய ஆசிரியர், இங்கு அந்தணரது முன்னை நாட்பூசை
அகற்றும் செயலில் இன்று வேறுபாடின்மை நோக்கி முன்புபோல்
என்றமைந்தார்.
முந்தைமுறை
- முன்னாளிற் செய்த முறையின்படி.
பூசனையின் செயல் - நீராட்டலும் பூச்சூட்டலும்
அமுதூட்டலும்
ஆம். இவற்றினும் முன்னாட் செயலின் வேறுபாடின்மை தோன்ற
முந்தைமுறை என்றார். ஆயின், பூசைமுடிபிலே திருமுன்பிற்
சொல்லும் சொற்களின் மட்டும் முன்னைநாளினின்றும் சிறிது
வேறுபாடுண்மை கருதி முடிப்பார் என்று தொடங்கி
வரும்பாட்டால்
அதனைமட்டும் விரித்துக்கூறும் திறமும் காண்க. அஃதாவது
இன்றையநாளின் வேட்டை வினை - அமுது அமைத்தல்
என்றிவற்றின் வேறுபாட்டினை இறைவனுக்குச் சொல்லி யூட்டுவித்த
திறமாம்.
முடிப்பார்-
முடிப்பாராய் - முற்றெச்சம். முடிப்பார் -
மொழிந்தார் என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
பூசனை
இன் செயல் - பூசையாகிய தேவர்க்கு இனிய செயல்
என்றகுறிப்புமாம். "அவனுடைய செயலெல்லா நமக்கினியவாம்" (806)
என்றது காண்க.
வன
சுரர்கள் - என்பதும் பாடம். 149
|