800. இப்பரிசு திருவமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய் தந்நெறியி லொழுகுவா
ரெப்பொழுது மேன்மேல்வந் தெழுமன்பாற்
                              காளத்தி
யப்பரெதி ரல்லுறங்கார் பகல்வேட்டை யாடுவார்
151

     (இ-ள்.) வெளிப்படை. (திண்ணனார்) இவ்வாறு
காளத்தியப்பரைத் திருவமுது செய்வித்துத் தமது ஒப்பரிய
பூசனையைச் செய்து அவ்வழியிலே ஒழுகுவாராகி, எப்போதும்
மேலும் மேலும் வந்து எழுகின்ற அன்பினாலே காளத்தியப்பருடைய
திருமுன்பு இரவில் உறங்கமாட்டார்; பகலில் வேட்டையாடுவார்.

     (வி-ரை.) தம்முடைய ஒப்பரிய பூசனை - தம்முடைய -
தமக்கே உரியதான. தாம் செய்கின்ற என்றலுமாம். ஒப்பரிய - பிற
எந்தப் பூசனைகளும் நிகராதற்கு அருமையான. பூசைப்
பொருள்களும், அவை சித்தமாக்கிய வகைகளும், அவை
பூசனைக்குப் பயன்பட்ட விதமும், இவை எல்லாவற்றிலும் இவரைத்
தூண்டிச்செலுத்திய அன்பின் றிறமும், அதுதான் விளைந்த முறையும்
என்ற எவ்வகையாலும் பிற எதனாலும் ஒப்பாதற்கு அரியதாயினமை
குறித்தபடி.

     அந்நெறியில் ஒழுகுவார், அல்லுறங்கார்; பகல் வேட்டை
யாடுவார்
- எனக்கூட்டிமுடிக்க. ஒழுகுதற்கு இரவில் உறங்காமலும்
பகலில் வேட்டையாடியும் வந்தார் என்க. அந் நெறியில்
ஒழுகுதல்
- தாம் கேட்டும் கண்டும் அறிந்தவாறு கடைப்பிடித்து
மேற் சொல்லியபடி ஒழுகிய அந்நெறி என அகரம் முன்னறிசுட்டு.

     எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் -
இரவில் உறங்காமைக்கு இரவு சேரும் வெவ்விலங்குகளாற்றுன்ப
நேராமற் றேவரைக்காக்க மேன்மேல் எழும் அன்பு காரணம்.
பகலில் வேட்டையாடுதற்கு அவர் பசிப்பாராதலின் ஊன் ஊட்ட
வேண்டுமென்னும் அந்த அன்பே காரணம். நாள்தோறும்
இடைவிடாது நிகழ்ந்த அல்லுறங்காமையும், பகல் வேட்டையாடுதலும்
என்றிவற்றால் இவ்வன்பு சிறிதும் எய்த்துக் குறைபடாததுடன்
மேன்மேல் அதிகரித்து எழுந்து மேலும் இச்செயல்கள்
நிகழக்காரணமாயிற்று.

     காளத்தியப்பர் - இறைவன்பேர். அப்பர் - மூலகாரணராகிய
கருத்தர். இப்பெயராலே இவர் வழங்கப்படுதல் காண்க.
அவிநாசியப்பர் - அஞ்சை (க் களத்து) அப்பர் என்பனபோலக்
காண்க.

     அல்லுறங்காமைக்குக் காரணம் 776 - 777-லும்,
பகல்வேட்டைக்குக் காரணம் 781-லும் உரைத்தனராதலின் அவற்றை
மீட்டுங்கூறாது செயலைமட்டுங்கூறினார்.

     அல்லுறங்கார் - இரண்டாநாட் பகற்பூசையினை இப்பாட்டில்
மேலே இப்பரிசு திருவமுது செய்வித்து என்று கூறினாராகலின்,
அதனை அடுத்துவருவது இரவினிற் காவல்செய்யும்
தொழிலேயாதலால் அதனை அல்லுறங்கார் என
முன்வைத்தோதினார்.

     இவ்வாறு அல்லுறங்காமை முதனாட்போல, மேல்வரும்
இரண்டாநாள் இரவு முதல் ஐந்தாநாள் இரவுவரை நான்கு நாட்கள்
நிகழ்ந்தன. பின்னர் அம்முறையில் வரும் ஆறாநாளில் முன்னை
நான் "வருமிரவு ஒழிந்தகாலை" (810)ப் பகல் வேட்டை மட்டுமே
நிகழ அன்று திண்ணப்பனார் கண்ணப்பராகி மீளாநெறியில்
திருக்காளத்தியப்பரது வலப்பக்கத்தில் அமர்கின்றாராதலின் பகல்
வேட்டையாடுவார்
என்பதனை அந்நெறியில் ஒழுகும்
ஒழுக்கத்தின் இறுதியிற் பின்வைத்தார். இடைப்பட்ட நாட்களின்
நிகழ்ந்த சரிதத்தின் மற்ற நிகழ்ச்சிகளை 802 முதல் 806 வரை
உள்ள திருப்பாட்டுக்களாலும், ஆறாந் திருநாள் நிகழ்ச்சிகளை 809
முதல் 819 வரை திருப்பாட்டுக்களாலும் கூறுதல் காண்க.

     இரண்டாம்நா ளிரவுமுதல் ஐந்தாநாள் இரவுவரை நான்கிரவும்
மூன்று பகலும் திண்ணனார் செய்த காவலும் பூசையும் முதல்நாள்
இரவிலும் இரண்டாநாட் பகலிலும் போலவே நிகழ்ந்தன என்பதை
இங்கு அந்நெறியில் ஒழுகுவார் - அல்லுறங்கார் பகல்
வேட்டையாடுவார்
என்று சுருக்கிக் கூறி முடித்துக்கொண்ட
திறமும், அவ்வாறே மூன்றாவது நான்காவது ஐந்தாவது நாட்களில்
முனிவர் செய்த பூசைகள் இவ்விரண்டா நாட் பகலிற் போலவே
நிகழ்ந்தன என்பதை அந்நெறியில் ஒழுகுவரால் என்று ஒரு (801)
பாட்டாற் கூறிமுடித்துக்கொண்ட திறமும், இவ்விருவர் பூசைகளும்
மாறாகக் காணினும் சிவநெறியாகிய அன்பு நெறி யொன்றே
பற்றியவை என்றுகாட்ட அந்நெறியி லொழுகுவார் என்று ஒத்த
சொற்றொடர்களால் இரண்டிடத்தும் கூறிய நயமும் காண்க. "ஊனொ
டுண்டனன்றென வூனொ டுண்ட றீதென, வான தொண்ட
ரன்பினாற்பேச நின்ற பெற்றியான்" என்ற ஆளுடையபிள்ளையார்
தேவராமுஞ் சிந்திக்க. 151