801. மாமுனிவர் நாடோறும் வந்தணைந்து வனவேந்தர்
தாமுயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வெய்தித்
தீமையென வது நீக்கிச் செப்பியவா கமவிதியா
லாமுறையி லர்ச்சனைசெய் தந்நெறியி
                          லொழுகுவரால்.
152

     (இ-ள்.) வெளிப்படை பெருமுனிவராகிய சிவகோசரியார்
தினந்தோறும் வந்து அணைந்து வனவேந்தராகிய திண்ணனார்
செய்யும் பூசனைக்கு மிக மிகத் தளர்வடைந்து, அதனைத்தீமை
என்றுகொண்டு ஆகமங்களிற்சொன்ன விதிப்படி நீக்கி, ஆகின்ற
முறையினால் அர்ச்சனைசெய்து, அந்நெறியில் ஒழுகி
வருவாராயினர்.

     (வி-ரை.) மாமுனிவர் - திருமுனிவர் (789), பெருமுனிவர்
(790) என்றவை பார்க்க.

     நாள்தோறும்- இங்குக் குறித்தவை திண்ணனார் தேவரைக்
கண்டபின் மூன்றாவது நான்காவது நாட்களில் ஒவ்வொரு நாளும்.

     வந்து அணைந்து - தபோவனத்திலிருந்து திருமலையில்
இறைவர் திரு முன்புக்கு வந்துசேர்ந்து. முன்னரும்,
கொண்டணைந்தார் (784) என்றது காண்க.

     முயலும் - செய்யும் என்ற பொருளில் வந்தது. பூசனைக்கு -
பூசை காரணமாக, நான்கனுருபு நிமித்த காரண காரியப் பொருளில்
வந்தது. சால மிக ஒருபொருட் பன்மொழி; மிகுதி குறித்தன.

     தீமை என - உண்மையில் அது தீமையன்றாயினும் தீமை
என்றுகொண்டு என்று குறிப்பார் என - என்றார். அறிவிக்கவன்றி
அறியா உளங்கள் என்றபடி பின்னரே இறைவன்
அவ(திண்ணனா)ருடைய நிலையிவ்வாறு; அறிநீ என்றருள் செய்து
(806) அவர் செயலைக்காட்டக் காண்பாராதலின் இப்போது
அதனைத் தீமை என எண்ணி என்க.

     ஆகமம் செப்பிய விதியால் எனமாற்றுக. இறைவன்
செப்பிய ஆகம விதி என்றுரைப்பினு மமையும். ஆம்முறையில் -
ஆகும் முறை. ஆம் - பொருந்திய தீமை நீங்கிப் பவித்திரம்
ஆகும் முறையிலும், இறைவனுக்கு உகந்ததாக ஆகும் முறையிலும்.
அருச்சனை இங்குப் பவித்திரமாஞ் செயல் - திருமஞ்சனம் -
பூச்சூட்டல் - அமுதூட்டல் - துதிமந்திரம் சொல்லுதல்
முதலியனவாகப் பூசனையின் எல்லா அங்கங்களையும் உள்ளடக்கிப்
பூசைக்குப் பொதுப் பெயராய் நின்றது. "வருமந் நெறியே யர்ச்சனை
செய்தருளி", "மண்டு காதீ லருச்சனையின் வைத்தார் மற்றொன்
றறிந்திலரால்" என்ற சண்டீசர் புராண (37-49)த்தில் அருச்சனை
திருமஞ்சனம் என்ற பொருளில் வந்தது காண்க.
ஆளுடையபிள்ளையார் புராணத்தில் "அருச்சனை வழிபாடு" (821),
"வீழ்புனலாவது, நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால் (822)
என்றுதும் காண்க.

     அந்நெறியில்- ஆகமங்களில் விதித்தவாறு விதி
விலக்குக்களை அறிந்து அவற்றின்படி ஒழுகும் அந்த நெறி. அகரம்
பண்டறிசுட்டு. சிவகோசரியார் பூசையினையே நாணன்பாற் கேட்டுத்
"திண்ணனார், திருக்காளத்தி நாயனார்க் கினிய செய்கை எண்ணிய
இவை கொலாமென்று இது கடைப்பிடித்" (759) தொழுகினாராதலின்
மேற்பாட்டில்அவர் பூசையினையும் அந்நெறியில் ஒழுகுவார்
என்றார். ஆண்டுரைத்தவையும் காண்க. நெறி - முறை. 152